Monday, November 5, 2012


எழுதாத கடிதம்


தானம் செய்தால் புண்ணியம்,அடுத்த பிறப்பில் நன்மைகள் விளையும் என்பதற்காக தர்மம் செய்கின்றார்களா அல்லது இல்லாதவன் மீது இரக்கப்பட்டு அவனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்பதற்காகச் செய்கின்றார்களா அல்லது அப்படிச் செய்வதால் தனக்கு வேறொரு வகையில் இலாபம் என்பதால் செய்கின்றார்களா ?

தானம் செய்யும் போது அதைப் பெறுவதற்கு பெற்றுக்கொள்பவன் உண்மையிலேயே தகுதியுடையவனாக இருக்கின்றானா என்பதை அறிந்து செய்யவேண்டும் என நம் புராணங்கள் வலியுறுத்துவதில்லை.தானம் செய்ய நினைக்கின்றாயா அதை அக்கணமே அன்புடன் செய்து முடித்துவிடு.அதன் பிறகு அதைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்று சொல்வது நம் புராணங்கள். பிச்சை எடுத்து பீடி ,சிகரெட் குடிப்பதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். அவர்களுக்கு நாம் எப்படி தர்மம் செய்யமுடியும். சிலர் தவறான வழிகளில் கேட்டுப் பெற்ற பணத்தை செலவழிப்பார்கள். ,நாம் செய்த தர்மம் சரியான வழியில் பயன்படுகிறது என்று தெரியாமல் செய்யும் போது நம் மீதே நமக்கு கோபம் வருகிறது. இப் போக்கினால் தர்மம் செய்யும் எண்ணம் தடைப்படுகிறது. தர்மம் கேட்பவன் நல்லவனா ,இல்லை கெட்டவனா,தர்மம் அறவழியில் செலவிடப் படுகிறதா என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதால் தர்மம் செய்வதற்கு மனம் இயல்பாக இணங்குவதில்லை..உள்ளார்ந்த வெறுப்புடனேயே செய்ய வேண்டியிருக்கிறது  .அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு உதவி செய்யப் போய் இன்றைக்கு அவர்களே பெரிய தலைவலியாகப் போய் விட்டார்கள் அமெரிக்காவிற்கு மட்டுமில்லை ,உலக நாடுகளுக்கும்.அமெரிக்கர்கள் வேறொரு வகையில் அனுகூலத்தை எதிர்பார்த்தே செய்தார்கள் என்றாலும் உதவியைப் போல தர்மத்தையும் யாருக்குச் செய்யவேண்டும் என்பதை அறிந்தே செய்யவேண்டும் என்பதற்கு இது பாடமாக இருக்கிறது. மேலும் தர்மம் செய்வது நல்ல காரியம் என்றாலும் அதற்கு மூல காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அதை நீக்குவதே சரியானதாகும். தர்மம் செய்வது என்றால் ஒருவன் தனக்கு மிஞ்சிய பொருளைப் பெற்றிருப்பவனாகவும்,மற்றொருவன் ஒன்றும் இல்லாதவனாகவும் இருக்கின்றான் என்று பொருள்.இந்நிலை எப்படி நிலை பெற்றது ? எல்லோரும் சம நிலையில் இருந்தால் ஒருவன் ஒருவனுக்குத் தர்மம் செய்யவேண்டிய நிலை வருவதில்லை. இருப்பவன் மேலும் இருப்பவனாகி இல்லாதவனுக்குக் கொடுப்பதை விட ,இருப்பவன் மேலும் இருப்பவனாகி விடாமலும்,இல்லாதவன் இருப்பவனாகிவிடவும்  சமுதாயம் முயலவேண்டும்.உலகில் எல்லோரும் இல்லாதவர்களாகவே வந்தோம் .இல்லாதவன் என்றைக்கும் இல்லாதவனாகவே இருக்கின்றான் என்றால் குறை அவனிடத்திலும் இருக்கிறது என்றும்,அவன் இயல்பாக வாழும் கலையை அறியாதவனாக,பிறவிக் கடனைச் செய்யாதவனாக இருக்கின்றான் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இருப்பவன் இல்லாதவனுக்குத் தர்மம் செய்வதை விட அவன் அவனாக வாழ்வதற்கு உதவிகள் செய்தாலே போதும்.அவன் உதவிகளை மறுத்து தர்மத்தை மட்டுமே வேண்டி நின்றால் குறை அவனிடம் உள்ளது என்று அர்த்தம்.

 

No comments:

Post a Comment