சொன்னதும் சொல்லாததும்
வெற்றியைப் பெறவேண்டுமெனில் வெற்றியின் மீது கொண்டுள்ள ஈடுபாடு தோல்வியின் மீது இருக்கும் பயத்தை விடக்கூடுதலாக இருக்கவேண்டும் .என்பதை நினைவு படுத்துவதைப் போல வாழ்கையில் பயப்படுவதற்கு ஏதொன்றுமில்லை
,நாம் புரிந்து கொள்வதில்தான் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் தம் மாணவர்களிடம் அடிக்கடி கூறுவார். அவர் வேறுயாருமில்லை,1867 ல் போலந்து நாட்டின் வார்ஸா நகரில் ஓர் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்த மன்ய க்ளோ போஸ்கா .பாரிஸ் சில் உயர்படிப்பு படிக்கும் போது பிரஞ்சு மொழிக்கேற்ப மேரி என மாற்றிக்கொண்டார்.யுரேனியத்தின் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த
ஹென்றி பெக்குரலிடம் ஆராய்ச்சி செய்தவர்.அதன் தாக்கத்தினால் மேரி கியூரியும் புதிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடிக்க முயன்றார். அவருடைய தணியாத ஆர்வத்தின் காரணமாக ஒன்றல்ல இரண்டு கதிரியக்கத் தனிமங்களை- முதலில் போலோனியம் பின்னர் ரேடியம் - கண்டறிந்த பெருமை இவரையே சாரும். இவர் கணவர் பியரி கியூரியும் ஒரு விஞ்ஞானி.பிசோ மின்னழுத்தப் படிகங்களைக் கண்டறிந்தவர் .தன் கணவருடன் சேர்ந்து மேரி கியூரி கதிரியக்கத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.அவருடைய கணவர் திடீரென்று இறந்த போது,அரசாங்கம் அளிக்க முன் வந்த பென்சனை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.அதற்குப் பதிலாக பாரிஸ் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
இவரே முதன் முதலாக இரு முறை நோபெல் பரிசு பெற்ற அறிஞராவார் 1903 ல் இயற்பியலுக்காகவும் 1911
ல் வேதியியலுக்காகவும் பரிசு பெற்றார்.மேரி கியூரியின் அறிவியல் ஆர்வம் அவர் பள்ளி மாணவராக
இருக்கும்போதே வெளிப்பட்டுத் தோன்றியது .மேல்நிலை பள்ளிப் பள்ளிப்படிப்பில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் பெற்றார் .இதற்குக் காரணம் அர்ப்பணிப்புடன் ஆசிரியப் பணியைச் செய்த அவருடைய தந்தையின் தூண்டுதலே.மேரி கியூரி மட்டுமின்றி இவருடைய பிள்ளைகள் எல்லோரும் படிக்கும்காலத்தில் தங்கப் பதக்கம் பெற்றனர் .
"என்ன செய்து முடித்தோம் என்று நான் ஒருபோதும் எண்ணிப் பார்ப்பதில்லை .இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் என் கவனம் முழுதும் இருக்கும் ".என்று மேரி கியூரி அடிக்கடி கூறுவார் .போலோனியத்தைக் கண்டுபிடித்து நோபெல் பரிசு பெற்றுவிட்டோம் இனி யொன்று செய்ய வாழ்கையில் என்ன இருக்கிறது என்று காலமெல்லாம் சும்மா இருந்துவிடவில்லை. தொடர்ந்து உடலை வருத்திக் கொண்டு கடுமையாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு ரேடியத்தைக் கண்டுபிடித்தார் .
வெற்றிபெற்ற மனிதனாக இருப்பதைவிட மதிப்புடைய மனிதனாக இருப்பதே சிறந்தது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறும் கருத்திற்கு ஏற்ப இவருடைய வாழ்கை முழுதும் அமைந்திருந்தது .தனக்குப் பிறகும் ஆராய்ச்சிகளைத் தொடர அறிவியல் உலகிற்கு ஒரு வாரிசையும் தந்தவர். இவருடைய மகளான ஐரனி ஜூலியட் கியூரியும் 1935 ல் வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவராவார்
.1934 ல் தனது 66 வது வயதில் ரேடியக் கதிர்வீச்சின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறந்தார். மனித குலத்திற்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து பெரும் புகழைத் தேடிக் கொண்டவர் ஒருசிலரில் இவரும் ஒருவர்.
மேரி கியூரி இளம் வயதில் காதல் தோல்வி கண்டவர். அதற்காக சிலரைப் போல தற்கொலை செய்துகொண்டு தனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள உறவை முடித்துக் கொள்ளவில்லை.அக வாழ்க்கை வேறு புற வாழ்க்கை வேறு என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டதால் அவரால் காதல் தோல்விக்குப் பின்பும் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானியாக உருவாக முடிந்தது.
No comments:
Post a Comment