Thursday, November 8, 2012

Sonnathum Sollaathathum


சொன்னதும் சொல்லாததும்-4. ஐசக் அசிமோவ் இரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். 1920 ல் பிறந்த இவர் தனது 50 வது வயதில் 100 நூல்களை எழுதியவர் . இவருடைய நூல்கள் எல்லாம் பொது மக்களுக்கான அறிவியலாக இருந்தன.ரோபோட் இயலின் தந்தை எனப் பெருமைப்படுத்தப் பட்டவர். இவர் நூல் எழுத்துவது அவருடைய 11 வது வயதிலிருந்தே தொடங்கியது. தன்னுடைய எழுத்தின் மூலமாக விஞ்ஞானத்தை சாதாரண மக்களுக்கு எடுத்துச் சென்று பரவலாக்கியதால் அமெரிக்காவின் வேதியியல் கழகம் இவருக்கு விருதளித்து கௌரவித்தது. இவர் உயிர் வேதியியல் படித்ததேயில்லை. ஆனால் போஸ்டனில் உள்ள ஒரு மருத்துவப் பள்ளி இவருக்கு உயிர் வேதியியல் துறையில் துணைப் பேராசிரியர் பதவி கொடுத்தது. அங்கு அவர் புதிதாக உயிர் வேதியியல் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரேயொரு சொற்பொழிவு மட்டுமே ஆற்றுவார். ஒருசமயம் இவருடைய தந்தை அசிமோவின் அறையில் நிறைய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்தார். உடனே தன் மகனைப் பார்த்து இதையெல்லாம் எப்படிப் படித்துக்கற்றாய் என்று கேட்டார்? எல்லாம் உங்களிடமிருந்துதான் என்று அசிமோவ் சொல்ல அவருடைய தந்தைக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது.” நானா ,எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாதே” என்றார். அதற்கு அசிமோவ்,"உங்களுக்கு அவை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் அறிவை மதிக்கின்றீர்கள்,அதை ஏன்,எதற்கு மதிக்க வேண்டும் என்று எனக்கும் கற்றுக் கொடுத்திருக்கின்றீர்கள். மற்றதெல்லாம் தானாக என்னிடம் வளர்ந்து விட்டது" என்று கூறினார் . ஒவ்வொரு பிள்ளையும் மகத்தான சாதனை படைக்கும் அளவிற்கு முன்னேற முடியும் என்பதை அசிமோவின் வாழ்கையில் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்களைக் கொண்டேநிறுவமுடியும். நாம் எந்தத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அந்தத் துறையில் மேலும் மேலும் ஈடுபடுவதே சிறந்த வழி.எவர் சிறுவதிலேயே தன் விருப்பத் துறையைத் தேர்தெடுத்து அப்பொழுதிலிருந்தே ஈடுபாடு காட்டத் தொடங்குகின்றார்களோ அவர்கள் எதிர்காலத்தில் அத்துறையில் சிறந்து விளங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒருவருக்கு ஒரு செயலைச் செய்யுமாறு சொல்லிக் கொடுப்பதை விட அதை அவரே முனைந்து செய்யுமாறு தூண்டுவது 100 மடங்கு வலிமையானது.கல்வி தேடலை இது வலிமையாகத் தூண்டி விடுவதால், ஒருவரால் கல்வியை விரிவாகவும், நுட்பமாகவும், தெளிவாகவும்,முழுமையாகவும் சுயமாகவும் கற்றுக் கொள்ள முடிகிறது. சுய தூண்டலை உள்ளுக்குள் ஏற்படுத்தக்க் கூடிய ஆற்றல் மிக்க ஒரு சில வார்த்தைகள்,பள்ளிக்கூட தொடர் வகுப்புக்களை விட சக்தி வாய்ந்தது. இதை உணர்ந்த போஸ்டன் நகர மருத்துவப் பள்ளி மாணவர்கள் கல்வி தேடலை சுயமாக மேற்கொண்டு பிற்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்திலேயே சுய தூண்டலை அசிமோவின் அர்த்தமுள்ள வார்த்தைகளால் ஏற்படுத்தினார்கள்.அசிமோவிற்கு அவரது தந்தை இதைத்தான் செய்தார். உயிர் வேதியியல் பற்றி எதுவும் தெரியாத அசிமோவும் அத்துறை மாணவர்களுக்கு அதைத்தான் செய்தார். ஒரு தந்தை தன் மகன் படிக்கும் பாடங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அவனே பாடங்களைப் படிக்க விருப்பம் கொள்ளுமாறு செய்தாலே போதும் . இக் கருத்தை நாம் அசிமோவ் மற்றும் அவரது தந்தையின் உரையாடலிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது நம் பள்ளிகளும் கல்லூரிகளும் இப் பழக்கத்தைப் பின்பற்றி மாணவர்களை உற்சாகப் படுத்தி சுயமாக முன்னேற வழிகாட்டலாமே . படிக்காத அப்பாக்களும் இந்த வழிமுறையைப் பின்பற்றலாமே. உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை குறைவாக இருப்பதால் நீண்ட சொற்பொழிவுகளில் அதிக அக்கறை காட்டாத நம் மாணவர்களுக்கு தொடர்ந்த சொற்பொழிவுகளை விட கலந்துரையாடலும் பயிற்சியுமே நற்பயனளிக்கும்.

No comments:

Post a Comment