Thursday, May 23, 2013

Sonnathum Sollaathathum


சொன்னதும் சொல்லாததும்

ரஷ்யாவில்1828 முதல் 1910 வரை 82 ஆண்டுகள் வாழ்ந்த நாவலாசிரியரான டால்ஸ்டாயைத் (Leo Tolstoy) தெரியாதவர்கள் யாருமிருக்கமுடியாது. போரும் அமைதியும்,அண்ணா கரினினா,பாவ மன்னிப்பு (A confession) போன்ற நாவல்கள் அவருக்கு அழியாப் புகழ் சேர்த்தன .நாவல்கள் மட்டுமின்றி சிறு கதைகள்,நாடகங்கள்,தத்துவக் கட்டுரைகள் என அவர் தன் படைப்புகளால் மக்களை ஈர்த்திருந்தார்.லியோ டால்ஸ்டாய்  ஒரு இலக்கியவாதியாகப் பிறக்கவில்லை, அவர் அப்படி உருவானார்.ஒருவர் தான் என்னவாக உருவாகவேண்டும் என்று விரும்பி அதற்கான தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்வாரேயானால் அவரால் அவர் விரும்பிய படி உருவாகமுடியும் என்பதற்கு லியோ டால்ஸ்டாய் சிறந்த
எடுத்துக்காட்டு.

 உண்மையில் டால்ஸ்டாய் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து முழுமையான பட்டம் பெற்றவரில்லை.பல சகோதர,சகோதரிகளுடன் பிறந்த அவர் சிறுகுழந்தையாக இருக்கும்போதே பெற்றோர்கள் இறந்து போனார்கள்.டால்ஸ்டாய் அவருடைய உறவினர்களினால் வளர்க்கப்பட்டார்.ஒரு பல்கலைக் கழகத்தில் சட்டமும் ,கீழ் திசை மொழியும் படிக்கத் தொடங்கியபோது மக்கு என்று ஆசிரியரால் பேசப்பட்டார் .அதனால் படிப்பைப் பாதியிலேயே துறந்துவிட்டார் .கொஞ்ச காலம் சும்மா ஊர் சுற்றித் திரிந்ததால் சூதாட்டப் பழக்கம் தொற்றிக் கொண்டது .அதனால் கடனும் ஏற,இராணுவத்தில் ஓடிப் போய் சேர்ந்தார்.அதுவே அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது ஏனெனில் அங்கு தான் அவர்  பட்டை தீட்டப்பட்டு ஒரு  சிறந்த எழுத்தாளராக உருமாறினார்.இவருடைய எழுத்துகள் மக்களை வெகுவாக சிந்திக்கத் தூண்டின.எளிமை,நன்மை ,உண்மை இருந்ததால் கருத்துகள் எல்லோரையும் கவர்ந்தன.
  
நேசித்தலே புரிதலை அதிகரிக்கச் செய்து ஆக்கப் பூர்வமான செயல்களைச் செய்வதற்குக் காரணமாக இருக்கிறது என்ற கருத்தை "ஒவ்வொன்றையும் உண்மையிலேயே நேசித்தால் எல்லாவற்றையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்'" என்ற வரி மூலம் வலியுறுத்திக்கூறியுள்ளார். 

நான் யார் ,நான் ஏன் இங்கே இருக்கின்றேன் என்பதை அறிந்துகொண்டு வாழாவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கையில்லை  என்றும்மனித குலத்திற்குச் சேவை செய்வதற்காகத் தான் மனிதர்கள் வாழப் பிறந்திருகின்றார்கள், சேவையில்லாத வாழ்கை ஒரு வாழ்கையில்லை என்றும்ஒவ்வொருவரும் உலகில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் பற்றியே பேசுகின்றனர் ஆனால் தனக்குத் தானே மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றி சிறிதும் சிந்திப்பதேயில்லை என்றும் கூறி  மக்களிடம் சமுதாய எண்ணங்களை வெகுவாகத் தூண்டினார். மகாத்மா காந்தியைக் கவர்ந்த ஒரு சில அறிஞர்களுள் லியோ டால்ஸ்டாயும் ஒருவர்.

“ஒவ்வொரு மனிதனும் ஒரு பின்னத்தைப் போல.பின்னத்தின் மேற்கூறு மனிதனையும் ,கீழ்க்கூறு அவன் அவனைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பதையும் குறிக்கும் என்றும், கீழ்கூறு எவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அவ்வளவு பின்னத்தின் மதிப்பு குறைவாக இருக்கும்” என்று சமுதாய மனிதனைப் பற்றி தெரிவிக்கின்றாரர் .தன்னைப்பற்றி தானே புகழ்ந்து கொள்பவன் ஒருபோதும் உண்மையான சேவை புரிபவனாக இருக்கமுடியாது என்ற கருத்தைக் கணி பின்னத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். சேவை குறிகோளானால் புகழ்ச்சி தேவையில்லாத ஒன்று.

No comments:

Post a Comment