வேதித் தனிமங்கள் -மாங்கனீஸ் -கண்டுபிடிப்பு
பெரும்பாலான தனிமங்களைப் போல மாங்கனீசும் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை .மாங்கனீ சின் முக்கியத் தாது பைரோலுசைட் (Pyrolusite ) ஆகும் .இத் தாது உலகில் பரவலாகக் காணப்பட்டாலும் ,இந்தியா ,பிரேசில் ஸ்பெயின் ,ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது..உலகில் மாங்கனீஸ் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமை வரிசையில் இது 15 வது இடத்தில் உள்ளது .உருகிய கண்ணாடிக் குழம்பில் பைரோலுசைட்டை இடும் போது ,அது கண்ணாடிக்கு நிறம் கொடுப்பதற்குப் பதிலாக தூய்மைப் படுத்தி தெளிவூட்டியது .இதனால் பைரோ லுசைட்டை கண்ணாடியின் சோப் என்று பெயரிட்டு அழைத்தனர் .இந்த அடைமொழியே 'மாங்கனீஸ்' என்ற சொல் பிறக்கக் காரணமானது .கிரேக்க மொழியில் மாங்கனீஸ் என்றால் தூய்மையூட்டி என்று பொருள் படும்.1774 ல் ஸ்வீடன் நாட்டு வேதியியலாரான கான் (Gahn ) என்பார் மாங்கனீஸ் உலோகத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார் இதன் பிறகு பல புதிய உத்திகள் மூலம் தூய மாங்கனீஸ் சைப் பிரித்தெடுத்தனர்.மாங்கனோசிக் ஆக்சைடை மின் உலையில் கார்பன் மூலம் ஆக்சிஜனிறக்க வினைக்கு உட்படுத்தியோ, அலுமினியத்துடன் மீ வெப்பநிலை (super heated) ஊட்டியோ பெறலாம். மாங்கனீஸ் குளோரைடுக் கரைசலை மின்னாற் பகு பொருளாக்கி பாதரசத்தை எதிர்மின் வாயாகக் கொண்டு பகுப்பைச் செய்து பின்னர் உயர் வெப்பநிலையில்,வெற்றிட வெளியில் அப்பாதரசத்தை வடிகட்டி தூய மாங்கனீஸ் உலோகத்தைப் பெறலாம்.
பண்புகள்
இது மெல்லிய செந்நிறத்துடன் கூடிய சாம்பல் நிறங் கொண்டது .உடைந்து நொறுக்க முடியாத அளவிற்கு உறுதியானது .தூய உலோகமாக இல்லாவிட்டால் இது உடனடியாக ஆக்சிஜனேற்ற வினைக்கு உள்ளாகிறது .குளோரின் ,கந்தகம் போன்ற தனிமங்களால் பாதிக்கப்படுகிறது .இதைச் சூடு படுத்தும் போது இது நைட்ரஜன் ,போரான் ,கார்பன் போன்ற வற்றுடன் நேரடியாக இணைந்து கொள்கிறது.தூய்மையற்ற உலோகம் நீரைப் பகுத்து ஹைட்ரஜனைத் தருகிறது.இது பெரும்பாலும் உறுதிமிக்க எஃகு மற்றும் கலப்பு உலோகங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது..
இதன் வேதி க் குறியீடு Mn ஆகும் .இதன் அணுவெண் 25,அணு நிறை 54.94, அடர்த்தி 7200 கிகி / கமீ,உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 1518 K, 2373 K ஆகும்.
பயன்கள்
தூய நைட்ரஜன் வளிமத்தைப் பெற நீண்ட காலமாக பல்லாடியம் மற்றும் பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களை வினையூக்கியாகப் பயன்படுத்தி வந்தனர்.தற்பொழுது இதற்கு விலை மலிவான மாங்கனீஸ் பயன் தருகிறது.
