எழுதாத கடிதம்
தாய் மொழியில் புலமையை வளர்த்துக் கொண்டவர்கள் தாய் மொழியின் அவசியத்தையும் ,அருமை பெருமைகளையும் எடுத்துக் கூறுவார்கள். மொழியின் அவசியத்தைக் கூறும் போது அதற்குத் தன்னுடைய அவசியமும் தேவை என்பதை குறிப்புணர்த்துவார்கள்.தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொள்ள, மொழியால் பதவி பெற்றவர்கள் எல்லோரும் தன்னிடம் உள்ள திறமை தவிர்த்து பிற திறமைகள் மக்களுக்குப் பெரிய அளவில் நலம் பயப்பதில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றுமாறு நடந்து கொள்வார்கள் .
இன்றைக்கு ஒரு மொழி மட்டும் தெரிந்திருந்தால் வாழ்கையில் உன்னத நிலையைத் திட்டமிட்டுப் பெற வாய்ப்புகள் குறைவு.தேவையில்லாமல் பல மொழிகளைக் கற்றுக் கொள்வதும் வீண்.எனக்குப் பல மொழிகள் தெரியும் என்று பெருமை பேசுவதற்காக மட்டும் மொழிகளைக் கற்றும் கொள்வதால் உண்மையான நற்பயன் விளைவதில்லை.
வேற்று மொழியைக் கற்றுக் கொள்வதின் அடிப்படை அம் மொழியில் உள்ள அரிய படைப்புக்களை -கவிதை,அறிவியல் கட்டுரைகள் ,வாழ்க்கைச் செய்திகள் -மொழிமாற்றம் செய்து தாய்மொழியில் அறிமுகப்படுத்துவதும் ,தாய் மொழியில் உள்ள படைப்புக்களை பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்து உலகம் முழுதும் தாய்மொழியின் மேன்மையை பறை சாற்றுவதுமாகும்.அயல் மொழி தெரியாத அரசியல் தலைவர்கள் ,நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்,திட்ட ஆலோசகர்கள் ,தூதுவர்கள் ,அறிவியல் அறிஞர்கள் இடையிலான கலந்துரையாடலில் இருவருக்குமிடையே மொழி பெயர்ப்பாளராக செயல்பட இவர்களால் மட்டுமே முடியும்.பன்னாட் டுத் தொடர்புகளை வளப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு நாட்டிற்கு இவர்களைப் போன்ற திறமையானவர்கள் அவசியத் தேவையாக இருக்கும்.
தாய் மொழியைத் தெரிந்து கொள்ள ஒருவர் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதில்லை.பெற்றோருடன் கொள்ளும் பழக்கத்திலேயே தாய்மொழியை இயல்பாக,எளிதாகக் கற்றுக் கொண்டுவிட முடியும்.மொழி இலக்கணங்களை அன்றாட அனுபவத்தின் வாயிலாகவே தெரிந்து கொண்டுவிடுவதால் பேசும் போது பிழைகள் ஏற்படுவதில்லை .இருப்பினும் பிழையின்றி எழுதுவதற்கு பழகிக் கொள்ளவேண்டும்
.
நம் மாணவர்கள் தாய் மொழிமட்டுமின்றி படிக்கும் காலத்திலேயே அயல் மொழியொன்றையும் கற்றுக் கொள்ளுதல் அவசியம். ஆங்கிலம் மட்டும் என்றால் கூட போதுமானதுதான்.ஆனால் ஆங்கிலத்தில் பெறும் பயிற்சி முழுமையானதாக இருக்கவேண்டும் .
பிழையின்றி தாய்மொழியில் பேசுவது போல ஆங்கிலத்திலும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.தொடர்ச்சியாக பேசுதல்,மொழி நயத்தோடு பேசுதல் ,பிறர் பேசுவதைப் புரிந்து கொள்ளுதலோடு,அதை அப்படியே கட்டுரையாக வடிக்கவும் தெரிந்திருந்தால் அவருடைய தன் திறமை பல மடங்கு பெருகும் .அயல் மொழியிலேயே கட்டுரைகள் எழுதவும் ,ஆய்வுக் கட்டுரைகள் வரையவும் தெரிந்திருந்தால் அது பயன்தரத்தக்க மொழியறிவாகும் .
மொழியைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும்.சுயமாகவே இன்றைக்கு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு விடலாம். அதற்குத் தேவையான அடிப்படை நூல்களும் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன .இன்டர்நெட் மூலம் எதையும் கற்றுக் கொள்ளக் கூடிய காலம் இது.
இரண்டு மொழிகள் தெரிந்த ஒரு மனிதன் இரண்டு மனிதர்களுக்குச் சமம் என்று கூறுவார்கள். ஆம், தேவையை முன்னறிந்து, தாய் மொழி தவிர்த்து வேறு ஓரிரு அயல் மொழிகளையும் படிக்கும் காலத்திலேயே கற்றுக் கொண்டு பயன்படுத்த முயலுங்கள். அப்புறம் நீங்கள் வாய்ப்புகளைத். தேடிப்போக வேண்டியதில்லை வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும்.
No comments:
Post a Comment