Thursday, November 1, 2012

short story


சிறு கதை

யாமிருக்க பயமேன்

டாப் சிலிப். முத்தையருக்கு அந்தக் குளிரிலும் உடல் நடுங்கியது செய்த கொலையை எப்படியும் கண்டு பிடித்து விடுவார்கள் ,விடிந்தவுடன் நாமே போலீசிடம் சரணடைந்து விடுவதுதான் உத்தமம் என்று எண்ணினார்.

முத்தையர் 40 ஆண்டுகாலமாக அம்மன் கோயில் அர்ச்சகர். அன்றைக்கு கன மழை காரணமாக கோயிலில் அவரைத் தவிர யாருமில்லை.அப்போது டாப் சிலிப் கிங் மேக்கர் தர்மராஜன் அங்கு வந்து பாலிஷ் செய்து திருப்பி அனுப்புவதாகக் கூறி ஒரு ஐம்பொன் சிலையை எடுக்க முயன்றார்.

தர்மராஜன் ஒரு அதர்மராஜன். குழந்தைப் பருவத்திலிருந்தே குற்றங்கள் செய்து இப்போது கை தேர்ந்த மூத்த குடிமகன்.கட்டப் பஞ்சாயத்து ,நில அபகரிப்பு, காட்டு மரம் கடத்தல் ,கஞ்சாப் பயிர், காண்ட்ராக்ட் மோசடி , பொய்யான கணக்கு வழக்குகள், நன்கொடை வசூலித்து எடுத்துக் கொள்ளுதல் கோயில் சிலை கடத்துதல் போன்ற குற்றங்களுக்கு ஏகபோக குத்தகை . அரசியல் செல்வாக்கால் அவரை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சிலை தன் கண் முன்னாலே கடத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத முத்தையர் எதிர்க்க இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சந்தனம் அரைப்பதற்காக கையில் வைத்திருந்த ஒரு சதுரக் கல்லை அவர்மீது தூக்கி எறிய ,நிலை தடுமாறிய தர்மராஜன் மழையால் ஊறிப் போயிருந்த கோயில் சுவரில் மோத, சுவர் இடிந்து போனதால் உருண்டு தெருவில் போய் விழுந்தார். அப்புறம் அவர் எந்திரிக்கவே இல்லை. முத்தையருக்கு பயம்.தாம் கொலை செய்து விட்டோமோ என்று. கோயிலை பூட்டிவிட்டு சீக்கிரமாகவே வீட்டுக்குப் போய் விட்டார் .இரவு முழுக்கத் தூங்கவே இல்லை. விடிந்ததும் போலிஸ் ஸ்டேசன் செல்ல வெளியே வந்தபொழுது அங்கே மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டு அர்ச்சகரை நோக்கி ஓடி  வந்தனர் .தவறுதலாக நாம் செய்த கொலை அதற்குள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது போலும் என்று நினைத்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஐயா அர்ச்சகரே நேற்றுப் பெய்த கன மழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து விட்டது. அந்த நிலச் சரிவில் நம்ம தர்மராஜன் சிக்கி மாண்டுவிட்டார் ,எதோ சாமி குத்தம் போல என்று  கூறினார்கள் 

யாரும் பார்க்காவிட்டாலும் ஆத்துல டிவி ஓடிக்கொண்டிருந்தது. ஒரு முக்கியச் செய்தி என்று செய்தி வாசிப்பவர் திடீரென்று தோன்றி " கடந்த ஒரு வாரமாகப் பெய்த கன மழையால் டாப் சிலிப்பில் கோயில் சுவர் இடிந்து நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளைத் துரிதப் படுத்துவதற்காக பார்வையிடச் சென்ற அப்பகுதி அரசியல் பிரமுகர் தர்மராஜன் எதிர்பாராத விதமாக மண்சரிவில் சிக்கி மாண்டுபோனார். மீட்புக் குழுவினர் நெடு நேரம் போராடி உயிரற்ற அவரது உடலை மட்டுமே மீட்க முடிந்தது. அன்னார் மறைவிற்கு முதலமைச்சர் வருத்தம் தெரிவிப்பதாக.... " வீட்டுக்குள் நுழைந்த முத்தையரால் தொடர்ந்து செய்தியைக் கேட்க முடியவில்லை. அவர் கண்கள் மழை பெய்யத் தொடங்கின.

No comments:

Post a Comment