ஊழல் ஒழிய வேண்டும் என்றல் அது வெறும் வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை உண்மையில் அது அவ்வளவு சுலபமான செயலில்லை . கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடின்றி சமுதாயத்தில் ஊழல் பெரிதாக வளர நாமே காரணமாகிவிட்டோம் .மக்களின் வாழக்கையோடு ஒன்றரக் கலந்து விட்ட ஊழலை ஒழிப்பது என்பது இன்றைக்கு எல்லோருக்கும் ரிய சவாலான காரியமாக மாறியிருக்கின்றது .
எல்லோரும் ஊழல் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றார்கள். எல்லோரும் ஏகமனதாக விரும்பும் போது ஊழல் எப்படி இன்னும் தடுக்கப்படாமல் இருக்கின்றது என்ற வியப்புடன் அதை நுண்ணாய்வு செய்யும் போது நம்முடைய விருப்பத்தின் உண்மையான முகம் தெரியவருகின்றது ஒவ்வொருவரும் மற்றவர்கள் செய்யும் ஊழலை மட்டுமே கருத்திற்கொண்டு எதிர்க்கிறார்கள் .அவர்கள் செய்யும் ஊழலை மிகத் தாராளமாக அனுமதித்துக் கொள்கின்றார்கள் .இவர்களுடைய எதிர்ப்புக் கூட அவர்கள் செய்யும் ஊழலை மூடி மறைப்பதற்காக மட்டுமே வெளிப்படுகின்றது . இந்தியாவில் கொஞ்சம் அதிகம் என்பதைத் தவிர கொரோனா தொற்றுக் கிருமி போல ஊழல் உலகெங்கும் விரிந்து பரவியிருக்கிறது .மேலும் இது தொடர்ந்து விரியும் பிரபஞ்சம் போல வியப்பின் உச்சியை எட்டுமளவிற்கு விரிந்து கொண்டே செல்கின்றது. கொரோனாவை ஒழித்தாலும் ஒழித்துவிடுவார்கள் ஆனால் ஊழலை மட்டும் ஒழிக்க மாட்டார்கள் .
ஊழல் ஒழிப்பு வெறும் வீரமான வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை. ஒரு செயல் திட்டத்தால் மட்டுமே நிறைவேற்றமுடியும் . அதையும் தனி மனிதனோ அல்லது அரசாங்கம் தனித்தோ ஈடுபட்டு வெற்றி காணமுடிவதில்லை .ஏனெனில் அது ஒரு மறைமுகமான ஒழுக்கமாக இருப்பதால் எல்லோரும் ஒன்றிணைத்து செயல்பட்டாலே அதை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும். தற்காலியப் பயன் கிடைக்கின்றது என்பதற்காக அதில் சுயவிருப்பம் கொள்வதை ஒவ்வொருவரும் புரிதலோடு தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
ஊழலைக் கட்டுப்படுத்தும் முயற்சியை யார் மேற்கொண்டாலும் அதை முழுமையாக நிறைவேற்றக் கூடிய கடமையும் அதிகாரமும் அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனால் ஊழல் ஒழிப்பில் ஆட்சியாளர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும். ஏழை -பணக்காரன், பதவியிலிருப்பவன்- பதவியில்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் ஊழல் ஒழிப்புக்கு எதிரானவை .ஊழல் ஒழிப்பு வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு முழு முதல் குற்றவாளி அரசாங்கமே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் . தலைக்கவசம் அணியாதவன் , வங்கியில் சேமிப்புக்கு கணக்கில் குறைத்த பட்ச பணம் இல்லாதவன் போன்றவர்களுக்கு கடுமையாக இருக்கும் சட்டம் ஊழல் புரிவோருக்கு அதில் பாதியளவு கூடக் கடுமையாக இல்லாமலிருப்பது அரசாங்கத்தின் தவறான ஊழல் கொள்கையையே படம் பிடித்துக் காட்டுகின்றது.
No comments:
Post a Comment