சொன்னதும் சொல்லாததும் -12
1804 -1851 ல் வாழ்ந்த ஜெர்மன் நாட்டு கணிதவியல் அறிஞர் ஜாகோபி (Jacobi ).அவர் காலத்தில் அவரே மிகச் சிறந்த ஆசிரியராகவும் ,கணித மேதையாகவும் திகழ்ந்தார் .அவர் எப்பொழுதும் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் தன் உடல் நலம் கெடுவதில் அதிகம் அக்கறை காட்டமாட்டார் .இது பற்றி ஒரு சமயம் அவரிடம் கேட்ட போது." கணித ஆராய்ச்சியில் கொண்ட ஆர்வத்தால் சிலசமங்களில் என் உடல் நலத்தை நானே கெடுத்துக் கொள்வதுண்டு .ஆனால் இது எதற்காக ? முட்டைக்கோசுக்கு நரம்புகள் இல்லை ,கவலைகளுமில்லை .அவை அழகாக அடுக்கடுக்காகத் தோன்றியிருந்து என்ன சுகம் கண்டன ? " என்று கூறுவார் . "கணிதம் என்பது தனக்குத் தானே தூய்மையாக விளங்குகின்ற ஒரு மேன்மையான அறிவியலாகும்” என்றும் “அறிவியலின் உண்மையான முடிவு என்பது மனித மனத்தின் நன்மதிப்பாகும்” என்றும் கணிதத்தைப் பற்றி எப்போதும் உயர்வாகக் குறிப்பிடுவார். ஒரு சமயம் ஜகோபியிடம் ஆராய்ச்சி செய்ய ஒரு மாணவர் வந்து சேர்ந்தார் .சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் ஜாகோபி அந்த மாணவரைப் பார்த்து "என்ன ஆராய்ச்சியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது ?" என்று கேட்டார் .அதற்கு அந்த மாணவரும் "ஐயா ,நான் இன்னும் ஆராய்ச்சியைத் தொடங்கவில்லையே " என்றார் ."ஆராய்ச்சியை இன்னுமா தொடங்கவில்லை .ஆறு மாதங்களில் என்ன செய்தாய் ? என்று ஜகோபி வினவினார் .அதற்கு அந்த மாணவர்,"ஐயா நான் ஆராய்ச்சி செய்ய வேண்டிய பொருளைப் பற்றிய அறிவை ஆழமாகப் பெற விரும்பு கின்றேன் . அப்போதுதான் என்னால் இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும் .அதற்காக யார் யார் என்னென்ன ஆராய்சிகள் இன்றுவரை செய்து முடித்துள்ளார்கள் என்ற விவரங்களைச் சேகரித்து வருகின்றேன் அவர்களால் விட்டுப் போன ஆராய்ச்சியை அடுத்து தொடங்கிவிடுவேன் " என்று என்று கூறினார் ஜகோபியும் "தம்பி அப்படியெல்லாம் செய்து காலத்தை வீணாக்கிவிடாதே ,காலம் பொன்னானது ,பொன்னை விட மேலானது . ஆராய்ச்சி செய்யவேண்டும் என்பது உன் உண்மையான விருப்பமாயிருந்தால் அதைத் தொடங்குவதற்கு முன்னரே இது போன்ற விவரங்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும் .அவைகளே உனக்கொரு குறிக்கோளை தந்திருக்கும் .குறிக்கோள்கள் எப்போதும் செயல்களுக்கு முந்தி இருக்கவேண்டும் .ஆனால் நீயோ ஆராய்ச்சி செய்ய வந்த பிறகு குறிக்கோளைத் தேடுகின்றாய் .உன் தந்தை ஊரில் உள்ள எல்லாப் பெண்களையும் பார்த்து விட்டு அதில் நல்ல அழகான பெண் யார் என்று முடிவு செய்த பிறகு திருமணம் செய்து கொள்ளவில்லை .அப்படிச் செய்திருப்பாரே யானால் நீ இப்போது இங்கே ஆய்வு செய்ய வந்திருக்கவே முடியாது .எனவே உடனே ஆராய்ச்சியைத் தொடங்கு .இடையிடையே ஐயங்கள் எழும் .தேவையானவை ,தேவையில்லாதவை எவை என்பது பற்றி சரியாகத் தீர்மானிக்க முடியும் .இதனால் கால தாமதம் தவிர்க்கப்படும் என்று அம் மாணவருக்கு அறிவுரை கூறினார் .
வேலை செய்வதற்கு நல்ல காலம் என்பது அது பற்றி எண்ணிய பின் வரும் அடுத்த நிமிடமே .நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிக் கொண்டே போனால் நாளை ஒருவருக்கு விடியாமற் கூடப் போகலாம் .எனவே அன்றே அப்பொழுதே செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிப்பதே வெற்றிச் சிந்தனையாளர்களுக்கு அழகு .
No comments:
Post a Comment