Wednesday, March 27, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

பிரபாகரன் தன்னுடைய முயற்சியில் தோல்வியடைந்ததற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு.முதலாவது ஒரு நாடாளும் அரசைத் தனிமனிதனாகத் தலைமை தாங்கி எதிர்த்துப் போராடத் துணிந்தது.ஒரு தனி மனிதனை ஒரு தனி மனிதன் எதிர்த்துப் போராடலாம் .அங்கே வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு 50-50. உரிமை மற்றும் தனி நாடு என்று ஒரு அரசை எதிர்த்துப் போராட அகத் துணை மட்டும் போதுமானதில்லை அதற்கு புறத் துணையும் தேவை.புறத்துணைகளைத் தேடித் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளத் தவறியது காலப் போக்கில் ஒரு பலவீனமாக உருவாகியது .இதனால் உலகம் தீவிரவாதிகள் என்ற முத்திரையைத்தான் குத்தியது.இரண்டாவது அப்போதைய இந்தியப் பிரதமர்  ராஜீவ் காந்தியைக் கொலை செய்து இந்தியாவின் அதிருப்தியைத் தேடிக்கொண்டது . ஆதரவைப் பெற வேண்டிய சூழ்நிலையில் தேவையில்லாமால் ஒரு அண்டை நாட்டின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது அவருக்குச் சாதகமாக அமையவில்லை. மொழி மற்றும் இன உணர்வுகள் வேறு ,நாட்டுப் பற்று வேறு.மொழி மற்றும் இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நாட்டுப் பற்றும் தமிழக மக்களுக்கு உண்டு என்பதைத் தவறாக எடைபோட்டது ஒரு பலவீனமாக மாறியது.தமிழக மக்களின் இந்த மனப் போராட்டம் இன்றைக்கும் கூடத் தொடருகின்றது .

தனி ஈழம் அமைய தமிழ்நாட்டின் விருப்பம் இருந்தால் மட்டும் போதாது .உலக நாடுகளின் ஒத்துழைப்பும் தேவை.விருப்பம் வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கலாம் ஆனால் ஒத்துழைப்பு என்பது நியாயத்தையும் அவசியத்தையும் புரிந்து கொண்டதின் பின் விளைவாகவே அமையும்.நியாயம் இருக்கின்றது.ஆனால் உலக நாடுகளுக்கு அவசியம் ஒரு குறையாக இருக்கின்றது என்பதால் நம்முடைய அணுகுமுறையை உணர்ச்சிப் பூர்வமாக இருப்பதை விட்டுவிட்டு அறிவுப் பூர்வமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

1 comment: