பூவுக்குள் ஒரு இரகசியம்
இரவில் கண்ணுறங்கிய நிலமகள்
இரவி வரக்கண்டு முகம் மலர்ந்தாள்
செயலுறைந்து சிலைபோலான உலகம்
உயிர்த்து உற்சாகமாய்ச் சுழன்றது
கூட்டுக்குள் முடங்கிக் கிடந்த பறவைகள்
கூவிக்கொண்டு சுறுசுறுப்பாய் சுற்றித் திரிந்தன
வீட்டுக்குள் சும்மா இருந்த கன்னுக்குட்டிகள்
விரைந்தோடி அம்மாமடியில் பால் குடித்தன
வயலுக்குள் வளர்ந்திருந்த பயிரினங்கள்
அசைந்தாடி மகிழ்ச்சியை நடித்துக் காட்டின
நீருக்குள் நிலையாக நின்றிருந்த மீன்கள்
நீந்தி மீண்டும் விளையாடத் தொடங்கின.
இறந்து பிறப்பதும் பிறந்து இறப்பதும்தான்
இயல் வாழ்க்கையென எந்நாளும் எடுத்தியம்ப
இயற்கை சொல்லநினைத்த நல்மொழியோ
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு என்றுரைத்த
வள்ளுவன் வாக்கு என்றைக்கும் மெய்யோ
தினம் தினம் பகலில் வரும் தலைவனை
மணம்விச வழியெங்கும் மலர்தூவி வரவேற்க
மனிதர்கள் மறந்து விடுவார்கள் என்றெண்ணி
மரஞ்செடிகளை பூக்கவைத்தாய் போலும்
பறிக்காது வாடி நிலத்தில் வீழ்ந்தாலும்
தொடுக்காது அழகு ஜாடியில் புகுந்தாலும்
பூமாலையாய் இறைவன் கழுத்தில் விழுந்தாலும்
பூச்சரமாய் பூவையர் தலையிற் புரண்டாலும்
எல்லாம் இயற்கையின் பார்வையில் ஒன்றுதான்
மின்னி மறையும் மின்னலைப் போல
விரைந்து மடியும் ஈசலைப் போல
உங்களுக்கும் ஒருநாள் வாழ்க்கை என்றாலும்
எதைச் செய்வதற்காகப் படைக்கப்பட்டீர்களோ
அதைச் செய்து முடித்து விட்ட திருப்தியில்
மரணம்கூட உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது
மனிதர்களில் உங்களைப் போல யாருமில்லை
இவ்வுலகிற்கு அதுவே பெருந்தொல்லை
No comments:
Post a Comment