Wednesday, November 21, 2012


வளர்ச்சி -வாழ்க்கையின் இறுதி வரை

பொதுவாக மக்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் ,ஒரு குறிப்பிட்ட காலம் வரை கல்வி அல்லது தொழில் கற்றுக் கொள்கின்றார்கள் .பின் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு வாழ்கை முழுதும் இயந்திரம் போலக் கழித்து விடுகின்றார்கள்.ஒரு புதுமையின்றி திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான வேலைகளை மட்டுமே செய்வதால் எம்பிக் குதிப்பதற்கான உற்சாகம் வருவதே இல்லை. புதிதாக கற்றுக் கொள்வதை விட்டுவிடுவதுதான் இதற்குக் காரணம்.

ஒரு மரம் வளரும் போது ஒரு காலத்தில் நாமும் பூத்துக்,காய்த்துக் கனிகளைத் தந்து உலகை உற்சாகமூட்டுவோம் என்று நினைத்து வளர்ந்து தன்னை அதற்குத் தகுதிப் படுத்திக்கொண்டே இருக்கிறது .பெரிய மரமாய் வரும் வரை தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்வதில் மட்டுமே அக்கறை கொள்கிறது. பெரிய மரம் பூத்து,காய்த்து,கனிகளை வழங்குகிறது என்று சின்னச் செடியும் அப்படிச் செய்வதில்லை.பெரிய மரமும் கனிகளை வழங்கிவிட்டோமே என்று தொடர்ந்து இலைகளைத் துளிர்க்காமலோ ,கிளைகளை விடாமலோ இருப்பதில்லை.இன்னும் குறைவான வாய்ப்புகள் கிடைக்கும் வாழ்க்கைச் சூழலில் செய்து வந்த பணியைச் செய்யக் கூடுதல் திறமையை அந்த மரம் வளர்த்துக் கொள்கிறது.

வாழ்கையை ஓட்டுவதற்கு இந்தத் திறமை போதும் என்று நினைத்து ஒரு வேலையில் சேர்ந்த அந்தக் கணத்திலிருந்தே திறமையை வளர்த்துக் கொள்ளும் போக்கை பெரும்பாலான மக்கள்  விட்டு விடுகின்றார்கள்.செய்யும் பணி அதே என்றாலும் அப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கும்,புதிய சூழலில் தொய்வின்றிச் செய்வதற்கும்,புதுமையாகத்தினால் போட்டியில் முன்னிலை வகிக்கவும் புதிய திறமைகள் தேவையாய் இருக்கின்றன என்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.திறமை வளராத போது தனி மனித வளர்ச்சியும் குறைந்து விடுகின்றது.

உள்ளார்ந்த திறமை மேம்படுவதற்கு உலகில் இரண்டு புறக்காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று பழகும் மக்கள் குறிப்பாக நண்பர்கள்  மற்றொன்று வாசிக்கப்படும் நூல்கள். இதை ஒருவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்த்தெடுத்து விட்டால் ஏறக்குறை முழுவெற்றி அடைந்த மாதிரித்தான். இதில் முழு மனதுடன் ஈடுபடாமல் ஒப்புக்குச் செய்பவர்கள் காலப் போக்கில் வாழ்கையில் உற்சாகத்தை இழந்து விடுகின்றார்கள்

தன் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து விருப்பமுள்ள எதையாவது கற்றுக்கொள்ளும் விதத்தில் ஈடுபாடு கொள்வது வாழ்கையை எப்போதும் உற்சாகமாக்கிக் கொடுக்கும்.ஒருவர் தன்னைத் தானே எப்போதும் செயல் படு நிலையில் இருக்க இது பெரிதும் உதவும். இது சாதனை படைக்கும் வல்லமையை ஊக்குவிப்பதுடன் ,பணியில் அர்ப்பணிப்பையும் மேம்படுத்துகிறது. இதற்கு அறிஞர்கள் சொல்லும் வழிமுறைகள் - பயன் தரும் செயல்களில் அல்லது அதற்கான முயற்சிகளில் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் நூல்களை மீண்டும் மீண்டும் படித்து அதிலுள்ள கருத்துக்களை பின்பற்ற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அத்தகைய எண்ணமும் துடி துடிப்பும் உள்ளவர் என்பதைப் பிறருக்கு உணர்த்த அந்தக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஊதியத்திற்கான பணி தவிர்த்து பொழுது போக்காகச் சிலவற்றையும் கற்றுக்கொள்ள ஆர்வப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.

No comments:

Post a Comment