ஊழலற்ற சமுதாயம் –2
வறுமை காரணமாக ஒருவர் தவறு செய்கின்றார் என்றும் ,தவறு செய்வதற்கு வறுமைதான் காரணம் என்றும் சொன்னால் தவறு செய்யாமலிருக்க அந்த வறுமையை எப்படிப் போக்குவது என்று சிந்தித்துச் செயல்படுவது ஒரு சிறந்த சமுதாயத்தின் கடமையாகும் . இது அரசின் முதண்மைக் கடமைகளுள் ஒன்றுமாகும்
ஒரு வேலையில் இருந்துகொண்டு அதற்கான ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு வாழும் போது வறுமை எப்படி வந்தது ? அந்த வறுமைக்கு யார் பொறுப்பு ? எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் வறுமை இயற்கையானதில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் . வறுமையின் ஆதி மூலத்தை ஆராயும் போது இது தெளிவாகப் புரிய வருகின்றது .
ஒருவரின் வறுமை மூவேறு காரணங்களினால் வரலாம். முதலாவது அவரது திறமையின்மையால் வரும் இழப்பு .உரிமையுள்ள கல்வி,, ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தனித்த திறமை, ,தொழில் நுட்பம், ஆக்கப்பூர்வமான உழைப்பு போன்றவை ஒருவது திறமைகளை வெளிப்படுத்தும். வளர்த்துக்கொண்ட திறமைகளைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டாலும் , அல்லது இழந்துவிட்டாலும் வறுமை விழித்துக்கொண்டு விடும். இரண்டாவது வரவுக்கு மீறி செலவு செய்யும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்வதால் வருவது. கவர்ச்சி கரமான விளம்பரங்களின் தாக்கத்தினால் இன்றைக்குப் பலரும் தேவையின்றி தேவையில்லாத பொருட்களை வாங்கி தேவையான பொருளைத் தேவையான நேரத்தில் வாங்கமுடியால் கஷ்டப்படுகிறார்கள். ஆடம்பரத்தில் கொண்டுள்ள மோகத்தாலும் , உல்லாச வாழ்க்கையில் கொண்டுள்ள உள்ளார்ந்த விருப்பத்தாலும் தவறான செலவினங்களைத் தவிர்த்துக் கொள்ளாததாலும்,தகுதிக்கு மீறிய வாழ்க்கை முறையில் ஈடுபடுவதாலும் செலவு வரவுக்குள் அடங்குவதில்லை. வறுமை மிகக் குறுகிய காலத்திற்குள் நிலைகொண்டு விடுகின்றது .மூன்றாவது மது . மாது போன்ற தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி ஈட்டிய பொருளை வீணாக்குவதால் வரும் வறுமையாகும். இப்பழக்கம் உரிமையான திறமைகளை விழுங்கிவிடுவதால் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி வாழ்க்கையில் அனைத்தையும் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும். இந்த மூன்று காரணங்களிலும் வறுமைக்கு புறக்காரணம் என்று எதுவுமேயில்லை. பணியில் இருந்து ஊதியம் பெறும் போது வறுமை காரணமாக ஒருவர் தவறு செய்வதாகக் கூறினால் உண்மையில் அருவருடைய வறுமைக்கு அவர் மட்டுமே காரணமாக இருக்கின்றார்.
வறுமை தீண்டாமலிருக்க பொருளீட்டும் திறமைகளுள் ஒன்றை அறிந்து பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இத்திறமைகளைப் கல்வியாலும் பயிற்சியாலும் பெறமுடியும் .எவ்வளவுக்கெவ்வளவு திறமைகளை வளர்த்துக்கொண்டோமோ அவ்வளவுக்கவ்வளவு ஒருவர் பொருளீட்டும் வாய்ப்பைப் பெறுகின்றார் .வறுமையை விரட்ட எவ்வளவு பொருளீட்டவேண்டுமோ அவ்வளவு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஓவ்வொருவரின் இளமைக்காலக் கடமையாகும் .. அல்லது எவ்வளவு திறமை இருக்கின்றதோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் .. வாழ்க்கை தகுதிக்கு ஏற்ப அமைகின்றது. ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கு ஏற்ற வாழ்க்கையையே வாழ வேண்டும் என்பது இயற்கையின் அனுமதி .
லஞ்சம் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்பதை விட செய்யாமலிருந்து காலப்போக்கில் தங்கள் தனித் திறமைகளை நிரந்தரமாக இழந்துவிடுகின்றார்கள் என்பதே உண்மை. திறமைக் குறைவு காலப்போக்கில் திறமை இழப்பாகிவிடுகின்றது. அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை சம்பளத்தால் தீர்மானிக்கப்படுவதை விட வாங்கும் லஞ்சத்தால் தீர்மானிக்கப்ப ட்டுவிடுகின்றது. லஞ்சமின்றி அவர்களால் வாழவே முடியாது என்ற நிலைக்கு ஆளாகிவிடுவதால் எந்த அறிவுரையும் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
லஞ்சம் வாங்கி கூடுதல் பொருளீட்டுவதால் தகுதிக்கு மீறிய வாழ்க்கையும் , ஆடம்பரச் செலவு செய்யும் புதிய பழக்கத்தால் வரவிற்கு மீறிய செலவும் சம காலத்தில் ஏற்படுவதால் வறுமை வாழ்க்கையில் சட்டெனெ உட்புகுந்துவிடுகின்றது . வறுமையை விரட்டித் தொடர்ந்து ஆடம்பரமாகவே வாழ கூடுதல் லஞ்சம் வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். கூடுதல் லஞ்சம் நாட்டின் விலைவாசி ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைகின்றது. ஏனெனில் லஞ்சம் வாங்குபவர் பொருளை வாங்கவேண்டும் என்று விரும்பினால் என்ன விலை கொடுத்தும் வாங்குவார் அதற்காக லஞ்சம் கொடுப்பவர்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருப்பதால் அவர்கள் அவசியமாக வாங்கவேண்டிய பொருளை விலைகொடுத்து வாங்கமுடியாது துன்பப்படுவார்கள். உண்மையில் லஞ்சம் வாங்குவோரின் போலித்தனமான வறுமை லஞ்சம் கொடுப்பவர்களின் உண்மையான வறுமைக்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது.
No comments:
Post a Comment