சொன்னதும் சொல்லாததும் -6
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலிலியோ கலிலி முதன் முதலாக ஒரு தொலை நோக்கியை உருவாக்கி வானத்தை ஆராய்ந்தவர்.இரவில் விண்மீன்களும் கோள்களும் வானில் எப்படி நகர்ந்து செல்கின்றன என்பதை நுட்பமாக ஆராய்ந்து தெரிவித்தவர். சூரியனின் புறப்பரப்பை ஆராய்ந்து அறிவித்தவர்.தான் சேகரித்த புள்ளி விவரங்களைக் கொண்டு அவர் கண்டறிந்து சொன்னவை அப்போது மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தின.வானத்தைப் பற்றி மக்கள் அதுவரை கொண்டிருந்த எண்ணத்தை முழுதுமாக மாற்றின.வழுவழுப்பான புறப்பரப்பைக் கொண்டதில்லை,நிலவில் மலைகளும் பள்ளத் தாக்குகளும் இருக்கின்றன என்பதையும், பால்வெளி மண்டலம் வெறும் ஒளிப்புள்ளி இல்லை,அதில் பல மில்லியன் விண்மீன்கள் இருக்கின்றன என்பதையும், வெள்ளி பூமியைச் சுற்றி வரவில்லை சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும் ,கரும் புள்ளிகள் சூரியனில் இருக்கின்றன என்பதையும் கண்டறிந்து உலகிற்குச் சொன்னவர் கலிலியோ
அவர் காலத்தில் மதவாதிகள் சொன்னதே வேதம்.அவர்கள் ஒரு முறை சொன்னால் அது ஆயிரம் முறை சொன்னது போல என்று மக்கள் நம்பி வாழ்ந்த காலம். அவர்களுடைய கருத்துகள் முழுவதும் அவர்களுக்கு நம்பிக்கை தந்த வெறும் ஊகங்களே .உறுதி செய்யப் படுவதற்குப் போதுமான ஆதாரமில்லாமல் உருவானவைகளாகும்.
தங்கள் எண்ணங்களுக்கு எதிராக அறிவியல் உண்மைகள் என்ற பெயரில் சொல்லப்படும் கருத்துகள் மதவாதிகளை கோபமூட்டின . கடவுள் தண்டிப்பார் என அதற்கு எதிராக மக்களை அச்சமூட்டினர்.வானவியலில் அறிவியல் பூர்வமான புதிய உண்மைகளை வெளியிட்டதால் கலிலியோ சிறைப்பிடிக்கப்ப்பட்டு கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.ஒரு விசாரணைக் குழு முன்னர் மண்டியிட்டு எல்லோர் முன்னிலையில் பொது மன்னிப்புக்காக குற்றத்தை ஒப்புக் கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டார்." கலிலியோவாகிய நான் சொன்ன தவறான கருத்துக்களை- சூரியன் மையக் கொள்கையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.அவற்றைத் திருத்த எதிர் சோதனைகச் செய்வேன் " என்று சொல்ல வைத்தனர். அவர் அவர்களுக்காகச் சொன்னாலும், ' நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கோள்கள் அப்படித்தான் இயங்கும் " என்று முனுமுனுத்தார். அதன் பின்னரே அவர் தொடர்ந்து வாழ அனுமதிக்கப் பட்டர் என்றாலும் வாழ்நாள் முழுதும் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.
அவர் தன்னம்பிக்கை தரக்கூடிய பல கருத்துக்களை அவ்வப்போது எதிர்கால சந்ததியினருக்காக்ச் சொல்லியிருக்கிறார்.
"அறிவியல் கொள்கைகளை மறுத்து விட்டு கற்பனைக் கருத்துக்களை ஒருவர் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும் "
எந்த உண்மையும் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் கற்பனைக் கருத்துக்களை அள்ளி விட்டு மக்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கவும் , ஏமாற்றவும் முயல்வார்கள். என்பதை இதன் மூலம் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
“ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக் கொள்ள முடியும் என்றவாறு ஒன்றுமே தெரியாத ஒரு மனிதரை நான் இன்றுவரை சந்தித்ததே இல்லை” என்று அவர் சொன்ன வாக்கியம், ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு திறமை இருக்கிறது என்பதைப் பறை சாற்றுவதைப் போல இருக்கிறது.
இந்தியாவில் ஆன்மிகம் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. மக்கள் தொகை மிக்க ஒரு சமுதாயத்திற்கு ஆன்மிகம் பலம். அறிவியல் வளர்ச்சிக்கு திரையிடுவதால் ஆன்மிகம் பலவீனம்.சிலர் முயற்சியால் ஆன்மிகம் ஒரு அறிவியலாக எழுச்சிபெற்றும் இந்திய சமுதாயத்தில் அறிவியல் எண்ணங்கள் சுயமாக மலரவில்லை.இதற்குக் காரணம் ஆன்மிகத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர் மக்கள் ஆன்மிகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். சுய சிந்தனை இல்லாத மக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வரை எவ்வளவு முயன்றாலும் உண்மையான வளர்ச்சி கிடைக்காது என்பதை
இது உணர்த்துவதாக இருக்கிறது.
No comments:
Post a Comment