Monday, December 10, 2012

Creative thoughts


மனம்

*மனம் என்பது ஒரு மாயவலை அதில் சிக்கிக் கொண்டால் தண்டனை ஆயுள் வரை .பிறந்தவுடன் எவரும் மனதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருப்பதில்லை .இதனால் மனதின் தன்னிச்சைப் போக்கு முதலில் தூண்டப்பட்டு விடுகிறது .இதை உணர்ந்து தடையை ஏற்படுத்திக் கொள்பவர்கள் மாய வலையில் சிக்கித் தவிப்பதைத் தவிர்த்துக் கொள்கின்றார்கள் தடையில்லாத சூழலை வளர்த்துக் கொள்பவர்கள் துயருறுகின்றார்கள் .

*வேண்டாத விதை முளைத்துச் செடியாக இருக்கும்  போது  அதைப் பிடுங்கி எறிவது சுலபம் .மரமாக வளர்ந்த பின் அதை அகற்றுவது அவ்வளவு எளிதில்லை .மனம் என்ற நிலத்தில் வளரும் தேவையில்லாத எண்ணங்களின் நிலையும் இது தான். மனதில் தோன்றும் விகாரங்களை இளமைக்காலத்திலேயே அழித்துவிட வேண்டும் .இல்லையென்றால் வாழ்கையும் விகாரமாகிவிடும் .

*மனமிருந்தால் வழிபிறக்கும் என்பர் பெரியோர் .மாற்றங்கள் நம் மனதில் தானே ஒழிய பிறர் கையிலோ அல்லது கடவுளிடத்திலோ இல்லை.

*நமக்கிருக்கும் ஒரே எதிரி நாம்தான் என்பதையாரும் ஒப்புக் கொள்வதே இல்லை. ஏனெனில் நமக்கு எதிரிகள் பிறர் தான் என்பதில் உறுதியான நம்பிக்கையை அதற்கு முன்பாகவே வளர்த்துக் கொண்டு விட்டோம் .

*உண்மைகளில் விட பொய்களில் மனம் அதிகம் மயங்குகிறது.அதனால் நேர்மையான வழி முறைகளைக் காட்டிலும் தவறான போக்குகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றன .

*குறைவை ஒரு குறையென நினைக்கத் தெரிந்தவர்கள் எவரும் மிகையும் ஒரு குறையேயென நினைப்பதில்லை.  

*தனக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதி செய்து கொண்டு விட்டால் வன்மையான கருத்துகளையும் ,கடுமையான செயல்களையும் தாராளமாக ஒப்புக் கொண்டு விடலாம்

*எதிரி என்று உண்மையிலேயே யாரேனும் இருப்பதாக நீ நினைத்தால் அது உன் மனமாகத்தான் இருக்க முடியும்

*மனம் நினைப்பதையெல்லாம் அடைய விரும்பிச் செயல்பட்டால் அது தவறாக முடியும் .தன்னைப் போல பிறரும் அப்படிச் செய்ய முற்படும் போது தான் பெரும்பாலானோர்களுக்கு அவர்களுடைய தவறான விருப்பங்களே தெரிய வருகின்றன.

*மனம் ஒன்றைப் பலவாக்கும் ,அறிவு பலவற்றை ஒன்றாக்கும் .முன்னது எண்ணங்களைச் சிதறவிட்டு விளையாடும் ,பின்னது எண்ணங்களை ஒன்று குவித்து சிந்திக்க வைக்கும் .

*மண்ணில் மரத்தையும் மனதில் மனித நேயத்தையும் நட்டு வளர்த்து வா .அதுதான் மனித இனத்தின் நலங் காக்கும் .சாகாத சமுதாயம் காலமெல்லாம் உனக்கு நன்றி கூறும் .

*ஒன்றும் இல்லாதிருப்பதே ஒப்பற்ற இன்பம் என்ற உண்மையை மனம் பொதுவாக ஒப்புக் கொள்வதில்லை .இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருந்த இன்பம் எதோ ஒன்று கைக்கு வந்த பிறகு காணாமற் போய்விடுகிறது

*மனம் சலனப்படுதல் எனது கருத்தைத் உறுதியாக ஏற்றுக் ஏற்றுக் கொள்ளாததின் பின் விளைவாகும் .ஒரு கருத்து தனக்கு அனுகூலமாக இருக்கும் போது ஒரு நிலையிலும் அதே கருத்து பாதகமாக இருக்கும் போது வேறு நிலையிலும் இருப்பதை விரும்புவதால் ,மனம்  சலனப்படுவதை ஒருவராலும் கட்டுப் படுத்த முடிவதில்லை .

