Sunday, March 17, 2013


சொன்னதும் சொல்லாததும் -17

2012 ல் இலக்கியத்திற்காக நோபெல் பரிசு பெற்றவர் சீன நாட்டின் எழுத்தாளர் மொயன் (Mo Yan ).இதற்கு சீன மொழியில் ' பேசாதே 'என்று பொருள் .இவருடைய உண்மையான பெயர் Guan Moye.இவர் எழுதிய Red Sorghum ' என்ற நாவல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசைப் பெற்றுத் தந்தது. 1955 ல் பிறந்த இவர் தனது 57 வது வயதில் நோபெல் பரிசை வென்றார். சிறுவயதில் நாகரீக சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியை விட்டு விலகி பணியில் சேர்ந்தார் . பின்னர் மக்கள் விடுதலை இராணுவத்தில் 1976 ல் சேர்ந்தார்.அப்போது இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது .அப்போதிலிருந்தே தன் கருத்துக்களைப் பதிவு செய்து  மக்களிடம் கொண்டு சென்றார்.சமுதாய அவலங்களையும் ,யதார்த்தமான உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்றார்.அவருடைய உள்ளார்ந்த இந்த விருப்பத்தினால் இலக்கிய உலகில் மகத்தான வரவேற்பைப் பெற்றார்.

எழுத்தாளர்கள் எல்லோரும் தன் எண்ணங்களை மனதில் புதைத்து வைத்து , அதை அவர்கள் தம் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தி சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை உள்ளவர்கள் என்பதைத் தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டினார் .நாவல்கள் வெறும் பொழுது போக்கிற்காகவும் மன மகிழ்ச்சிக்காகவும் இல்லாமல் மக்களின் சிந்தனைகளைத் தூண்டி சமுதாயத்தை வளப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் என்று இவர் வாதிடுவார் .இதற்கு எழுத்தாளர்கள் சுதந்திரமான எண்ணங்களோடு சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று சொல்வார் .”சிலர் என்னைக் கட்டாயப்படுத்தி சிலவற்றைச் செய்யச் சொன்னால் நான் அதை மறுத்துவிடுவேன்” என்று இவர் சொல்லும் போது அவருடைய உறுதிப்பாடு தெரிகின்றது .சமுதாய அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது .எவையெல்லாம் மறைக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றனவோ அவையெல்லாம் அனுமதிக்கப் பட்ட செயல்களாக கருதப்பட்டு மக்களால் அதிகம் பின்பற்றப்படும் வாய்ப்பைப் பெறும் என்பதால் சமுதாய அவலங்களை காட்டுவது மக்கள் ஊடகங்களின் ஒரு கடமையாக இருக்கவேண்டும் .இதற்கு ஒருவர் எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, சமுதாய அவலங்களுக்கு எதிர்ப்பாளியாக இருந்தாலே போதும் .

No comments:

Post a Comment