Mind without fear
மனவழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் சில பொதுவான காரணங்களோடு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் சில சிறப்புக் காரணங்களும் இருக்கும் .தாங்கிக் கொள்ள முடியாத தோல்விகளும் துன்பமும்,ஏமாற்றமும் மனக் குழப்பமும் ,அவமரியாதையும் மன வருத்தமும், சுயமதிப்பு இல்லாமையும் மனஉளைச்சலும்,கடின உழைப்பும் தொடரும் தூக்கமின்மையும் போன்றவைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது மனம் இயல்பாகச் செயல்படுவதில்லை. சரியாக ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கும் தன்மையை மறந்து விடுகிறது .ஒருமுகப்படுத்தி ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி சிந்திக்க முடிவதில்லை .சரியான நேரத்தில் செயலின்மையாலும் தவறான நேரத்தில் அவசரகதியில் செயல்படுவதாலும் தவறான முடிவுகளையும் செயல்களையுமே மேற்கொள்ள நேரிடுகின்றது.
மன வழுத்தத்தைப் போக்கிக் கொள்ள பல பயனுள்ள வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன .மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடித் தேவை என்பது சுயஆறுதலுக்கு ஒரு குறுகிய கால இடைவேளை. அதாவது எல்லாவற்றையும் ஒரேடியாய் ஒதுக்கி வைத்து விட்டு ,ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக இருக்க ஒரு சில நிமிடங்கள் தேவை.இந்த சில நிமிடங்கள் மனதின் எண்ண வோட்டத்தை திசை திருப்பிவிடுமாறு செய்யப் போதுமானது .கண்ணை மூடிக் கொண்டு மனதிற்குப் பிடித்தமான ,மிகவும் பரிச்சியமான ஒன்றைப் பற்றி வலுக் கட்டாயமாகச் சிந்திக்க இது இயலுவதாகிறது .மனதிற்குள்ளே ஒரு போட்டியை வைத்துக் கொண்டு சாதிக்க முயலும் போது இது மிகவும் எளிதாகிறது. எடுத்துக் காட்டாக எவ்வளவு வேகமாக மனக்கணக்காக ஈரிலக்க அல்லது மூவிலக்க எண்களின் பெருக்கலைச் செய்யமுடியும் என்று மாற்றுச் சிந்தனையை மேற்கொள்ளலாம் .தெரிந்த அளவு ஒரு படம் வரைந்து வண்ணம் தீட்டலாம் அப்படிச் செய்யும் போது மனதை அழுத்திக் கொண்டிருந்த விஷயம் காற்றோடு கரைந்து மறைந்து விடுகின்றது .
மனதை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை மேலும் மேலும் சிந்திப்பது தவறல்ல. அதில் சிக்கிக் கொள்ளாமல் விடுபடுவதற்கான வழிகளை அறிந்து செயல்பட முடியுமானால் .இதற்குப் பயிற்சியும் மனப் பக்குவமும் வேண்டும் . மனவழுத்தத்தில் சிக்கிக் கொள்வதென்பது ஒரு நீர்ச் சுழலில் மாட்டிக்கொண்டதைப் போன்றது .மேலும் மேலும் அமிழ்ந்து போக நேரிடலாம் .இதற்குக் காரணம் அச் சூழலில் அறிந்த விஷயங்கள் அறியாதவைகளாகவும் அறியாதன அறியப்பட்டதாகவும் ஆகிவிடுகின்றன இது விடுபடுவதற்கான வாயில்களை நாமே மூடிவிடுவதற்கு ஒப்பானது.அதனால் மனவழுத்தத்தில் இருக்கும் போது முடிவு எடுப்பதை விட அதிலிருந்து விடுபட்ட பின் முடிவெடுப்பதே சரியானதாக இருக்கும்
.மனவழுத்தத்திலிருந்து விடுபட யோகா போன்ற மென்மையான உடற்பயிற்சி செய்யலாம் ,விருப்பப் பாடல்களைக் கேட்கலாம் சினிமா,நாடகம் பார்க்கலாம் ,கோயிலுக்குச் சென்று ஆறுதல் பெறலாம்,நண்பர்களிடம் உரையாடலாம் , தன்னைத் தானே வாழ்த்தி பாராட்டிக் கொள்வதும் ஒரு சிறந்த வழி .ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது .இப்போது வந்த இழப்பு அதற்கு முன்னே ஒன்றுமில்லை என்று மனதிற்குள்ளே பலமுறை சொல்லிக் கொண்டால் மனவழுத்தம் மாயமாய் மறைந்து போகும்
No comments:
Post a Comment