Saturday, March 9, 2013

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்

இன்றைக்கு இந்திய நாட்டில் சமுதாயப் பிரச்சனைகள் மலிந்து வரும் காலம்.மக்களின் ஒழுக்கம் சரியில்லையா ,அரசின் கடமை சரியில்லையா என்று வாதிட்டு ஒருவரின் தவறுகளை மற்றவரின் மீது திணித்து மறைப்பதும் சரியில்லை.மக்களே அரசு ,அரசே மக்கள் என்பதால் ஒருவரின் தவற்றில் மற்றவருக்கும் பங்குண்டு .நேர்மையின்றி ஒவ்வொருவரும் தனக்குப் பங்கில்லை என்றுசொல்வதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமாக சிந்திக்காமல் இருப்பதால் இப்பொழுது சின்னச் சின்ன விஷயங்கள் கூட பிரச்சனையாகி வருகிறது. சமுதாயப் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருவதற்குக் காரணம் அரசும் ,சமுதாயமும் ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவின்றி இணக்கமாகச் செயல்படாததே ஆகும் . அரசு மோசம் என்றால் சமுதாயமும் மோசம் ,சமுதாயம் மோசம் என்றால் அரசும் மோசம்

இலங்கைத் தமிழர் பிரச்சனை,பூரண மது விலக்குப் பிரச்சனை,மின்சாரம் பற்றாக்குறைப் பிரச்சனை,கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனை ,ஒழிக்கவே முடியாத ஊழல் பிரச்சனை ,போலி மருத்துவர்கள் ,போலி வியாபாரிகள்.போலி நிறுவனங்கள் தரும் பிரச்சனைகள் ,நில மோசடி ,கள்ள நோட்டு ,போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றால் வரும் பிரச்சனைகள் , வெளிச்சத்திற்கே இன்னும் வராத பயங்கரமான பாலியல் வன் கொடுமைகளால் தொடரும் பிரச்சனைகள் .ஆள் கடத்தல்,கொலை,கொள்ளைகளை மிகச் சாதாரணமாகச் செய்யத் துணியும் மனிதர்களின் முரட்டுத்தனத்தால் எழும் பிரச்சனைகள்-இதில் எந்தப் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டாலும் அதில் மக்களும் அரசும் சமபங்கு தவறுகளைச் செய்து வருகின்றார்கள்.பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லா பூமி.மக்கட் தொகை அதிகம் என்பதால் இந்தப் பிரச்சனைகள் என்று சொன்னால் அது தவறாகும் .உண்மையில் ஒற்றுமையில் கண்ட வேற்றுமையே வந்த,வந்து கொண்டிருக்கின்ற ,வரப் போகின்ற எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பது ஏனோ நாம் அறிந்தும் இன்னும் புரிந்துகொள்ள மறுக்கின்ற  விஷயமாகும்.

பூரண மது விலக்கு என்பது காந்தியக் கொள்கை. காந்தியை காகித நோட்டில் போட்டுவிட்டு காந்தியக் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டோம்..அரசுக்கு வருமானமாம் ,மக்கள் நல வாழ்விற்காக நல்ல நல்ல திட்டங்களுக்குச் செலவழிக்க அந்த வருமானம் வேண்டுமாம். உயிர் போனாலும் பரவாயில்லை உடல் நல்லா இருக்க வேண்டும் என்று சொன்னால் யாராவது ஒப்புக் கொள்வார்களா என்ன.

மறந்தும் ஒரு தீய செயலை மக்களுக்குக் கற்பித்து விடாதீர்கள் என்று சொல்வார்கள் சான்றோர்கள் .நாமோ ஒரு தீய செயலை ஆண்டாண்டு காலமாகக் அனுபவிக்க விட்டு ,அதை சட்டப்படி நியாயமாக்கி விட்டு ,பின் திடீரென்று அதைத் தடுக்க வேண்டும் என்றால் எப்படி முடியும்.வயல் முழுக்க ஒரே களை ,ஓரிரு நெற்கதிர்கள் இருக்க களைகளை நீக்கிவிட்டு அறுவடை செய்ய இயலுமா.முதலில் பூரண மது விலக்கு என்பது அரசின் ஒரு அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும். அரசுக்கு வருமானம்  என்பதற்காக மட்டுமில்லை, அரசியல் தொடர்புடையவர்களுக்கும் ஆதாயம் என்பதால் அதை ஒழிக்க அவர்களுக்கே மனமில்லை. குடித்துக் குடித்து குடிக்கு அடிமையாகிப் போன மக்களை இனித் திருத்துவது என்பது மிகவும் கடுமையான காரியம் .பூரண மது விலக்கிற்கு பாதிக்கப்பட்ட மக்களும் ,ஆதாயம் பெற்ற அரசியல் வாதிகளும் வலிமையான எதிரிகளாக இருப்பார்கள். இந்தச் சிக்கலிலிருந்து விடுபடுவது என்பது அவ்வளவு எளிதில்லை.
 

No comments:

Post a Comment