தத்துவம்
சுவாசித்தல் என்பது ஒரு செயல் அதை உன் விருப்பத்திற்கு ஏற்ப செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ முடியாது .இருந்தும் அதைச் செய்வதற்கு யாரும் சோம்பல்படுவதில்லை.ஏனெனில் இது இயற்கையால் தூண்டப்பட்டு தன்னிச்சைச் செயலாக நடைபெறுவது மட்டுமன்று அது தொடர்ந்து உயிர்வாழ்வதற்கு மூலமுமாகும் .
பார்த்தல் என்பது ஒரு செயல் .அதைச் செய்ய யாரும் மறுப்பதுமில்லை வெறுப்பதும் இல்லை.கொஞ்சம் முயன்றாலே போதும்- ஒரே இடத்திலிருந்து கொண்டு தலையை இங்குமங்கும் திருப்பினாலே காட்சிகளைக் கண்ணால் படம் பிடித்துவிடலாம்
.இதனால் உடம்பின் பிற பகுதிகளுக்கு கூடுதல் வேலையில்லை.இயற்கைக் காட்சிகளையும் ,அதிசயங்களையும் பார்க்க கண்கள் இயல்பாக விரும்பும். பருவகாலத்தில் அழகுப் பெண்கள் என்றால் பார்வயில் கொஞ்சம் முரட்டுத்தனம் அதிகரிக்கும்.
நடத்தல் என்பது ஒரு செயல் அதைக் கடைசி வரை யாரும் முழுமையாகச் செய்வதில்லை.உடம்பின் பிற உறுப்புக்களும் ஒப்புக்கொண்டால்தான் கால்கள் நடக்க முடியும் என்பதால் நினைத்த மாத்திரத்தில் செயல் தொடங்கப்படுவதில்லை.செய்வதற்கும் ,செய்யாமலிருப்பதற்கும் சுதந்திரம் இருப்பது செயல் அரைகுறையாகத் தொடரக் காரணமாயிருக்கிறது .
உழைத்தல் என்பது ஒரு செயல் .வாழ்வதற்காக உழைப்பைத் தவிர்க்கமுடியாது என்றாலும் எவ்வளவு ஓய்வை அதிகரித்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு அதிகரித்துக் கொள்வது உழைப்பின் குறுக்கு வழி.சுய வேலைகளில் இருந்த சுதந்திரம் இதில் இருப்பதில்லை என்பதால் இதன் பயனுறுதிறனை மனவலிமையே தீர்மானிக்கின்றது.ஒரே மாதிரியாக உழைப்பதற்கு மூளையின் உதவி அதிகம் தேவைப்படுவதில்லை என்பதால் இயதிரத்தனமான உழைப்பை மூளையற்றோரிடம் பறித்துக் கொண்டுவிடுகின்றர்ர்கள்
எழுதுதல் என்பது ஒரு செயல்.இரண்டு கால்கள் உடைய எல்லோராலும் நடக்க முடியும் ஆனால் மூளையின் உதவி தேவையாய் இருக்கின்றது என்பதால் இரண்டு கைகள் உடைய எல்லோராலும் எழுத முடியாது .மூளையின் திறன் என்பது அதில் ஏற்படுத்தும் பதிவுகளின் அளவையும் அவற்றை அசைபோடும் நினைவாற்றலையும் பொறுத்தது .பதிவுகளில் குறைவு இருந்தாலும் ,குறை இருந்தாலும்
,நினைவாற்றலில் குறைவு இருந்தாலும் மூளையின் பயனுறு திறன் வெகுவாகக் குறைந்து போகும் .
மனிதர்களின் சமுதாய வாழ்கையும் அன்றாட வாழ்கையில் ஒருவர் மேற்கொள்ளும் செயல்களோடு நெருக்கமான தொடர்புடையனவாக இருக்கின்றன.இதில் சுவாசித்தல் என்பது பெற்றோர் போன்றது .இறைவன் கொடுத்தது .பார்த்தல் என்பது இயல்பாக உண்டாகும் உறவுகளைப் போன்றது.
எளிய முயற்சியால் நிகழும் நடத்தல் என்பது நண்பர்கள் போன்றது .பேசுதல்,கேட்டல் ,கற்றல் ,உண்ணுதல் போன்ற அடிப்படை செயல்கள் யாவும் நண்பர்கள்,ஆசிரியர்கள் போன்றவையே .சுகம் தரும் உறக்கம் வாழ்கையில் பாதியை எடுத்துக் கொள்ளும் மனைவி போன்றது .உழைத்தல் என்பது பெற்ற பிள்ளைகள் போன்றது.துயித்த இன்பங்களுக்குச் செய்யும் கைமாறு.எழுதுதல் என்பது சான்றோன் போன்றது .பிறந்துவிட்ட எல்லோரும் வாழ்கின்றார்கள் ஆனால் சான்றோனாக வாழ்வோர் வெகு சிலரே.
No comments:
Post a Comment