மக்களுக்கு அவ்வப்போது அறிவுரைகூறுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது. நாடு தனக்கு மட்டுமே உரிமையுள்ள சொத்து என்று நினைக்கக் கூடாது .தங்களைக் கண்காணிக்க , கட்டுப்படுத்த தங்களுக்கு மேல் யாருமில்லை என்று கடமை தவறக்கூடாது .மக்கள் எல்லோருக்கும் எல்லா விவரங்களையும் அறிந்தவர்களாக இருக்க முடியாது. அதற்கு அவசியமுமில்லை .தங்களுக்குத் தெரியாத விஷயங்களினால் ஏமாற்றப்படலாம் என்பதற்காக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எல்லோருக்கும் பொதுவாக அரசங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். மக்களாட்சியில் அரசாங்கம் என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பே. மக்கள் மக்களால் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு .
ஆனால் நாட்டின் வரவு செலவு த் திட்டங்களில் தொடர்புகொள்ளும் போது யாருமே சம்பாதிக்க முடியாத அளவிற்கு சம்பாதித்து விடவேண்டும் என்று பேராசைப்படும் அரசியவாதிகளால் நேர்மையான ஆட்சியைத் தர முடிவதில்லை. இவர்களுடைய சம்பாத்திய வழிமுறை அரசியல் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டு தண்டிக்கப்படுவதிலிருந்து விதிவிலக்கு பெற்றது போன்ற ஒரு தோற்றத்தைத் தருவதால் அது உயர் அதிகாரிகளிடமும் பரவி , அடிப்படை ஊழியர்களிடமும் ஊடுருவி , மக்களையும் தொற்றிக்கொண்டு வருகின்றது
அரசாங்கம் வெறும் அதிகாரத்தால் மட்டுமே ஆள நினைக்கின்றது . முன்னேற்ற நடவடிக்கைகளை இனமறிந்து முழுமையாக ஈடுபடாமலும் .அதை மக்கள் நோக்கமாக மாற்றி நாடு தழுவியவாறு முடுக்கிவிடாமலும் ,எதிர் கட்சியினருடன் சொற்போர் புரிவதையே தங்கள் அன்றாடப் பணி என்றிருக்கும் அரசியல்வாதிகள் , மக்களுக்கு வேண்டிய நல்லனவெல்லாம் தானாக நடக்கவேண்டும் என்ற நினைப்புடனே செயல்படுகிறார்கள்
இயற்கையால் மட்டுமே அப்படி நடக்கமுடியும் .ஏனெனில் இயற்கையில் ஒவ்வொன்றும் ,ஒவ்வொரு அமைப்பும் தத்தம் பணிகளை செவ்வனே செய்கின்றன .கடமை தவறுவதேயில்லை .எப்படி இருந்தததோ, எப்படி இருக்கப்போகின்றதோ, அப்படியே இருந்துகொண்டு செயல்படுவதால் இயற்கையின் பொதுவுடைமை என்றைக்கும் மாறாதிருக்கின்றது அதனால் இயற்கையில் எங்கும் கண்காணிப்புப் பணி அவசியமில்லாதிருக்கின்றது. .ஒவ்வொரு அரசியல்வாதியும் இயற்கை போலச் செயல்படவேண்டும் என்ற நன்னெறியையே மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது போல இயற்கை நடந்து கொள்கின்றது .
சமுதாயம் மனதால் ஆளப்படும் மக்களால் ஆனது .மனதால் ஆளப்படும் எந்த அமைப்பையும் புறத்தோற்றத்தால் மதிப்பிடவே முடியாது .எனவே கண்காணிப்பு என்பது அவசியமாகின்றது . இந்த கண்காணிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களால் ஏற்படுத்தப்படும் தடைகளை அகற்றுகின்றது . இதற்காகத்தான் அரசாங்கம் வரி வசூலிக்கிறது ,மக்களும் வரி செலுத்துகிறார்கள் .அரசாங்கத்தின் வருவாய் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமில்லை , வளர்ச்சியைத் தடை செய்யும் செயல்களையும் அகற்றுவதற்காகவும் ஆகும்
No comments:
Post a Comment