வேதித் தனிமங்கள்- வனேடியம் -பயன்கள்
கட்டுமானப் பணிக்குத் தேவையான உறுதியும் மிகத் தாழ்ந்த நியூட்ரான் உட்கிரகிப்புக் குணகமும் கொண்டிருப்பதால் ,இது அணு உலை ,அணுக கரு வினை சார்ந்த பயன்பாடுகளுக்குப் பெரிதும் அனுகூலமாக இருக்கிறது. 1 % க்கும் குறைவாக வனேடியத்தை எஃகுடன் சேர்க்க அதன் உறுதியும் ,அரிமான எதிர்ப்பும் அதிகரிக்கின்றன. 30 -40 % வரை வனேடியமும் எஃகும் சேர்ந்த கலவை வனேடிய எஃகாகும் .இது எளிதில் தேய்மானத்திற்கு உள்ளாவதில்லை. இது விரை வேக இயந்திர உறுப்புகள் ,துருப் பிடிக்காத அறுவைச் சிகிச்சைக் கருவிகள் ,அதிர்வு தாங்க வல்ல சுருள் வில்கள்,இரயில் எஞ்சின்கள் ,கன ரக இயந்திரங்கள் ,தானியங்கு வண்டிகள் ,அச்சாணி ,பற்சக்கரத் தொகுதி (gear ) போன்றவைகள் செய்யப் பயன்படுகின்றது.
சிலிகான்,நிக்கல் ,வனேடியத்தைக் கொண்டு கவச எ ஃ கு (armour steel ) தயாரிக்கப் பட்டு இராணுவ வீரர்களுக்கான தொப்பி ,கவச உடை ,ஆயுதங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. .இவை லேசாகவும் உறுதியானதாகவும் உள்ளன. வனேடியத்தின் சேர்மானத்தால் கவச உடையை குண்டு துளைக்க முடியாத வாறு உறுதி பெறுமாறு செய்ய முடியும். வனேடிய எஃகின் மற்றொரு பயன்பாடு அது நீர்ம சோடியத்திற்கு எதிர்ப்பளிக்கிறது. நீர்ம சோடியம் அணு உலைகளில் குளிர்விப்பானாக (Coolant ) பயன்படும் போது,அது நியூட்ரானை உட்கவர்ந்து கதிரிக்கமுடைய அணு எண்மமாக(Isotope) மாறலாம். மேலும் சோடியம் நீர் மற்றும் ஆக்சிஜனுடன் தீவிரமாக வினை புரியக் கூடியது. எனவே அணு உலைகளின் உட்சுவரில் வனேடிய எஃகுப் பூச்சு நற்பயனளிக்கிறது.
எஃகை டைட்டானியத்துடன் பொருத்தி இணைக்க வனேடிய மென்னிழைகள் இணைப்பூட்டியாக விளங்குகின்றன. வனேடியம் பென்டாக்சைடு பீங்கான் உற்பத்தித் தொழிலில் ஒரு வினையூக்கியாகக் கொள்ளப் பட்டுள்ளது .
வனேடியம்- தங்கம் கலப்பு உலோகம் அறுவைச் சிகிச்சைக் குறைய கருவிகளில் பயன்படுகின்றது. வனேடிய -செம்பு கலப்பு உலோகம் கடல் நீரால் அரிக்கப் படுவதில்லை. எனவே கப்பலில் உந்திச் செலுத்தும் விசிறிகள் (propellers) கடல் நீரோடு நேரடியாகத் தொடர்புடைய இயந்திர உறுப்புகள் செய்யவும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகளைக் கட்டமைக்கவும் பயன் தருகிறது..மெல்லிய சாம்பல் நிறங் கொண்ட வனேடியப் பொடியை மெதுவாகச் சூடு படுத்த அது முதலில் பழுப்பு நிறமும் (V2O5) பின்னர் கருப்பு நிறமும் (V2O3) ,அதன் பிறகு நீல நிறமும் (V2O4) இறுதியாக ஆரஞ்சு நிறமும் (V2O5) பெறுகிறது. பன்னிறங் கொண்ட வனேடிய ஆக்சைடுகள் அச்சுத் தொழிலுக்குத் தேவையான வண்ண மைகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. அலுமினியம் வனடேட் மற்றும் காலிக் அமிலக் கரைசல் ,வர்ணங்கள் ,வார்னிஷ்கள் உற்பத்திக் கூடங்களில் உலர்ப்பானாகப் பயன் படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்றும் தொழிலிலும் வனேடியக் கூட்டுப் பொருட்கள் பங்கு பெற்றுள்ளன. வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி ,பீங்கான் சாமான்கள் உற்பத்தியிலும் வனேடியச் சேர்மங்கள் ஈடுபட்டுள்ளன. அனிலின் சாயத் தொழிலில் முக்கியமானதொரு மூலப்பொருளாகும். நிறமில்லாத அனிலினை, வனேடியம் பென்டாக்சைடு கொண்டு பயன்படுத்தும் போது அது வலிமையான கறுப்புச் சாயமாக மாறுகிறது.
உடல் வளர்ச்சிக்கும் வனேடியம் அவசியமானது. வனேடியக் குறைவு உயிரினங்களின் வளர்ச்சியைப் பாதிக்கின்றது; பிளாஸ்மா .கொலஸ்ட்ரலை அதிகரிக்கின்றது. குளுக்கோஸ் ஆக்சிகரணம் அடைவதைத் தூண்டுகிறது. ஈரலில் கிளைகோஜன் தொகுப்பாக்கம் செய்யப்படுவதை அதிகரிக்கின்றது. கண்ணில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கின்றது.
No comments:
Post a Comment