Friday, March 1, 2013

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்

பெரும்பாலான உலக நாடுகளின் முன்னேற்றத்தை ஒப்பிடும் போது இந்தியாவின் முன்னேற்றம் ஓர் உறுதியில்லா நிலையில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும் .நம்முடைய முன்னேற்றம் அரசியல் வாதிகள் உச்சரிக்கும் வார்த்தைகளில் மட்டுமே இருக்கின்றது .நிஜ உலகில் வெறும் மாயத் தோற்றம் போலத் தோன்றுகிறது .முன்னேற்றம் என்பது லாட்டரியில் முதல் பரிசு விழுந்தது போலத் திடீரென்று வந்துவிடுவதில்லை .மக்களுக்கு நம்பிக்கை தருமாறு அதன் முன்னறிகுறிகள் இல்லாத போது முன்னேற்றம்  வெறும் பேச்சுப் பொருளாகமட்டுமே இருக்கும்.பொதுவாக முன்னேற்றம் வரும் முன்னே அதன் அறிகுறிகள் மக்களுக்குத் தென்படும் .ஒரு சங்கிலித் தொடர் போல ஒவ்வொரு துறையாக எல்லாத் துறைகளிலும் குறிப்பிடும்படியான ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் நம்பிக்கையை மனதில் ஏற்படுத்தும் போது அது மக்கள் இயக்கமாகவும் மாறும் .முன்னேற்ற நடவடிக்கைகள் யாவும் அரசின் மறைமுக இயக்கமாக இருப்பதால் அவை மக்களைச் சென்றடைவதும் இல்லை,சிந்தைனையைத் தீண்டுவதும் இல்லை.ஊழல் நடந்து முடியும் வரை ஏதும் நடக்காதது போல இருப்பார்கள்.ஒன்றும் தெரியாதவர்கள் போல அது தெரியவரும் போது மறுப்பார்கள் .யார் யாரோ அவர்களுக்குத் தெரியாமல் செய்து விட்டதாக வாதிடுவார்கள்.ஊழல் செய்வதற்கான வாய்ப்பு இருக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமையும் உண்டு தாராளமாய் நிதி அனுமதியும் உண்டு.நம் முன்னேற்றத்திற்கு முதல் தடை அங்கேயே தொடங்கி விடுகின்றது. டி எஸ் பி ,மற்றும் டாக்டர் ஒரு கொலையை தற்கொலையாக மாற்ற முயன்றனர் -பரவி வரும் பாலியல் வன்கொடுமை - கோயில்,வங்கி நகைக் கடைகளில் கொள்ளை போன்ற இன்றையச் செய்திகள்- இப்படி ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில் வரும் செய்திகள் நம்முடைய பின்னேற்றத்தைப் படம் பிடித்துக் காட்டும்போது முன்னேற்றம் வெறும் நிழலாகத்தான் காட்சியளிக்கின்றது. ஊழலைத் தடுக்க மக்களே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.மக்கள் விழிப்புணர்வோடுதான் இருக்கின்றார்கள் ஆனால் வலிமையான எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாததால் தங்களுடைய எதிர்ப்பை வெறும் சலசலப்போடு முடித்துக் கொண்டு விடுகின்றார்கள் . ஒரு சிலர் மட்டுமின்றி ஒட்டு மொத்த நாடே முன்னேற வேண்டும் என்பது எல்லோருடைய உண்மையான ,பொதுவான விருப்பமாக இருந்தால் ,இன்னும் இப்போது இருக்கும் அரசியல் வாதிகளை நம்புவதில் ஒரு பயனும் விளையப் போவதில்லை .அவர்களிடம் தன்னலச் சிந்தனைகளே மேலோங்கி இருக்கின்றது.தலைவர்களாக இருக்கும் தகுதிப்பாடும் இல்லை. எனவே மக்களே தங்களை ஆளப்போகும் நன்மக்களை இனமறிந்து, கட்சி இன்றி ,கொடியும் கோடியும் இன்றி,பணப் பரிவர்த்தனை இன்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து சுயேச்சையாகத்  தேர்வு செய்து ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தினால் ஒருவேளை விடிவு காலம் வரலாம்.நாலு மாடுகள் ஒன்று சேர்ந்து விட்டால் வலிமையான சிங்கம் என்ன செய்யும் ? சின்ன குழந்தையில் கேட்ட கதை நினைவுக்கு வருகின்றது. அந்தக் கதையை ஏன் சொன்னார்கள் என்று இப்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது.

No comments:

Post a Comment