ஊழலைத் தடுக்க எல்லோரும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியம் என்றாலும் அது மக்களுக்கு நிச்சியமான பயனளிப்பதில்லை .ஏனெனில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தாலும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் தட்டிக் கேட்கும் அதிகாரமில்லை. கிடைக்கும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளால் தடுப்பதற்கோ ,தண்டிப்பதற்கோ வழியில்லை. ஊழல் செய்வோர் தப்பித்துக்கொள்வதோடு தொடர்ந்து தவறுகளைக் கூடுதல் துணிவோடு செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்
மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க விழிப்புணர்வோடு இருந்தால் மட்டும் போதாது.அதற்குச் சமுதாயம் தழுவிய பாதுகாப்பும் சட்ட ரீதியான பாதுகாப்பும் வேண்டும். அதற்குப் பதிவுசெய்யப்பட்ட அதிகாரமுள்ள தனித்துவமான மக்கள் இயக்கமொன்று அமைக்கப்படவேண்டும் . ஒரு சிலர் சுய லாபத்திற்காக ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகப் பேசுவதையும் .பொய் சாட்சி சொல்லி ஆதாரங்களை அழிப்பதையும் மக்கள் இயக்கத்தின் மூலம் தடுக்க வேண்டும். ஊழல் வாதிகளுக்கு எதிரான எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் தனி மனிதர்கள் அல்லாது மக்கள் இயக்கத்தின் மூலமாகவே எதிர்கொள்ளவேண்டும். நல்லோர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் ,குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே காவலர்களால் துன்புறுத்தப்படுவதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் .
பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது தவறில்லை. ஏனெனில் அது உழைத்து முன்னேற நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உந்தற் காரணி .பணம் என்பது உண்ண உணவு , உடுக்க உடை ,இருக்க வீடு போன்றவைகளைப் பெறுவதற்காக மட்டுமின்றி கல்வி பெறுவதற்கும் , இன்ன பிற வாழ்க்கை வசதிகளைப் பெறுவதற்கும் பிறருக்கு உதவி செய்வதற்கும் தேவைப் படுகின்ற ஒரு கருவி .ஒரு மனிதன் தன் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ளும் போதுதான் பிறருக்கும், நாட்டிற்கும் பயன்தரக்கூடியவனாக ஆகின்றான். கூடுதல் சம்பாத்தியமே சேமிப்பாகவும், தொழில் தொடங்குவதற்கான முதலீடாகவும் இருக்கின்றது. சேமிப்பில்லாதவர்கள் தொழில் தொடங்க விருப்பம்கொள்ளும்போது கடன் வாங்குகிறார்கள்.கடன் சுதந்திரமாகச் செயல்படும் நிலையைச் சீர்குலைத்துவிடுவதால் தொழிலின் முன்னேற்ற நடவடிக்கைகளில் அதன் பாதிப்பு எதிரொளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளமுடியாதிருக்கின்றது . எனவே ஒவ்வொரு மனிதனும் கூடுதல் பணம் சாம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை . ஆனால் அப்படி நினைக்கும் போது அவர்கள் ஒரு சுய காட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும். .முதலாவது சம்பாத்தியம் நேர்மையான சுய உழைப்பின் மூலம் பெறப்படுவதாக இருக்க வேண்டும் .பிறரை ஏமாற்றி அபகரிக்கக் கூடாது.தீயவழிகளில் பொருள் திரட்டக் கூடாது . அடுத்து கூடுதல் சம்பாத்தியத்திற்கு ஓர் அடிப்படை நோக்கமிருக்கவேண்டும்.தனக்கும், பிறருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கவேண்டும் பெரும்பாலும் அடிப்படை நோக்கமில்லாத சம்பாத்தியம் ஒரு வரம்பிற்குள் அடங்குவதில்லை. .அது யாருக்கும் பயனின்றி வங்கிகளில், வீடுகளில் இரகசிய இடங்களில் ஒளித்து வைக்கப்படுகின்றன.நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம் முடக்கப்பட்டுவிடுவதால் முன்னேற்றம் பின்தங்கிவிடக் காரணமாகின்றது . சம்பாதியுங்கள் , நிறையச் சம்பாதியுங்கள் ஆனால் அது நேர்மையான வழியில் இருக்கட்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள்
No comments:
Post a Comment