தனக்குச் சிறிதும் உரிமையில்லாத சொத்து ,பணம், பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் தவறான வழிமுறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவையாவும் ஊழல் என்ற தலைப்பிற்குள் ஒன்றாகிவிடுகின்றன..இலஞ்சம் வாங்குதல் ஒருவரை ஏமாற்றி பொருள் பெறுதல், எல்லாம் ஒருவகையில் ஊழலின் புற வேற்றுமைகளே .வேலைக்காக ஊதியம் பெற்றுக் கொண்டு கடமையை விற்பது புற இலஞ்ச ஊழல் என்றால் கடமையாற்றாமல் சும்மா இருப்பது அக இலஞ்ச ஊழலாகும் அக இலஞ்ச ஊழலில் அவர்கள் வாங்கும் சம்பளப்பணமே இலஞ்சமாகிவிடுகின்றது .இவர்கள் சம்பளம் தரும் முதலாளியையும் ,வாடிக்கையாளர்களையும் சமகாலத்தில் ஏமாற்றுகிறார்கள்.இவர்களால் அரசு இயந்திரம் மற்றும் நிர்வாகத் துறையின் பயனுறுதிறன் வெகுவாகக் குறைந்து போகின்றது
எல்லோருக்கும் இலவசங்களை வழங்குவது ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் தெரியும்படி செய்யும் ஒருவகை ஊழலாகும் .சுயமாகச் சம்பாதிக்கும் வழிகள் யாவும் குறுகிவரும் நிலையில் இலவசங்கள் மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையே அளிக்கின்றது .இலவசங்களின் பின்னணியில் இருக்கும் பொது நலத் தீங்குகள் யாருக்கும் பெரிதாகத் தோன்றுவதில்லை . இலவசம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோருக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும். சமுதாயம் முழுமைக்குமான ஒரு திட்டமாக இருக்கக்கூடாது .யாரெல்லாம் உண்மையிலேயே வறுமைக்கு கேட்டிற்குக் கீழ் வாழ்கின்றார்கள் என்று மதிப்பிட்டுத் தெரிந்து கொள்ளமுடியாத நிலையில் இதை செம்மையாகச் செயல்படுத்தவும் முடியாது .மக்கள் தங்களை நம்பி மீண்டும் ஆட்சியில் அமர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அரசின் வருவாயை இலவசங்களாக மக்களுக்கு அள்ளிக் கொடுப்பது ஊழலின் நாடகமாகும் .மக்கள் எல்லோரும் தங்களுக்குத் தேவையான வற்றை தானே சம்பாதிக்கும் சம தகுதியுள்ளவர்களாக இருக்கும்போது ,அவர்களுடைய தேவைகளை இலவசங்களாகக் கொடுப்பது அவர்களை மேலும் சோம்பேறிகளாக்கிவிடும்..அரசாங்கத்திடமிருந்து இலவசங்களைப் பெறும் போது மேலும் மேலும் இலவசங்களை அரசாங்கம் தரவேண்டும் என்று விரும்புவார்கள். இது உழைக்கும் மனப்பான்மையை மனதிலிருந்து அகற்றிவிடுகின்றது . இலவசங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்கள் தங்களுக்கு வேண்டியத்தைச் சம்பாதிக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கவேண்டும்.அதுவே நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாங்கத்தின் செயல்முறையாக இருக்கும்.
No comments:
Post a Comment