Friday, November 2, 2012

Sonnathum Sollathathum


சொன்னதும் சொல்லாததும் ஒரு சிலர் தங்கள் உடம்பில் சாமி புகுந்து விட்டதாக வும் ,அந்தச் சாமி எதிரில் இருப்பவர்களுடன் அவர்கள் மூலமாகப் பேசும் என்றும் கூறி கேட்கப்படும் கேள்விகளுக்கு புரிந்தோ புரியாமலோ பதில் கூறுவார்கள். அதாவது அந்தச் சாமியின் அறிவு என்பது அவர்களுடைய அறிவின் அளவைப் பொறுத்தே அமைகிறது. தங்கள் உள்ளார்ந்த விருப்பங்களை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய ,தங்களுக்கென்று ஒரு சமுதாய அந்தஸ்த்தைப் பெற இப்படியொரு வழியை தேர்ந்தேடுத்திருக்கின்றார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. சாமி என்று சொல்லிவிட்டால் சாமிக் குத்தம் என்று யாரும் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்று சிலர் இதை நடிப்பாக வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள் .வெகு சிலர் நரம்புத் தளர்ச்சியால் வரும் உடல் நலக் கோளாறுகளை(இதை ஆங்கிலத்தில் ஹிஸ்டீரியா என்று கூறுவார்கள்) மறைக்க சாமி வந்ததாகக் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் கேள்விகளுக்குப் பதில் கூறுவதில்லை. மற்றும் சிலர் வருமானத்திற்காக இதைத் தொழில் ரீதியாகவும் செய்து வருகின்றார்கள்.இதில் வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு மனிதனுமே கடவுளின் ஒரு அம்சமாக இருக்கும்போது ,ஒரு கடவுள் தன் மீது ஒரு கடவுள் புகுந்து விட்டதாகக் கூறுவதுதான். ஒரு பெரிய வைரக் கல்லை யாரவது டேபிள் வெயிட்டாக பயன் படுத்துவார்களா ? ஆற்றலும் திறனும் மிக்க உட்புகுந்த கடவுள் இந்தியாவில் பொருளாதார மலர்ச்சிக்கு நல்ல நல்ல யோசனைகளைக் கூறட்டுமே. ஏதும் அறியாத மக்கள் இனம் புரியாத அச்சத்துடன் அவர்கள் குடும்பத்தைப் பற்றிக் கேட்ட்கும் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமா பதில் கூறும் ? மின்னல் என்பது மேகங்களுக்கிடையேயான அல்லது மேகத்திற்கும் பூமிக்கும் இடையேயான மின்னிறக்கம் உயரமான கட்டடங்களை புவியிணைப்புச் செய்யாவிட்டால் இந்த மின்னிறக்கம் கட்டடம் வழியாக ஏற்பட்டு சேதம் விளைவிக்கும்.அதனால் கட்டடத்தில் இடிதாங்கிகளை பொறுத்த வேண்டும் என்றும் பெஞ்சமின் பிராங்கிளின் என்ற அறிவியல் அறிஞர் கண்டறிந்தார். அப்போது இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த மூன்றாம் ஜியார்ஜ் இதை ஏற்றுக் கொள்ளாததோடு பிராங்கிளினை கேலியும் செய்தார். முனை மழுங்கிய உலோகத் தண்டை தன்னுடைய அரண்மனையில் பொருத்துமாறு செய்தார். அப்போது அறிவியல் கழகத்தின் தலைவராக இருந்த ஜான் ப்ரிங்கில் என்பார் மன்னரிடம் " மன்னரின் மகிழ்ச்சிக்காக இயற்கையின் விதிகள் மாற்றம் பெறுவதில்லை " என்றார். இந்தியர்களைத் தவிர உலகில் உள்ளவர்கள் இதன் உட்பொருளை விளங்கிக் கொண்டு முன்னேறி வருகின்றார்கள் .நாம்தான் இன்னும் மாறாமல் இருக்கிறோம். இயற்கையை யாரும் தனதுடமையாக்கிக் கொள்ளமுடியாது .இயற்கை வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒருபோதும் பார்ப்பதில்லை கடவுளின் பெயாரால் ஏமாறும் மக்களை ஏமாற்ற ஏமாற்றும் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட செயற்கை நடைமுறையே உடம்பில் சாமிவருதல். இயற்கை ஒன்றே பிரபஞ்சத்தின் எதிர்காலம் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் என்றாலும் அதை நிகழ் காலத்தில் மட்டுமே மனிதர்களுக்குத் தெரிவிக்கும் முன் கூட்டியே சொல்வதில்லை.சாமி வந்தவன் முன் கூட்டியே எதிர்காலம் பற்றி சொல்கின்றான் என்றால் அது இயற்கைக்கு முரண்பட்டதாக இருக்கிறது. எதிர்காலம் பற்றி யூகிப்பது வேறு சொல்வது வேறு. முன்னது வாய்ப்பின் அடிப்படையிலான விஞ்ஞானம் பின்னது அழகாக வர்ணிக்கப்படும் ஜோடிக்கப்பட்ட பொய்கள்

No comments:

Post a Comment