Friday, March 15, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -ஆர்செனிக் -கண்டுபிடிப்பு

முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களுள் ஒன்று ஆர்செனிக். 1250 ல் அல்பர்டஸ் மாக்னஸ் (Albertus magnus) என்பாரால் கண்டறியப்பட்டதாகச் சரித்திரக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன As2S3,As4S4 போன்ற ஆர்செனிக் சல்பைடுகளை கிரேக்கர்களும் ரோமானியர்களும் நன்கு அறிந்திருந்தனர் .இரும்பு கந்தகத்துடன் சேர்ந்து மிஸ்பிக்கல் (Mispickel) அல்லது ஆர்செனோ பைரைட்ஸ்(FeAsS) என்ற முக்கியத் தாதுவாகக் கிடைக்கின்றது .மிகச் சிறிய அளவில் இயற்கையில் தனித்தும் கிடைக்கும் தனிமங்களுள் ஆர்செனிக்கும் ஒன்றாகும் .

உலோகத்திற்கும் அலோகத்திற்கும் இடைநிலையில் இருக்கும் ஆர்செனிக் இலத்தீன் மொழியிலிருந்து 'தெளிவற்ற’ என்ற பொருள்படும்ஆர்செனிகம் 'என்ற பெயரைத் தத்தெடுத்துக் கொண்டது .நைட்ரஜன் ,பாஸ்பரஸ் போன்ற தனிமங்களோடு சேர்மங்களை ஏற்படுத்திக் கொண்டு இயற்கையில் பலவிடங்களில் காணக்கிடைக்கின்றது .இதை எளிதாகப் பிரித்தெடுக்க முடிகின்றது .

பண்புகள்

இதன் அணுவெண் 33 ,அணு நிறை 74.9216 .இதன் அடர்த்தி 5730 கிகி /கமீ .முட்டை ஓடுகளுடன் ஆர்செனிக்கை கால்சியனேற்றம் செய்து உலோக அர்செனிக்கைப் பிரித்தெடுக்கும் வழிமுறை பழங் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது .உலோக ஆர்செனிக் பாஸ்பரஸ் போன்று இரு வேறுபட்ட திண்ம நிலைகளைக் கொண்டிருக்கின்றது .மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங் கொண்டு அவை முறையே 1970,5730 கிகி /கமீ அடர்த்தி பெற்றுள்ளன .எஃகு போன்று சாம்பல் நிறமுடைய ஆர்செனிக் மிக எளிதில் உடைந்து நோருங்கிவிடுகின்றது .இதைச் சூடுபடுத்த ஆக்சிஜனேற்றம் பெற்று உருகாமலேயே ஆவியாகின்றது .இதன் மணம் வெள்ளைப்பூண்டை (Garlic ) ஒத்திருக்கின்றது .நிலைப்புத் தன்மை மிக்க இது கார்பன்டை சல்பைடில் கரைவதில்லை .ஆர்செனிக் ஆவியை தீடிரென்று குளிர்விக்கும் போது மஞ்சள் நிறங் கொண்ட  நிலையற்ற ஆல்பா ஆர்செனிக் கிடைக்கின்றது .இது கார்பன்டை சல்பைடில் கரைகின்றது .காற்று வெளியில் நின்றொளிர் கின்றது .(Phosphorescent ) .இது சற்றேறக் குறைய மஞ்சள் பாஸ்பரஸ்சை ஒத்திருக்கின்றது .ஹைட்ரஜன் வளிமத்தைச் செலுத்தி சாம்பல் நிற ஆர்செனிக் ஆவியை உறைபடியச் செய்து மூன்றாவது வகையான கருப்பு ஆர்செனிக்கும் வேற்றுருவாகும் .சாம்பல் நிற ஆர்செனிக் உருகு நிலை 1088 K ஆவி உறைபடிவு (sublimation ) 889.2 K ஆகும்

பயன்கள்

காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெறுவதால் இதன் உலோகப் பொலிவு மெதுவாக மங்கிப்போகின்றது .ஆர்செனிக் மற்றும் இதன் பெரும்பாலான கூட்டுப் பொருட்கள் நச்சுத் தன்மை கொண்டுள்ளன .பாரிஸ் கிரீன் ,கல்சியம் ஆர்செனேட்,ஈய ஆர்செனேட் போன்ற கூட்டுப் பொருட்கள் வேளாண் துறையில் பூச்சி கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்றன

ஆர்செனியஸ் ஆக்சைடை உற்பத்தி செய்து ஆர்செனிக் காற்றில் நீல நிற சுவாலையுடன் எரிகின்றது .பல உலோகங்களுடனும் ஹாலஜன் மற்றும் கந்தகத்துடனும் நேரடியாக இணைகின்றது .அமிலங்களில் கரைகின்றது. வெண்கலம் போல் நிறமூட்டுவதற்கும் வாண வேடிக்கைக்கான வெடி  பொருள் உற்பத்தி முறையிலும் ,ஈயக் குண்டுகளை உறுதியூட்டுவதற்கும்,அதன் கோள வடிவத்தை மேம்படுத்துவதற்கும் ஆர்செனிக் பயன் தருகின்றது

