விண்வெளியில் உலா -சென்டாரஸ்- தொடர்ச்சி
ஹடார் (Hadar ) எனப்படும் பீட்டா சென்டாரி 525 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 0.6 உடைய வெண் நீலமிக்க ஒரு பெரு விண்மீனாகும்.மாறோளிர் விண்மீனான இது விண்ணில் பிரகாசமான விண்மீன்களின் வரிசையில் 11 வதாக உள்ளது .NGC 5139 என்று பதிவு செய்யப்பட்ட உமேகா சென்டாரி விண்ணில் தெரியும் கோளக் கொத்து விண்மீன் கூட்டங்களுள் பிரகாசமானதும் பெரியதுமாகும் .இது சற்றேறக் குறைய 16000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒளிப்பொலி வெண் 4 உடைய ஒரு மேகத்துளிபோலத் தெரிகின்றது .1677 ல் எட்மண்ட் ஹாலி இதைக் கண்டுபிடித்தார் .
இதன் நிறை சற்றேறக்குறைய சூரிய நிறையில் 5 மில்லியனாகும் .இது சாராசரி கோளக் கொத்து விண்மீன் கூட்டத்தை விடப் 10 மடங்கு பெரியது .பால் வழி மண்டலத்தின் துணை அண்டங்களுள் ஆண்ட்ரோ மெடாவிற்கு அடுத்து பிரகாசமானதாகத் தெரிவது இதுவேயாகும் .ஹபுல் தொலைநோக்கி இதில் சுமார் 50,000 விண்மீன்கள் 13 ஒளிஆண்டுகள் குறுக்கே நெருக்கமாக அமைந்திருப்பதைக் காட்டியுள்ளது .நம்முடைய விண்வெளியில் இதே அளவு பருமனில் சுமார் 12 விண்மீன்களே உள்ளன என்று சொன்னால் இப்பகுதியில் விண்மீன்களின் செறிவை ஓரளவு உணரலாம் .இதிலுள்ள விண்மீன்கள் எல்லாம் மங்கலாகவும் சூரியனைப் போல வெளிறிய மஞ்சள் நிறக் குறு விண்மீன்களாகவும் உள்ளன . NGC 5128 என்று பதிவு செய்யப்பட்ட செண்டாரஸ் A எனப்படும் ஒரு முரண்பட்ட அண்டமாகும் .இது சாதாரணமாக ஒரு நீள் வட்ட வடிவ அண்டமாகத் தெரிகிறது .நீண்ட கால ஒளிப் பதிவு ,ஒரு கறுவடிவப் பட்டை அண்டத்தை இரு கூறாகப் பிரித்திருப்பதைக் காட்டுகின்றது .இது ஒரு வலிமையான ரேடியோ ஒளி மூலமாக இருப்பது அறியப்பட்டுள்ளது .1986 ல் இதிலுள்ள ஒரு விண்மீன் சூப்பர் நோவா என்ற உடனழிவு விண்மீனாக இருக்கலாம் எனக் கண்டறிந்தார்கள்.
No comments:
Post a Comment