Wednesday, March 27, 2013

Sonnathum Sollaathathum-18


சொன்னதும் சொல்லாததும்-18

1878-1968 வரை வாழ்ந்த ஆஸ்திரிய-ஸ்வீடன் நாட்டு இயற்பியல் துறை விஞ்ஞானி லிஸ் மெய்ட்னர் (Lise Meitner).இவர் புகழ் பெற்று விளங்கிய ஒரு பெண் விஞ்ஞானி.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவரை "நம்முடைய மேரிகியூரி " என்று அழைத்து பெருமைப் படுத்துவார் .மெய்ட்னர் ஜெர்மனியில் ஓட்டோ ஹான் (Otto Hahn )என்ற இயற்பியல் விஞ்ஞானி யுடன் இணைந்து 30 வருட காலம் ஆராய்ச்சி செய்தார் .அதன் பிறகு நாசிக்களின் தொந்தரவால் ஸ்வீடன் நாட்டிற்கு குடிபெயர்ந்தார் .எனினும் ஓட்டோ ஹானின் தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை .கடிதங்கள் மூலம் ஆராய்ச்சிக் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார் .ஓட்டோ ஹானுக்கு இவருடைய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் அணுக் கருப்பிளப்பு வினையைக் கண்டுபிடிக்க பெரிதும் துணைபுரிந்தது .என்று மெய்ட்னரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய ரூத் லிவின் சிமி குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டோ ஹான் அக் குறிப்புக்களைக் கொண்டு தானே கண்டறிந்ததாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுவிட்டார் .இது அவருக்கு 1944 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபெல் பரிசைப் பெற்றுத் தந்தது .மெய்ட்னர் பலமுறை இயற்பியலுக்காகவும்,வேதியியலுக்காகவும் நோபெல் பரிசுக்காக முன்மொழியப்பட்டார்.எனினும் நோபெல் பரிசு இறுதிவரை அவருக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது.மெய்ட்னர் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டார் என்று பல அறிவியல் அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.நோபெல் பரிசு பெற முழுத் தகுதி இருந்தும் விதி முறை காரணமாக நோபெல் பரிசு பெறாமல் போன ஒரு சில அறிஞர்களுள் மெய்ட்னரும் ஒருவர் .

“தன்னலமற்று உண்மைகளை உணர்வதற்கும் ஒரு குறிக்கோளைப் பெற்று செயலாற்றுவதற்கும் விஞ்ஞானம் மக்களைத் தூண்டுகின்றது .தன்னுடைய மகிழ்ச்சியையோ ,பயத்தையோ வெளிப்படுத்திக் காட்டுவதற்காக இல்லாது ஆச்சரியத்துடனும் ,வியப்புடனும் இயற்கை உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற அறிவியல் ஆராய்ச்சிகள் கற்றுக் கொடுக்கின்றன” என்று இவர் கூறுவார். பணி என்பது பரிசுகளை எதிர்பார்த்து செய்யப்படுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக இவர் திகழ்கின்றார் . உண்மையில் பணி ,பணிக்காக மட்டுமே இருக்க வேண்டும் .நம்முடைய வேதங்களும் இதைத்தான் கற்பிக்கின்றன.

No comments:

Post a Comment