தத்துவம்
ஆன்மிகவாதி எப்போதும் ஆசைப்படாதே என்றும் சும்மா இரு என்றும் நிர்வாண நிலையே உயர்ந்த நிலை என்றும் கூறுவார்கள் .அதே சமயம் வெற்றிச் சிந்தனையாளர்கள் அத்தனைக்கும் ஆசைப்படு என்றும் சும்மா இருக்காதே,இயற்கையின் படைப்பில் எதுவுமே சற்று நேரம் கூட சும்மா இருப்பதில்லை என்றும் செயல்படா நிலையை விடச் செயல்படும் நிலையே முன்னேற்றத்தைத் தரக்கூடியது என்றும் கூறுவார்கள் . வாழ்கையில் வசந்தத்தை ஏற்படுத்த இருவரும் கூறிய கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டது போலத் தோன்றுகின்றது என்றாலும் உண்மையில் இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையவையே .
சுருங்கச் சொன்னதை நாம் தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோம் .உண்மையில் ஆசைப்படாதே அது தவறானதாக இருக்கும் போது என்றும்,சும்மா இரு,நிலைமை இன்னும் மோசமாகிவிடும் போது என்றும்,நிர்வாண நிலையே மேலானது பற்றுக்கொள்ள வாய்ப்புகள் பெருகும் போது என்றும் அதை விளக்கும் போது குழப்பம் விலகிச் செல்கிறது.அத்தனைக்கும் ஆசைப்பட்டால் அதில் ஒன்றையாவது அடைவதற்கான முயற்சிகள் உனக்குள்ளே உருவாகும், ஆசைகளே பின்னால் செயல்களாக முளைக்கும் விதைகள் என்றும், ஒருவர் எதை வென்றெடுக்க வேண்டுமானாலும் அதை அவர் சுய முயற்சியின்றி பெறவே முடியாது எனவே வெற்றி பெறும் வரை சும்மா இருக்காதே என்றும் கூறுவார்கள்.
எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை ஒட்டியும் வெட்டியும் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.எந்தச் சூழ்நிலையில் எதை எடுத்துக் கொள்வது என்பது ஒருவருடைய நுண்ணறிவைப் பொறுத்தது. தர்மம் தலைகாக்கும் என்பதும் தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும் என்று சொன்னது நம் முன்னோர்கள் தாம். எப்பொழுது தர்மம் செய்யவேண்டும் எப்பொழுது செய்யக்கூடாது என்பது அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்தது
No comments:
Post a Comment