எண்ணத்தில் பூத்த வண்ணப் பூக்கள்
கடவுள்
*எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் பிறருக்கு இறைப்பவன் இறைவன் .ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொடுப்பவன் பகவன் .என்றைக்கும் தேயாதவன் தெய்வம்
*முடிவில்லாத ஆசைகளை உடையவனுக்கு எவ்வளவு உதவி செய்தாலும் நிறைக்காது . தனக்கு கடவுள் அதிகம் உதவி செய்யவில்லை என்று நினைப்பதற்கு உண்மையான காரணம் இதுதான்
*மனித நேயத்தை வளர்க்க வில்லை யென்றால் கடவுளும்,கடவுள் பக்தியும் வேண்டாதவைகளே
*மனித நேயம் இல்லாத பக்தி பயனில்லாதது .உண்மையில் மனித நேயத்தைப் புதுப்பிக்கவே கடவுள் பக்தி வேண்டப்பட்டது .ஆனால் மனித மனம் அதையும் சுய நலத்திற்காகவே பயன்படுத்திக் கொள்ள ஆர்வப்படுகிறது
*சம்பிரதாயமாகக் கோயிலுக்குப் போதல், கடவுளை வணங்குதல் போன்றவை புண்ணியம் (பலன்) தருவதில்லை.அவையெல்லாம் புண்ணியம் தேடுவதற்கான மனப்பக்குவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
*மனதில் இறைவன் தங்கி யிருந்தால் அது இயற்கையைப் போல மிகவும் மென்மையாக இருக்கிறது.அந்த மனதால் செயல்படுகின்ற மனிதன் எப்போதும் தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயனுள்ள செயல்களில் மட்டுமே ஈடுபடுகின்றான்.
*கடவுளை மனதிற்கு வெளியில் தேடுபவர்கள் கோயிலுக்குப் போய் வணங்குகின்றார்கள்,உள்ளுக்குள்ளே தேடுபவர்கள் தியானம் செய்கின்றார்கள்.பயிற்சி வேறானாலும் நோக்கம் ஒன்றுதான்.தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு வழிமுறையே தியானம்.
*கடவுளை மிகச் சிறந்த முதலாளி என்றாலும் ,மிகச் சிறந்த தொழிலாளி என்றாலும் பொருந்தும்.தனிவுடமையும் ,பொதுவுடமையும் ஒன்றாய்க் காணப்படுவது கடவுளிடத்தில் மட்டுமே .
*கடவுள் இருக்கின்றார் ஓர் உருவமாக இல்லை,பல அருவங்களாக ஓரிடத்தில் மட்டுமில்லை,பிரபஞ்சவெளி எங்கும் ,ஒரு காலத்தில் மட்டும் இல்லை,எல்லாக்காலங்களிலும்.மொத்தத்தில் மனிதன் எப்படிக் கற்பனை செய்திருக்கின்றானோ அப்படிக் கடவுள் இல்லை. கடவுள் என்பது இயற்கை .இயற்கையின் எல்லா அம்சங்களும் கடவுள் தான் .இதில் உயிருள்ளவை ,உயிரற்றவை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படிப் பார்த்தால் கல்லும் கடவுள் தான்,கடலும் கடவுள்தான்,மண்ணும் கடவுள்தான்,மனிதனும் கடவுள் தான். ஆம், ஒவ்வொரு மனிதனும் தான்.கடவுள் மீது நம்பிக்கை என்பது ஒரு மனிதன் தன் மீது வைக்கும் நம்பிக்கைதான்.
*உன் மீது உனக்குச் சிறிதும் நம்பிக்கையில்லாமல் பிறர் மீது ,அது கடவுளே யானாலும் முழு நம்பிக்கை கொள்வது என்பது முட்டாள்தனமானது.அது ஆன்மிகம் என்ற பெயரில் மனித முயற்சிகளை முடக்கி வைக்கும்
*கடவுளிடம் போய் எதையாவது கேட்டுக் கொண்டிருக்காதே .ஏனெனில் அதையெல்லாம் பெறுவதற்கு என்னவெல்லாம் தேவையோ எல்லா வற்றையும் உனக்கு ஏற்க்கனவே அளித்து விட்டார்
*நமக்கு வேண்டியதை வேண்டியபொழுது தருபவன் கடவுள் இல்லை. நமக்கு வேண்டியதை வேண்டாமலேயே தருபவன் தான் கடவுள்
*கடவுள் நம்பிக்கை என்பது சமுதாய வீதியில் வலம் வந்து நிலைக்குத்தும் வரை வாழ்க்கை என்ற தேர் சாய்ந்து விடாமல் காக்கும் அச்சாணி போன்றது
*நம்மீது நமக்குள்ள நம்பிக்கையை வேரறுத்து விட்டு கடவுள் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது என்பது இயற்கைக்கு முரணானது
*கடவுள் நம்பிக்கை என்பது உள்ளத்திற்கு உயிர்ச்சத்து போன்றது. இது குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ உள்ளம் நலங் குன்றி இயல் வாழ்க்கை பாதிக்கப்படும்.
*கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் உலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும்
*உண்மையில் நாம் எதை வென்றெடுக்க விரும்பினாலும் அது அவரவருடைய ஈடுபாட்டால் மட்டுமே முடியும். கடவுளிடம் வேடுதல் என்பது நமக்கு மாமே இட்டுக் கொள்ளும் கட்டளையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய வேண்டுதல்களைச் செய்து முடிக்க வெளியில் ஆள் தேடுவது என்றைக்கும் முழு நன்மை தராத செயல். இதைப் புரிந்து கொள்ளாதவர்களே இறைவனிடம் போய் எதையாவது கேட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள்
*சமுதாயத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் 'நான் ' என்ற அகந்தையை அகற்றி அது வெறும் மாயை என்பதை உண்மையாக உணர்த்தும் ஒரு மந்திரச் செயலே இறைவணக்கம்.
*இறை வணக்கத்தின் அடிப்படை மனதைத் தூய்மைப்படுத்துவதும், ஒருமுகப்படுத்துவதும்தான் தூய்மைப் படுத்துவதில் பிறர் நலம் பேணலும் ,ஒருமுகப்படுத்துவதில் தன் நலம் காணலும் இலைமறைவு காய் மறைவு.முன்னேறு,முன்னேற்று என்ற அடிப்படையில் இறை வணக்கத்தின் தேவை உள்ளடங்கியிருக்கிறது
*இறைவணக்கம் மனதைச் சுத்தப்படுத்தி விடுவதால் பூக்கும் எண்ணங்களும் கனியும் செயல்களும் தனக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் நன்மை பயப்பனவாக இருக்கும்
*கடவுளை உள்ளேயும் தேடலாம் வெளியேயும் தேடலாம்.உள்ளே தேடுவது எளிது ,ஏனெனில் இருக்குமிடம் சுருக்கம் .வெளியே தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.ஏனெனில் இடம் மிகவும் விசாலமானது..உள்ளே இருக்கும் இருட்டும் ,வெளியே இருக்கும் ஒளியும், கடவுளை வெளியே தேடிக்கொண்டிருக்குமாறு மனிதர்களைத் தவறு செய்யத் தூண்டுகிறது.
*இறைவணக்கத்தின் போது நாம் மேற்கொள்ளும் வேண்டுதல்கள் எல்லாம் மனதின் மௌன ஓசைகள் .அதுவே தனி மனிதனின் தனித் தன்மையை உணர்த்துகின்ற அளவுகோல் .மனிதனின் உண்மைத் தோற்றத்தை வர்ணிக்கின்ற வசனங்கள் .
*இறைவணக்கத்தின் உட்பொருளை அறியாமல் வெறும் சம்பிரதாயமாகச் செய்வோரே இன்றைக்கு மிகுந்து வருகின்றனர் .இன்றைவனக்கத்தின் போது இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதில்லை வேண்டும் ,இன்னும் வேண்டும் என்ற வேண்டுதல்களே அதிகமிருக்கு. அதில் கூட தன்னலச் சிந்தனைகளே அதிகமாக வெளிப்பட்டிருக்கு. பெரும்பாலான மக்களின் வேடுதல்களைப் பாருங்களேன்.மரணமில்லாத வாழ்க்கை,மற்றவனுக்கு எட்டாத அளவில் மகிழ்ச்சி,மகிழ்ச்சிக்குக் காரணமாகும் பொன்னும் பொருளும் பதவியும் பகட்டும்,தன்னோடு கருத்து வேறுபாடு கொள்வோரின் அழிவு-இப்படி மனதிற்குள்ளே ஓயாத ஆசைகளின் ஓசைகள்.
*மனிதர்களின் உதவியின்றி கடவுளால் மனிதர்களுக்கு எதுவுமே செய்ய முடியாது.
No comments:
Post a Comment