எஃகைக் கடினப் படுத்தப் பயன் படும் உலோகங்களுள் முதலிடம் வகிப்பது மாங்கனீஸ் தா ன் .இந்த மாங்கனீஸ் எஃகு தேய் மானத்திற்குச் சிறிதும் ஆளாகாததால் அதிக அழுத்தம் ,உராய்வு போன்றவற்றால் தேய்மானத்திற்கு உள்ளாகும் பல பொருட்களை ,குறிப்பாக தண்டவாளங்கள்,கன ரக வண்டிகளில் அழுத்தி நொறுக்கும் தாடைகள் ,தொடர்ந்து இடைவிடாது இயங்கும் இயந்திர உறுப்புகள்,பற்சக்கரத் தொகுதிகள்,சக்கரங்கள்,அச்சுத் தண்டுகள் போன்றவ ற்றைச் செய்யப் பயன் படுகின்றது.இத்தைய எஃகால் செய்யப்பட்ட பொருட்கள் காலம் செல்லச் செல்லக் கூடுதலான கடினத் தன்மையைப் பெறுகின்றன.
மாங்கனீஸ் ஓர் எதிர் ஆக்ஸினேற்ற ஊக்கி (deoxidising agent) எஃகையும் தூய்மையூட்டுகிறது.கார்பன் செறிவு குறைவாக உள்ள எஃகில் மாங்கனீஸைப் பயன்படுத்தும் போது ,அது கம்பியாக நீட்டக் கூடிய தன்மையையும் ,வளையக் கூடிய தனமையையும் அதிகம் பெறுகிறது. உயர் வேகப் பயன்பாட்டிற்கு உகந்த எஃகைத் தருவது மாங்கனீஸ் .மாங்கனீஸ் எஃகு பாதுகாப்புப் பெட்டகங்கள் ,சுழல் வட்டுக்கள் (ball bearings )போன்றவை செய்யப் பயன்படுகிறது .
இரும்பில் கந்தகத்தைச் சேர்க்கும் போது ,அது மாங்கனீஸ் சல்பைடாக இருந்தால் பாதிப்பில்லை..ஆனால் இரும்பு சல்பைடாக இருந்தால்,அதன் தாழ்ந்த உருகு நிலையால் பாதிப்பை ஏற்படுத்தலாம் .எஃகில் தேவையில்லாத கந்தகத்தை மாங்கனீஸ் நீக்கி விடுகிறது. மாங்கனீஸ் எஃகோடு சிறிதளவு செம்பைச் சேர்க்கும் போது அதன் பட்டறைப் பயன் பல மடங்கு உயர்கின்றது .
மாங்கனின் என்பது செம்பு ,மாங்கனீஸ், நிக்கல் இவை மூன்றும் 83:13:4 என்று சேர்ந்த ஒரு கலப்பு உலோகமாகும் .இதன் மின்தடைத் திறன் அதிகமாக இருப்பதுடன்,அது வெப்ப நிலை மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றம் பெறுவதில்லை .இத்தைய பண்பினால் மாங்கனின் மின்னியல் அழுத்த மானிகளில்(electric manometers) பயன்படுகிறது .பல ஆயிரக்கணக்கான வளிமண்டல அழுத்தத்திற்குச் சமமான அழுத்தத்தை இவற்றால் அளவிட முடிகிறது .
மாங்கனீசின் ஒரு கூட்டுப் பொருளான பொட்டசியம் பெர்மாங்கனேட் ,காயங்களுக்கு ஒரு தொற்று நீக்கியாகவும் தொண்டைப் புண்களை ஆற்றவும் பயன்படுகிறது.இது திண்ம மற்றும் நீர்ம நிலைகளில் வலிமையான ஆக்ஸிஜனேற்ற ஊக்கியாகும்.பாஸ்பரஸ் அல்லது கந்தகத்துடன் சேர்ந்து சூடுபடுத்தினால் வெடிக்கிறது.கிளிசரினுடன் சேர்ந்தால் சுடர்விட்டு எரிகின்றது .ஹைட்ரஜன் ,
கார்பன் டை ஆக்சைடு வளிமங்களைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது. மாங்கனீஸ் பொதுவாக சுரப்பு நீர்மங்களின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.குருத்தெலும்புகளின் வளர்ச்சி,தனித்த பகுதி மூலக்கூறுகளினால் (free radicals)திசுக்கள் பாதிப்படையாமல் இருக்கத் துணை செய்யும்
என்சைம்களின் உற்பத்தி,தைராய்டு மற்றும் பாலினச் சுரப்பு நீர்மங்களின் உற்பத்தி கொலஸ்ட்ரால் மற்றும் இன்சுலின் உற்பத்தி போன்றவற்றில் மாங்கனீஸ் பங்களிப்பு உள்ளது .
No comments:
Post a Comment