கற்பனைத் திறனை மேம்படுத்திக் கொள்வது வாழ்கையில் ஏதாவதொரு காலகட்டத்தில் சாதனைகளைச் செய்வதற்கான வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வதாகும் .கற்பனை என்பது போலியான உருவங்களை உள்ளுக்குள்ளே உருவாக்கி உணர்வதாகும்.இதில் தயாரிப்பாளர் ,இயக்குனர் ,கதாசிரியர் ,ஒப்பனையாளர் ,வசன கர்த்தா எல்லாம் அவராகவே இருப்பதால் கற்பனையின் முழுப் பயனையும் அவரே பெறுகின்றார் .கற்பனை என்பது பார்வையால் கண்டுணர முடியாத ,காதால் கேட்டுணர முடியாத ,பிற உணர் உறுப்புகளினால் அறிந்து கொள்ள முடியாத உருவங்களையும்,அவற்றின் இயக்கங்களையும் மனத்திரையில் நிழல் உருவங்களாகப் பார்ப்பது எனலாம் .இது காலப் போக்கில் மனதிற்குள்ளே புதிய உருவங்களையும் ,வடிவங்களையும் சமைக்கும் திறமையைத் தருகின்றது .மனக்கணக்காக மனதிற்குள்ளே கணக்குகளைப் போடுவதைப் போல,புதிய படைப்புக்களை மனதிற்குள்ளே உருவாக்கி உருவம் கொடுக்கும் திறமையைத் தருகின்றது .புதிய கண்டுபிடிப்புகளுக்குக் கூட இது வழிகாட்டுகின்றது .
கற்பனைத் திறன் ஒருவருக்கு பல வழிகளில் பயன்தருகின்றது .எனினும் இந்தப் பயன்களைப் பெற பொதுவாக ஒருவர் நெடுங் காலம் காத்திருக்க வேண்டியிருப்பதால் ,இதில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்பவர்கள் வெகு சிலரே .பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் நுண்ணறிவு ,படைப்பாற்றல் ,கற்றதையும் ,அனுபவத்தையும் ஒன்றிணைத்து அறிவியல் கண்டுபிடிப்பு எனப் பல புதிய அனுபவங்களை இந்தக் கற்பனை திறன் வழங்குகின்றது .கற்பனைத் திறனைப் பெறுவதற்கு ஒரு சிறந்த வழியாக உண்மைகள் நிறைந்த புராணக்கதைகளை விரும்பிக் கேட்குமாறு சொல்வதாகும் .எடுத்துக்காட்டான கதாபாத்திரங்கள் மூலம் கூறப்படும் திடமான உண்மைகள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.பொதுவாக இப் பழக்கம் சிறு வயதில் மட்டுமே மிகவும் பயன்தரத் தக்கதாக இருக்கின்றது .சிறு வயதில் மட்டுமே மனதின் பெரும்பாலான பக்கங்கள் முன் கூட்டியே நிரப்பப் படாமல் புதிய கருத்துகளுக்கு இடம் தரக் கூடியதாக இருக்கின்றது. கற்பனைத் திறனை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு முறை தூண்டப்பட்டு
விட்டால் ,பின்னர் அதுவே இயல் வாழ்க்கை முறையாக மாறிவிடும்.
No comments:
Post a Comment