Tuesday, January 5, 2021

ஊழலற்ற சமுதாயம் –4

 

 

யாரும் வறுமை காரணமாக லஞ்சம் வாங்குவதில்லை.. ஆடம்பரமான உல்லாசவாழ்க்கையில் மயக்கம் கொண்டு லஞ்சம் வாங்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்பவர்களே அதிகம் கொடுக்கப்பட்ட உழைப்பையும் செய்யாமல் , அளவுக்கு மீறிய தீனியை உண்பதால் உடலில் கொழுப்புக்கள் படிந்து தொந்தியும் தொப்பையுமாகத் தோன்றுவார்கள். வெளிப்படைத்தன்மை இல்லாததால் அவர்களுடைய பேச்சையும்  செயலையும் புரிந்து கொள்ளமுடியாது. எதாவது விவரம் கேட்டால் பணிவின்றி எரிந்து விழுவார்கள். மனைவி மக்களுக்குக் கூட  உண்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் . தன்னுடைய எண்ணத்தையும் செயலையும் மூடி மறைக்க நேரத்திற்குத் தகுந்தார் போல மாறி மாறி பேசும் பழக்கம்  இருக்கும். உல்லாச வாழ்க்கையில் மேலும் மேலும் ஈடுபட அவர்களுடைய தேவை அதிகமாகி பெரிய தவறுகளையும் ,குற்றங்களையும் செய்யத் துணிவார்கள். தான் மாட்டிக்கொண்டுவிட்டால் தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு சில உயர் அதிகாரிகளுடன் தொடர்பைப்  புதுப்பித்துக் கொண்டு  அவ்வப்போது வாழ்த்து தெரிவிப்பார்கள், பண்டிகைக்  காலங்களில்  பரிசுப் பொருட்கள் ,இனிப்புத் திண்பண்டங்களை அன்பளிப்பாய் வழங்குவார்கள்.  அவர்களுடைய வீட்டு விழாக்களில்  சொந்தக்காரர் களையும் விஞ்சி ஒரு உழு மாடுபோல வேலை செய்வார்கள். உல்லாச வாழ்க்கைக்காக இலஞ்சம் வாங்குவோர்களால் சமுதாயத்தில்  உளவியல் பாதிப்புக் களினால்  ஏற்படும் மனநிலை மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சியை பெரிதும் குன்றிப்போகச் செய்கின்றது. நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சிதான்.  அது வேறு இது வேறு அல்ல.

 

இலஞ்சம் வாங்குவோர் கடமையை விலைக்கு விற்கிறார்கள் . தவறான அனுமதி கொடுத்து  கடமையில் தவறுசெய்வதற்கு அதிக இலஞ்சம் என்பதால் அதைச் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அரசாங்கம் மக்களுக்குக்  கொடுக்கவேண்டிய  அனுமதி  இவர்களுடைய கையில் ஒரு விலை பொருளாகிவிடுகின்றது இதற்கு MRP  என்று எதுவும் இல்லாததால்  ஒவ்வொரு நாளும் ஒரு விலை , ஒவ்வொருவருக்கும் வேறு விலை

 

