Saturday, January 12, 2013

Sonnathum Sollaathathu-10


சொன்னதும் சொல்லாததும்-10




1829- 1896 ல் வாழ்ந்த ஜெர்மன் நாட்டு வேதியியல் விஞ்ஞானியான பிரெடெரிக் ஆகஸ்ட் கீகுள் (Friedrich August Kekule) பென்சீன் மூலக்கூறின் கட்டமைப்பைக் கண்டுபிடித்தவர் .தன் கண்டுபிடிப்பை வெளியிட்டு 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் போதுபென்சீன் மூலக்கூறின் வட்ட வடிவக் கட்டமைப்பை ,ஒரு பாம்பு தன் வாலையே உணவாக நினைத்து தன் வாயால் கவ்விப் பிடித்துக் கொண்டிருப்பதை ஒரு நாள் பகற் கனவாகக் கண்டேன்.அக்கனவே பென்சீன் கட்டமைப்பைக் கண்டறிய வழிகாட்டியாக அமைந்தது” என்று குறிப்பிட்டார் .கார்பன்-கார்பன் அணுவிடைப் பிணைப்பைப் பற்றி பகலிரவாய் 7 ஆண்டுகள் ஆராய்ந்த பின்னரே பகற் கனவில் பென்சீன் மூலக்கூறு ஒரு பாம்பு வடிவில் உருவகமாய்த் தோன்றியிருக்கிறது .பொதுவாக வெற்றி பெறவேண்டும் என்று உண்மையாக நினைத்து அதற்காகத் தங்களை அர்பணித்துக் கொள்பவர்கள் வித்தியாசமாகச் சிந்தித்து செயல்படுவதால் செயல்திறன் அபரிதமாக இருக்கும்.இதற்குக் காரணம் மூளையோடு அகமனமும் சேர்ந்து கொள்வதேயாகும் .அகமனம் எப்போதும் சேகரித்த விஷயங்களை அசைபோடும்,முடிவுகளை குறிப்புணர்த்தும்.கனவுகள் அகமனதின் ஒரு வெளிப்பாடு என்று உயிரியல் அறிஞர்கள் கூறுவார்கள். மேலோட்டமாக அசைபோடும்போது கனவுகளுக்குப் பொருள் விளங்காது, கணப்பொழுதில் மறந்தும் போகும்.அதனால் பலர் கனவுகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை.

  இந்தியாவின் கணித மேதை இராமானுஜனின் நோட்டுப் புத்தங்கங்களில் 4000 க்கும் மேற்பட்ட சூத்திரங்களும் கணிதமொழித் தொடர்புகளும் வெறும் குறிப்பாக அவரால்  எழுதப்பட்டுள்ளன. வழிமுறைகளின்றி தீர்வுகளை மட்டுமே எழுதுவது என்பது அகமனதின் தொடர்பின்றி இயலாதது.இத் திறமைக்குக் காரணம் நாமகிரி அம்மன் அருள் என்று அடக்கமாக இராமானுஜன் கூறினாலும் ,உண்மையில் அவருடைய வற்றாத ஆர்வமும் முழுமையான ஈடுபாடும் பெற்றுத் தந்த திறமை என்றுதான் சொல்லவேண்டும் .

தாமஸ் ஆல்வா எடிசன் சில சமயங்களில் கைகளில் எடைக் கற்களைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கையில் அமர்திருந்த படியே தூங்குவாராம் .அந்த எடை நழுவிக் கீழே விழும் போது தூக்கம் கலைந்து விழித்தெழுவாராம் .அப்போது அவர் கண்ட கனவுகளை நினைவு படுத்திப் பார்ப்பாராம். அவை பெரும்பாலும் ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு மூலமாக இருக்குமாம்.வெற்றி பெறுவதற்காக க் கனவு காண்பவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கி விடுவார்கள். கனவுகளை மொழிபெயர்க்கத் தெரிந்ததால் இது இயல்பாகிறது .

மென்டலீவ் தனிம அட்டவணையைக் கண்டுபிடித்த வேதியியல்  விஞ்ஞானி .இவர் நெடுங் காலம் வேதித் தனிமங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.அதனால் அவருடைய முயற்சியில் அகமனமும் சேர்ந்து கொண்டது. தனிம அட்டவணைக்குரிய அட்டவணையின் வடிவத்தை முதலில் தன்னுடைய கனவில் தான் கண்டதாக இவரும் குறிப்பிட்டுள்ளார் .

வில்லியம் ஹெர்ஷல் ஒரு பழங்காலத்திய வானவியல் அறிஞர் இவர் யுரேனஸ் என்ற கோளைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் அதைக் கனவின் மூலம் தான் தெரிந்து கொண்டாராம். இவையாவும் ஒருவருடைய வெற்றிக்கு பகற்கனவும் ஒரு வலிமையான தூண்டுகோல் என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு சில சரித்திரப் பதிவுகள். "செயலின்றி வெற்றி இல்லை அதனால் இளைஞர்களே கனவு காணுங்கள் ஒருவர் செயல்படுவதற்கு கனவுகளே நுழைவு வாயில்" , என்று நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியது வருங்கால இந்தியாவை நிர்ணயக்கின்ற இன்றைய இளைஞர்களின் மனதில் பொறிக்கப்படவேண்டிய பொன் வாசகங்கள்.

No comments:

Post a Comment