Sunday, December 9, 2012

creative thoughts


சமுதாயம்

*சமுதாயத்தில் ஒப்புக் கொள்ள முடியாமல் காணப்படுகின்ற ஏற்றத் தாழ்வுகளே பெரும்பாலான குற்றங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கின்றன.

*இனம்புரியாத ஒரு பாதுகாப்பின்மையில் எப்போதும் சிக்கிக் கொள்ளுமாறான சூழ்நிலைகளை நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டு விடுகின்றோம் இது பிற்பாடே நமக்குத் தெரிய வருகிறது. இதற்குக் காரணம் நம்முடைய வாழ்கையை சமுதாயத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் மேற்கொள்ளும் முயற்ச்சிகளே

*மனிதனின் மேம்பாடு,நிலைப்பாடு இவற்றை விடச் சமுதாயத்தின் மேம்பாடு, நிலைப்பாடு மிகவும் முக்கியமானது ,ஏனெனில் மனிதனைப் போலன்றி சமுதாயம் இறவாத் தன்மை கொண்டது சமுதாயத்தின் மேம்பாடு கருதியே தனி மனிதனின் மேம்பாடு நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

*செய்ய வேண்டிய செயலைச் செய்யாமையாலும் செய்யக் கூடாதன வற்றைச் செய்வதாலும் மக்களால் இச் சமுதாயம் சீர்கெட்டு வருகிறது.

*சமுதாயக் கட்டுப்பாடு என்பது சமுதாயத்திற்குப் பாதுகாப்பு .இன்றைக்குச் சமுதாயம் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. என்றால் அதற்கு நாம் இந்தக் கட்டுப்பாட்டை மீறும் போக்கை அதிகரித்து வருகிறோம் என்பதே உண்மை

*சமுதாயக் கட்டுப்பாட்டை மீறி வருபவர்கள் இன்றைக்கு எண்ணிக்கையால் பெருகிக் கொண்டே வருகின்றார்கள் .இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீறிவருகின்றார்கள் என்று நம்பி பின்பற்றத் துணிவதே ஆகும்

*நாம் செய்யும் ஒரு சில தவறுகளுள் ஒன்று ,நம் கருத்துக்களை பிறர் தாமாக முன் வந்து பின் பற்றுமாறு வைத்துக் கொள்வதை விட ,பிறர் மீது திணித்து விட முயல்கின்றோம் .திணிக்கப்பட்டவை சிந்தையில் சீரணிக்கப்படுவதில்லை அதனால் அவை செயலாக மாறும் போது நிறம் மாறிப் போய் விடுகின்றன

* வலிமையில் மென்மையும் ,மென்மையில் வலிமையையும் இணைந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் சமுதாய வாழ்கை சலனப்படுவதில்லை.சலனப்பட்டாலும் சட்டென சமநிலைக்கு வந்துவிடும் .

*இன்றைக்குச் சமுதாய மேடையில் பல அருவருக்கத் தக்க காட்சிகள் அரங்கேறி வருகின்றன.இதற்குக் காரணம் எல்லோரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் அவற்றை உள்ளூர விரும்புவதுதான். யாருமறியாமல் இரசிப்பதை எல்லோரும் செய்வதால் இந்த அத்து மீறிய அரங்கேற்றங்கள் மிகவும் சாதாரணமாகி வருகின்றன. இன்னும் மோசமான நிலையை எட்டுவதற்கு முன்னால் விழித்துக் கொண்டால் தான் நல்லது .

*சமுதாயத்திலிருந்து மனிதர்கள் எவரும் தங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது ஏனெனில் ஒன்றின் புகழும் இகலும் மற்றதில் தாக்கத்தை  ஏற்படுத்தும்

 *சமச் சீரான சமுதாயம் அனைவருக்கும் இறுதிவரை பாதுகாப்பு .

*எவரும் நூற்றுக்கு நூறு நல்லவர்களும் இல்லை,நூற்றுக்கு நூறு கெட்டவர்களும் இல்லை.நல்லவர்களில் கெட்டவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள்.இவர்களின் இயல்புகள் வெளிப்படையாகத் தெரிவதால் இவர்கள் இருவரும் சமுதாயத்திற்கு அவ்வளவு ஆபத்தானவர்கள் இல்லை. ஆனால் நல்லவன் போல நடிக்கும் கெட்டவன் மிகவும் ஆபத்தானவன் .தனக்கு வாரிசாக உலகில் பலரை உருவாக்கி விட்டுச் செல்வதால் இந்த ஆபத்து பெருகிக் கொண்டே செல்கிறது .

No comments:

Post a Comment