புறவியலான (Extrinsic ) எதிர்வகை (N -type ) குறைக் கடத்திகளை உருவாக்க எலெக்ட்ரான் புறக்கூட்டில் 5 எலெக்ட்ரான்கள் கொண்ட ஆர்செனிக் பயன்படுகின்றது. காலியம் ஆர்செனைடு சேர்மக் குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப் பட்டு ஒளி உமிழ் டையோடாக நன்மை தருகின்றது .இது கணினி ,விளம்பரத் தட்டிகள் , அலங்கார விளக்குகள் ,சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சமிக்கை ஒளித் தம்பங்களில் பயன்படுகின்றது.வெவ்வேறு நிற ஒளிகளை உமிழக்கூடிய ஒளி உமிழ் டையோடுகளை உருவாக்க காலியம் ஆர்சினைடு ஒரு மூலப் பொருளாகும் .கால்சியம் ஆர்சினைடுடன் சிலிகானைச் சேர்க்க அகச் சிவப்பு ஒளியும் (அலை நீளம் 8676 A ) காலியம் ஆர்சினைடு பாச்பைடுடன் நைட்ரஜனை வெவ்வேறு விகிதத்தில் வேற்றுப் பொருளாகச் சேர்க்க மஞ்சள் நிற ஒளியும் ஆரஞ்சு நிற ஒளியும் (அலைநீளம் 5891 A ,6320 A ) பெற முடிகின்றது .

ஒளி உமிழ் டியோடில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை ஒரு குறைக்கடத்தி லேசராகப் பயன்படுத்தலாம் .ஒற்றைச் சந்திப்புடைய குறைக்கடத்தி லேசரில் உற்பத்திச் செலவு மிகவும் குறைவு என்றாலும் இதன் வெளியீட்டுத் திறனின் அளவும் மிகவும் குறைவாக உள்ளது .மேலும் வெளியீடு தொடர்ச்சியின்றி சிறு சிறு கூறுகளாக வெளிவருகின்றது .சில்லுகளைக் கொண்டு பல அடுக்குகளை ஏற்படுத்தி வேற்றுப் பொருளின் சேர்க்கையை வேறுபடுத்தி பல சந்திப்புக்களை ஏற்படுத்தி பல சந்திப்பு குறைக் கடத்தி லேசரால் இதை ஓரளவு ஈடு செய்யலாம் .இவ்வகை லேசர்கள் ஒளி இழை வழிச் செய்திப் பரிமாற்றத்தில் பெரிதும் பயன்படுகின்றது .லேசர் அச்சிடும் இயந்திரம் ,கணினி தட்டுகளில் பதிவு மற்றும் பயன்பாடுகளிலும் இந்த வகை லேசர் நன்மை அளிக்கின்றது .

ஆர்செனிக் கூட்டுப் பொருட்களின் பயன்பாடு

ஆர்சின் (Arsine) என்பது அமோனியா ,பாஸ்பீன் போன்ற வளிமங்களை ஒத்தது .நிறமற்ற வெள்ளைப்பூண்டின் மணங் கொண்ட இந்த வளிமம் நச்சுத தன்மை கொண்டது .ஆர்செனிக் நஞ்சு கலந்த பொருட்களை ஆராய்வதற்கும் இந்த ஆர்சின் வளிமம் பயன்படுகின்றது .புதிய ஹைட்ரஜனை ஐயப்படும் பொருளின் கரைசல் வழிச் செலுத்த அதில் ஆர்செனிக் கலந்திருந்தால் ,ஆர்சின் வளிமம் உற்பத்தியாகி சுடரொளியில் நீல நிறம் தரும். இதை மார்ஷ் சோதனை என்பர்.

ஆர்செனியஸ் ஆக்சைடு நஞ்சானது .பழங் காலத்தில் இந்த நஞ்சு புழக்கத்தில் இருந்தது. புதிதாக உற்பத்தி செய்யப்படும் பெரிக் ஹைட்ராக்சைடு ஆர்செனிக் நஞ்சுக்கு மாற்று மருந்தாகும் .மிகச் சிறிய அளவில் இந்த நஞ்சை எடுத்துக்கொண்டால் தோளின் நிறம் வெண்மை யூட்டப்படுகின்றது என்பதால் ,இதை அழகு நிலையங்களில்

பயன்படுத்துகின்றார்கள் .எலிகளைக் கொல்வதற்கும் கண்ணாடி ,வான வேடிக்கைக்கான வெடி பொருள் உற்பத்திக்கும் இதைப் பயன்படுத்துகின்றார்கள்.

No comments:

Post a Comment