அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் (428)
எதிர்மறையான எண்ணங்கள் , எதிர்பாராத திருப்பங்களை எதிர் கொள்ளும் திறமையின்மை ,பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து சரியாக முன் திட்டமிடத் தெரியாமை போன்ற வற்றால் இழப்பு வரும் என்ற எண்ணம் மேலோங்க பயம் மனதில் நிலை கொள்கிறது . எந்தச் சமுதாயத்தில் அஞ்சுவதற்கு அஞ்சுவதும் அஞ்சக் கூடாததற்கு அஞ்சாமையும் ஓங்கி வளர்ந்திருக்கிறதோ அந்தச் சமுதாயம் வளமான சமுதாயமாக வளர்ந்து வரும் .ஆனால் அஞ்சுவதற்கு அஞ்சாமையும் அஞ்சக் கூடாததற்கு அஞ்சுவதும் ஓங்கி இருந்தால் அந்தச் சமுதாயம் காலப் போக்கில் காணமல் போகும் அஞ்சுவதற்கும்,அஞ்சக் கூடாததற்கும் அஞ்சினால் அவர்கள் அறியாமையை போக்க சமுதாயம் முயலவேண்டும் . அதனால் அந்தச் சமுதாயம் முன்னோக்கி வளர வாய்ப்புகள் ஏற்படும். அஞ்சுவதற்கும்,அஞ்சக் கூடாததற்கும் அஞ்சாதிருந்தால் அந்தச் சமுதாயத்தை தண்டித்தே திருத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சமுதாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் . இயற்கை மூலம் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அறிவு என்பது அறியாமையை அகற்றும் ஒளி,அறியாமை என்பது ஒளி இல்லாமையால் படரும் இருள் .ஒளி ஒரு பொருளின் ஆற்றல் வடிவம்,இருள் பொருளுமில்லை ஆற்றலுமில்லை ஒன்றுமில்லாத ஒன்று.ஒளி உயர்திணை போன்றது இருள் அஃறினை போன்றது.ஒளியை உண்டாக்க ஒளி மூலத்தை உருவாக வேண்டும். மூலமில்லா இருளை உண்டாக்க ஒளி மூலத்தைத்தான் அழிக்க வேண்டும். ஒளி இல்லாத இடத்தில் இருள் ஆட்சி செய்யும், ஒளி வந்து விட்டால் இருள் ஓடி விடும். ஒளி என்றைக்கும் இருளைக் கண்டு பயப்பட்டதே இல்லை. தெளிவான, ஆழமான, நுட்பமான அறிவென்னும் ஒளியே மனதில் நிலை கொண்டிருக்கும் பயமென்ற இருளை அகற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது . பயம்(இருள்) முன்னேற்றத்தை தடுக்கும். உள்ளார்ந்த விருப்பங்கள்(ஒளி) முன்னேறத் துடிக்கும். முன்னது வலுவாக இருந்தால் சுய விருப்பங்களை முழுமையாக நிறைவேற்றிக் கொள்வதில் தடைகள் இருக்கும்.பின்னது வலுவாக இருந்தால் பயம் தானாக மங்கி மறையும்,சாதனைகள் பிறக்கும்
No comments:
Post a Comment