*மனம் ஐம்பொறி வாயிலாகப் பெற்ற விஷயங்களை அசை போட்டுக் கொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் நிகழ்காலத்தை நினைக்கும் ,அடுத்த நொடியில் ஒரு யுகம் தாண்டி சிந்திக்கும் .கல் தோன்றி மண் தோன்றா காலத்திக்கு பின்னோக்கிச் செல்லும் ,சட்டென ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாண்டி எதிர்காலத்தில் நடமாடும்.காலத்தையும் சரி தொலைவையும் சரி நீட்டியும் ,சுருக்கியும் கற்பனை செய்வதில் மனதை மிஞ்ச இயற்கையால் கூட முடியாது .

*சாதனையாளராக வரவேண்டும் என்பது நல்லது .ஆனால் முக்கிய மானதில்லை .மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பது தான் மிக மிக முக்கியமானது ..அத்துமீறல்களைச் செய்து விட்டு சாதனையாளன் என்று தம்பட்டம் அடிப்பது மடமை .அதனால் யாருக்கும் யாதொரு பயனுமில்லை.மாறாக சமுதாயத்திற்கு பதிப்பே .ஏனெனில் சாதனையாளனைப் பார்த்துப் பின்பற்றுபவர்களை விட அத்துமீறல்களைக் கண்டு அதைப் பின்பற்றுபவர்களே அதிகம்.பிறர் சாதனைகளைப் பார்த்து தானும் அப்படிச் சாதனை செய்ய வேண்டும் ஆசைப் படுவார்களே ஒழிய முனைந்து செயல்பட முயற்சி செய்ய மாட்டார்கள்.நல்ல செயல்களை வெறுப்போடு விரும்புவார்கள் ,தீய செயல்களை விருப்பத்தோடு வெறுப்பார்கள் .நாம் எது நலிவடைய வேண்டும் என்று நினைத்து முயல்கின்றோமோ அது எல்லோராலும் நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்குக் காரணம் மக்களின் இப்படிப்பட்ட மன நிலைதான்.

*உலகம் இன்றைக்குப் பலவாகிக் கொண்டே போகிறது என்றால் அதற்கு மனிதர்கள் மேலும் மேலும் மனத்தால் மட்டுமே ஆளப்பட்டு வருகின்றார்கள் என்று பொருள் .அறிவைப் புறக்கணித்து மனதின் ஆளுகைக்கு உட்படுவதால் ஏற்படும் பின்விளைவுகளில் இதுவும் ஒன்று .

*எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே யிருக்கும் மனதினால் எளியவை கூட சாத்தியமற்றுப் போகின்றன .இதை நாம் தெரிந்து வைத்திருகின்றோம் என்றாலும் கட்டுப்பாடுடன் கூடிய அக்கறை காட்டுவதில்லை என்பதால் இந்நிலையில் மாற்றம் ஏற்படுவதற்கும் வழியில்லாது போகிறது.

*மனக் கட்டுப்பாடு உறுதியாக இல்லாவிட்டால் முன்னேற்ற நடவடிக்கைகள் ஒரு பயனும் தருவதில்லை.

*மனம் ஒரு குரங்கு .அதை ஒரே இடத்தில் இருக்குமாறு செய்வது மிகவும் கடினம் .அதைச் செய்துவிட்டால் உங்களை வேறொருவர் மிஞ்சுவது கடினம் எப்போதும் முன் மாதிரிகளை த் தேடிக் கொள்கிற மனம் ஒருவருடைய கற்பனையையும் படை ப் பாற்றலையும் மட்டுப்படுத்தி விடுகின்றது விடுகின்றது .முதலில் நம்மை யார் என்று உலகிற்குத் தெரியப் படுத்தி விட்டால் முன் மாதிரிகளைத் தேட வேண்டிய அவசியம் ஏற்படாது .

* மனம் சுதந்திரமாக இருக்கும் போதுதான் நமக்கு எது உண்மையிலேயே நன்மை தரக்கூடியது என்பதைச் சரியாகத் தேர்வு செய்யும் பக்குவத்தைப் பெறுகிறோம்.
ண்ணத்தில் பூத்த வண்ணப் பூக்கள்

No comments:

Post a Comment