 இவர்களுக்கு இலஞ்சம் கொடுப்பதற்கு  இலஞ்சம் கொடுப்பவர்கள் தவறான வழியில் பொருள் சம்பாதிக்க வேண்டியிருக்கின்றது. அல்லது லஞ்சம் கொடுத்ததால்  அதை மீட்டுப் பெற வேண்டிய கட்டாயத்தால் தவறு செய்ய வேண்டியிருக்கின்றது. மக்கள் உடல் தகுதிக்கு மீறி  அதிகம் உழைக்க வேண்டியிருக்கின்றது. இதனால் திறமையினால் பொருள் சம்பாதிக்கும் நல்வழியை விட்டுவிட்டு ,தவறான வழிமுறைகளினால் பொருள் ஈட்டும் முறையைப் பின்பற்ற விருப்பம் கொள்கின்றார்கள். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம்  காணப்படவில்லை.. இந்நிலை கல்வி யறிவில் கொண்டுள்ள நம்பிக்கையை  ஏறக்குறைய எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள் என்பதை த் தெரிவிக்கின்றது. சம்பாதிக்க கல்வியறிவு , தனித்திறமை ,உடல் உழைப்பு எதுவும் தேவையில்லை ஊழல் ,செய்தும் ,இலஞ்சம் வாங்கியும் , ஏமாற்றியும்  சம்பளத்தை விடப் பலமடங்கு அதிமாகச் சம்பாதிக்க முடியும் என்பதை நிலைப்படுத்த  மக்கள் நல்வழியை விட்டுவிட்டு அல்வழியைப் பின்பற்றி ஒழுகி சமுதாய நலனைச் சீர்குலைக் கின்றார்கள் . லஞ்சம் வாங்குவோர் உழைக்காமல்  உல்லாசமாய் வாழ்வதும், இலஞ்சம்  கொடுப்போர்  கடுமையாக ,உழைத்துக்  கஷ்டப்பவதும் சமுதாயத்தில் காணப்படும் ஒரு இழிநிலை. மக்களின் மனநிலையை இது  மிக எளிதில் பாதிக்கின்றது . மேலும் இப் பாதிப்பு விரைந்து மக்களிடையே  பரவுவதற்கும் காரணமாக அமைத்து விடுகின்றது. நாட்டின்  வளர்ச்சி மக்களின் ஆக்கத் திறமைகளினால் இல்லாது ஆகாத திறமைகளினால் அமைந்தால் அது போலித்தனமான வளர்ச்சியாக மட்டுமே இருக்கும். இந் நிலை ஆட்சியாளர்களுக்கும்  , பொருளாதார வல்லுனர்களுக்கும் தவறான புள்ளிவிவரங்களைத் தருவதால் . நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மதிப்பிட முடியாதிருக்கிறது. தவறான மதிப்பீடுகள் தவறான முன்னேற்றத்திற்கே வழிகாட்டுகின்றது . அதனால் தான் நிறைவேற்றப்பட்ட எந்தத் திட்டமும் முழு வெற்றியைத்  தந்து மக்களுக்குப் பயனளிக்கவில்லை .

 

இலஞ்சத்தால் கூடுதல் பொருள் ஈட்டுவோர் , அதைப் பெரும்பாலும் தவறான வழிகளில் செலவு செய்வதால் நாட்டில் இனமறிந்து கொள்ளமுடியாத  குற்றங்களும் குற்றவாளிகளும் பெருக்கிக் கொண்டே போகின்றார்கள் . பணத்தை வெளிநாடுகளில் முடக்கி வைப்பதால் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குக் கிடைக்கும்  நிதி குறைவாகின்றது. இலஞ்சம்  வாங்குவோர் குடும்பத்தில் இலஞ்சம் வாங்குவதை தெரிந்திருந்தாலும்  தெரியாவிட்டாலும் அதைப் பெரும்பாலும் எதிர்ப்பதில்லை. மாட்டிக்கொள்ளாமல் செய்யுமாறு மட்டுமே அறிவுரை கூறுவார்கள். இதற்குக் காரணம் சமுதாயத்தில் மற்றவர்களை விட  ஒவ்வொருவரும் ஒருபடி மேலாக வாழவேண்டும் என்று நினைப்பதுதான்   . இது  ஒரு போட்டி மனப்பான்மையாக  மக்களிடையே  ஏற்படுத்தி  சுய தூண்டுதலால் எல்லைதாண்டிப் போவதால் குற்றத்தின் பரிணாம வளர்ச்சி  முடுக்கப்படுவதுடன் , இயல்பு நிலையை ஒரு காலத்திலும் மீட்டுப்பெறமுடியாத ஒரு போக்குத் தன்மையை நிலைப்படுத்தி விடுகின்றது..      .   

 


No comments:

Post a Comment