Creative Thoughts
நீ சுவைத்து மகிழ யாரோ பழ மரங்களை நாட்டுச் சென்றனர்.அதுபோல மற்றவர்கள் சுவைத்து மகிழ நீயும் பழ மரங்களை நடலாமே.அதுதான் உண்மையான ,நேர்மையான ,நியாயமான நன்றிக் கடனாகும்.யார்யாரோ முன்கூட்டியே நன்மைகளைச் செய்து விட்டுப் போனதால் அதன் விளைபயன் நமக்கும் கிடைக்கின்றது ,நாமும் அதுபோல வரும் சந்ததியினருக்கு முன்கூட்டியே ஏதாவது நன்மைகள் செய்தால்தான் அவர்க ளும் நம்மைப் போல கொஞ்சமாவது நலமோடு வாழ்வார்கள்
வாழ்கை என்பது திறந்த வெளி மைதானத்தில் விளையாடுவதைப் போல .ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பா டெல்லாம் கிடையாது .யார் எப்போது வேண்டுமானாலும் எத் திசை நோக்கியும் முன்னேறிச் செல்ல முடியும் .வழி இல்லை என்று யாரும் சொல்லமுடியாது .
பிறவிக் கடலை நீந்திக் கடப்பதற்கு பல வழித் தடங்கள் .நான் சொல்லும் வழித்தடத்தில் தான் நீ செல்லவேண்டும் என்று யாராவது வற்புறுத்தினால் அது தீவிரவாதம்.தீவிரவாத வெறியர்களுக்கு மூளையும் கிடையாது இதயமும் கிடையாது .அதனால் சிந்திக்கவும் தெரியாது அன்பு காட்டவும் தெரியாது .
பகைவரையும் நண்பனாகக் கருதும் பண்பாளர்களால் தான் ஊரையும் உலகத்தையும் வசப்படுத்தமுடியும் அரசியலில் எதிர்கட்சியினரை ஆளுங் கட்சியினர் எதிரிகளாகப் பார்க்கும் பழக்கம் மாறாத போது யாராலும் மக்களை வசப்படுத்தி தங்கள் ஆட்சியை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள முடியாது.
செய்த குற்றத் திற்காக தண்டனை கொடுத்த காலம் போய் குற்றவாளிகளுக்காகத் தண்டனை கொடுக்கும் காலமாக மாறிவருகிறது.சரியான நீதிமான் குற்றத்தைத்தான் வெறுப்பான் குற்றவாளியை வெறுக்க மாட்டான் .குற்றம் செய்வது குற்றவாளிகளின் மனித இயல்பு .குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ வாய்ப்புக் கொடுப்பது குற்றமே செய்யாத மற்றவர்களின் மனித இயல்பு. உண்மையில் தவறு செய்து திருந்தி வாழ்ந்த மனிதர்களே மிகச் சிறந்த மனிதர்களாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள். புத்தர்,மகாத்மா காந்தி,வள்ளல் அழகப்பர்,பட்டினத்தார்,முத்துராமலிங்கத் தேவர் போன்ற மாமனிதர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்
.
உடல் நலத்திற்குக் கெடுதல் செய்யும் உண்ணத் தகாதனவற்றை உண்ணக்கூடாது என்பதைப் போல மன நலத்திற்குக் கெடுதல் செய்யும் எண்ணத் தகாதனவற்றை எண்ணக் கூடாது.உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட்டே ஒருவரின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது.ஒன்றை விட்டு ஒன்றால் மட்டும் வாழ்க்கை ஒருபோதும் சிறப்பதில்லை.
ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை .ஒருவர் வாழும் முறையில்தான் உள்ளது .யாருக்கும் உபயோகமின்றி வாழ்தல் என்பதை விட உலகில் இல்லாமல் இருப்பது மேல் .இறப்பைத் தள்ளிப் போட உண்மையான காரணம் இருக்க வேண்டும். வெறும் கூடுதல் நாட்கள் வாழும் ஆசை மட்டும் போதாது.
No comments:
Post a Comment