Creative Thoughts
இருள் இருளை அகற்றுவதில்லை.அதற்கு ஒளி வேண்டும் .அது போல பகை பகையைத் தவிர்ப்பதில்லை.அதற்கு உண்மையான அன்பு வேண்டும்.ஒளி இருந்தால் இருள் இடம் தெரியாமல் மறைந்து விடும். ஒளி இல்லாமையே இருள் சூழக் காரணம்.ஒளி ஏற்றச் சோம்பல் பட்டால் இருளில் கிடந்தது அவதிப்படவேண்டியதுதான்.அன்பு இருந்தால் பகை இல்லாது போகுமே.
தவற்றைத் தவறென ஒப்புக் கொள்ள மனம் முன் வந்தால் ,தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படும் .
மன்னித்தல் என்பது மனித நேயத்தின் உச்சம். இந்த நிலையை அடையாமல் எவரும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியாது .
எப்போதும் எல்லோருக்கும் உதவி செய்வதும் தப்பு ,ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருப்பதும் தப்பு.ஒருவருக்கு உதவி செய்வதை விட ,அவரே அதைச் செய்து கொள்ளுமாறு வழிகாட்டுவது மேலானது.ஆனால் வழிகாட்டலை விட உதவியையே அதிகம் விரும்பும் நிலை இன்றைக்கு உருவாகிவருவது மக்களின் தாழ்ந்த நிலையைக் காட்டுகின்றது .
மன்னிப்பது நல்லது ,மறப்பது அதனினும் நல்லது என்று சொனால் தவறுகளை மன்னித்தவுடன் மறந்து விடுவது மேலானது என்பதை வலியுறுத்தத்தான் .பிறர் முன்னே ஒப்புக்காக மன்னித்து விட்டு ,சமயம் வாய்க்கும் போது வேறொரு வகையில் தண்டிப்பது மன்னித்தும் மறக்காத நிலையால்தான்.மன்னித்தும் அதை மறக்காவிட்டால் மன்னித்ததால் பயன் ஒன்றுமில்லை.
மன நிறைவு என்பது இயற்கையில் நம்மிடம் உள்ள செல்வம் .ஒரு வேண்டாத பொருள் போல அதை வீட்டுப் பரணியில் ஒதுக்கி வைத்து விட்டோம்.ஆடம்பரம் என்பது நாமே வலியத் தேடிக்கொள்ளும் வறுமை.வீட்டில் செல்வமிருந்தும் நாட்டில் வறுமையோடு அலைகின்றோம்.
நல்லவர்களோடு இருப்பது நல்லது .தீயவர்களோடு இருப்பதை விடத் தனிமை சிறந்தது. இனிய சொற்கள் பேசுவது நல்லது.வன் சொற்கள் பேசுவதை விட மௌனமாய் இருப்பது சிறந்தது .அது போல நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தல் நல்லது.தீயவர்களைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது மிகச் சிறந்தது .
மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் வாழ்கையில் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு காணப்படுகின்றது.அறிவின்மையால் விலங்கினங்கள் உணவிற்கும் இனப்பெருக்க உறவிற்கும் வெகுவாகப் போராட வேண்டியிருக்கும்.அறிவை வளர்த்துக் கொள்ளாத போது மனிதன் விலங்காக மாறுகிறான்.அறிவை வளர்த்துக் கொண்ட பிறகும் மனிதர்களுடைய வாழ்க்கையிலும் போராட்டம் தான்.போராட்டமின்றி வாழ்வதற்காக மேற்கொண்ட முயற்சிகளே ஒரு போராட்டமாக மாறிவிட்டது.மனிதர்களைக் காட்டிலும் விலங்கினங்கள் மேல் என்று சொல்லும் காலம் வந்து விட்டது.
No comments:
Post a Comment