Micro aspects of developing inherent potentials
வாழ்க்கையில் வெற்றிபெற்று முன்னுக்கு வந்தவர்கள் உலகில் பலர் இருக்கின்றார்கள்.இவர்களில் பலர் தங்கள் வெற்றிப் பாதையை மிகவும் இரகசியமாக வைத்திருப்பார்கள்.யாருக்கும் தெரியப்படுத்த விரும்ப மாட்டார்கள்.ஒரு சிலர் தவறான பாதையைக் காட்டுவார்கள்,வேறு சிலர் பொதுவான விஷயங்களை மட்டும் கூறுவார்கள்,முக்கியமானவற்றை மறைத்து விடுவார்கள்.வெகு சிலர் மட்டுமே வெற்றி பெறுவதற்கு அவர்கள் செய்த முயற்சிகளை விளக்கிச் சொல்லுவார்கள்.இருப்பினும் இவர்கள் தங்களை விட யாரும் முன்னேறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.அவர்கள் சொல்வதெல்லாம்,கேட்பவர்கள் அவர்களுக்குக் கீழ் இருக்கும் வரைதான்.தொழில் மட்டுமல்ல ,பதவி ,ஆதாயம் போன்ற வற்றிலும் கூட மற்றவர்கள் தங்களுக்குக் கீழ் இருக்கும் மட்டும்தான் அக்கறை காட்டுவார்கள்.தன்னுடைய அறிவுரையைக் கேட்டு எவரும் தன்னை விட முன்னேறுவதில் ஆசிரியர்களைத் தவிர யாரும் உண்மையான விருப்பம் காட்டுவதில்லை.
வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை தொழில் துறையில் முன்னேறி உச்சத்தைத் தொட்டவர்களால் சொல்ல முடியும். பெரும்பாலான பொருளாதாரக் கொள்கைகள்,சட்ட அடிப்படைகள் எல்லாம் அவர்களுடைய அனுபவங்களுக்குள்ளே அடங்கி விடுகின்றது என்பதால் கொள்கைகளைப்பற்றி அதிகம் பேசமாட்டார்கள்.
அனுபவம் சிறிதும் இல்லாத தத்துவ ஞானிகள்,கல்விச் சிந்தனையாளர்கள் கூட வெற்றி பெறும் வழிமுறையைப் பற்றி வெகு சுவாரசியமாக எடுத்துக் கூற முடியும் .எனினும் அனுபவத்தின் பின்னணி இல்லாததால் செயல் முறைகளின் நுட்பம் துல்லியமாக இருப்பதில்லை..
இவர்கள் இருவரை விடவும் உங்களுக்கேற்ற இணக்கமான ஒரு வெற்றிப் பாதையைத் தெளிவாகக் காட்டக் கூடிய ஒருவர் இருக்கின்றார் என்றால் அது உண்மையில் உங்களுக்கு நீங்கள்தான்.மற்ற இருவரும் உங்களை வெற்றிப் பாதையில் செல்லுமாறு தூண்டிவிடுகின்றார்கள். புரிதலும் ,புரிந்து கொண்ட பின் தொய்வின்றிச் செய்தலும் இல்லாவிட்டால் எடுத்துக்கொளும் எந்த முயற்சியும் பயனளிப்பதில்லை .உண்மையில் எவ்வளவுதான் பக்கம் பக்கமாக விவரித்து எழுதினாலும் வெற்றியின் அடிப்படை ஓரிரு வரிகளுக்குள் அடங்கிவிடுகின்றது. வெற்றிக்கு விரிவான விளக்கமும் ,விதிகளும் இல்லை .எல்லாம் உழைப்பு ,உழைப்பு மட்டுமே.எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஓயாது உழைக்கும் உறுதி மட்டும் இருந்து விட்டால் இடைவரும் எந்த இழப்பையும் தாங்கிக் கொண்டு வெற்றியை எட்டிவிடமுடியும் .
வெற்றியில் எல்லையைத் தொட்டவர்கள் எல்லாம் தங்கள் சுய முயற்சியால்மட்டும் தான் முன்னேற்றம் கண்டிருக்கின்றார்கள். தனித்துவம் இல்லாமல் ஒருவருடைய வெற்றியை மற்றொருவர் தனதாக்கிக் கொள்ளமுடியாது . தனித்துவத்தின் பெறும் பகுதி சுய ஒழுக்கத்தில் அடங்கியிருக்கின்றது. இதைப் புரிந்து கொண்டவர்களை வெற்றி தானாகத் தேடி ஓடி வரும்.
No comments:
Post a Comment