Mind without Fear
நம்முடைய கல்வி முறையில் மாற்றம் செய்யப்படாத ,செய்தாலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு குறைபாடு உள்ளது. பெற்றோர்கள் ஒரு சிலரின் தனிப்பட்ட அணுகு முறையாலும் .ஒரு சில பிள்ளைகளின் தன்னார்வத்தினாலும் இக்குறைபாட்டின் பாதிப்பிலிருந்து ஓரளவு காத்துக்கொண்டாலும் அதுவே அக்குறைபாட்டின் உண்மைநிலையை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து விடுவதற்குக் காரணமாகி விடுகின்றது .
நம்முடைய கல்வி முறை ,ஒரு மாணவன் பல மொழிகளை ,பல் துறை விஷயங்களை ஓரளவு கூடுதலாகத் தெரிந்து கொள்ளச் செய்கின்றதே ஒழிய ஒரு வேலையைச் செம்மையாக செய்து முடிக்கும் திறமையையோ அல்லது அதற்குத் தேவையான நம்பிக்கையையோ தருவதில்லை.ஒரு மாணவன் நிறைய விஷயங்களைத் தெரிந்தவன் என்பதைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்கத் திறமை கொண்டவன் என்பதே பயனுள்ளது .100 க்கு 100 மதிப்பெண் வாங்கிய மாணவர்களில் பலருக்கு ஒரு தற்செயல் விடுப்புக் கடிதம் கூட எழுதத் தெரிவதில்லை .வகுப்பில் முதல் நிலை மாணவர்களில் பலருக்கு தங்கள் எண்ணங்களைச் சரியாக எடுத்துக் கூறத் தெரியாது .நம்முடைய கல்வி முறையின் உண்மை நிலை இதுதான் .குழந்தைகளின் இளமைக் காலத்தை கழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது போலத் தோன்றுகின்றது .
ஒரு மாணவன் நிறைய விஷயங்களைத் தெரிந்தவன் என்பதைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்கத் திறமை கொண்டவன் என்பதே பயனுள்ளது ஈடுபாடு,சுய ஆர்வம் ,தேவை கருதி ஒரு மாணவன் கூடுதலான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை .விஷயங்கள் திணிக்கப்படுவதை விட விருப்பத்துடன் தேடித் பெறும் போதுதான் அவற்றின் பயனுறு திறன் அதிகமாக இருக்கின்றது. ஒரு மாணவன் ஒரு வேலையைத் திருத்தமாகச் செய்வதற்கு பிறர்சொல்வதைப் புரிந்துகொள்ளவு ம் ,பிறர் புரியப் பேசவும் முதலில் தெரிந்து கொள்ள அடிப்படைக் கல்வி உதவவேண்டும்.பின்னர் தனக்கு விருப்பமான வேலையைத் திருத்தமாகச் செய்து முடிப்பதற்குத் தேவையான தகுதிப்பாடுகளைப் பெற கல்வியை நாடவேண்டும் .இந்த வளர்ச்சி சமுதாயத்தின் பொதுவொழுக்கத்தை ஒட்டியவாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே கல்வி முறை.அதை விட்டு விட்டு மாணவர்களை பல்துறை அறிஞர்களாக்குவோம் என்று சொல்லி திணிப்பது வீண் முயற்சியே .அதிகம் அறிந்து கொள்வதில் முன்னிலைப் படுத்தும் நம் கல்வி முறை செயலாற்றும் திறமையில் பின்னுக்குத் தள்ளி விடுகின்றது.இதுவே மாணவர்களின் மனதில் இனம் புரியாத ஒரு பயத்தை ஏற்படுத்தி விடுவதற்கு ஓர் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது .
No comments:
Post a Comment