விண்வெளியில் உலா- வேலா (Vela)
பழங் காலத்தில் அர்கோ நாட்ஸ் எனப்படும் கப்பலைச் சித்தரிக்குமாறு அர்கோ நாவிஸ் என்ற பெரிய வட்டார விண்மீன் கூட்டம் நிறுவப்பட்டது .அதை மூன்று பகுதியாகப் பிரித்து வேலா ,பப்பீஸ்(puppies),கரீனா எனப் பெயரிட்டு அழைத்தனர் .வேலா விண்மீன் கூட்டம் கப்பலின் பாய்மரப் பகுதியைக் குறிப்பிடும் .இது விண் வெளியில் பால் வழி மண்டலத்தில் ஒரு பக்கம் பப்பீஸ்,கரீனா வட்டாரங்களுடனும் மறுபக்கம் சென்டாரசுடனும் அமைந்திருக்கிறது .இது ஒரு பெரிய வட்டாரமாக ஒரு காலத்தில் இருந்து பின்னர் பிரிக்கப்பட்டதால் இதில் ஆல்பா ,பீட்டா குறியீட்டுடன் கூடிய விண்மீன்கள் இல்லை .
841 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ரீகோர் (Regor) என்ற காமா (γ)வேலோரம் பல விண்மீன்களாலான தொகுப்பாகும். தொலை நோக்கியில் இது 1.8 ஒளிப்பொலிவெண் கொண்ட முதன்மை விண்மீனாக வட்டாரத்தில் பிரகாசமிக்கதாகத் தெரிகிறது .புறக் கூட்டிலுள்ள ஹைட்ரஜன் படலங்கள் யாவற்றையும் இழந்து விட்ட காமா 2 என்று குறிப்பிடப்படுகின்ற இது வுல்ப் ராயட்(Wolf Rayet) வகையைச் சேர்ந்த மிகவும் வெப்ப மிக்க அரிய விண்மீனாகும் .காமா -1 என்று குறிப்பிடப்படுகின்ற இதன் துணை விண்மீன் சாதாரணமாக வெண் நீல நிறத்துடன் ஒளிப்பொலிவெண் 3 கொண்ட ஒரு விண்மீனாகும் .ஒளிப் பொலிவெண் 8,9 கொண்ட அகன்ற இடைத் தொலைவுடன் கூடிய இரு உட் துணை விண்மீன்களும் இதில் உள்ளன.
கூசா (Koosha ) என்ற டெல்டா(δ) வேலோரம் 80 ஒளி ஆண்டுகள் தொலைவில் 1.93 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் காணப்படுகின்றது .அல் சுகைல் அல் வாசன் (Al Suhail Al Wazn) என்ற லாம்டா(λ) வேலோரம் 573 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.23 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் காணப்படும் ஒரு மாறொளிர் விண்மீனாகும்.
மார் ஹாப் (Marhab ) என்ற கப்பா(κ) வேலோரம் 140 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.49 ஒளிப் பொலி வெண்ணுடனும் ,தசீன்கா (Tseenka ) என்ற பை(φ) வேலோரம் 1930 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.52 ஒளிப் பொலி வெண்ணுடனும் 116 ஒளி ஆண்டுகள் தொலைவில் மியூ(μ) வேலோரம் ,2,69 ஒளிப் பொலி வெண்ணுடனும் 61 ஒளி ஆண்டுகள் தொலைவில் சை(ψ) வேலோரம் 3.60 ஒளிப்பொலிவெண்ணுடனும் காணப்படுகின்றன .
இவ்வட்டாரத்தில் NGC 2547 எனப் பதிவு செய்யப்பட்ட ஒரு தனிக் கொத்து விண்மீன் கூட்டம் ஏறக்குறைய 1300 ஒளி ஆண்டுகள் தொலைவில் விண் வெளியில் பாதியளவு முழு நிலவுப் பரப்பில் காணப்படுகின்றது .NGC 3132 எனப் பதிவு செய்யப்பட்ட ஒரு கோளக நெபுலாவும் உள்ளது .வேலா எக்ஸ் -1 என்று குறிப்பிடப் படுகின்ற மறைப்பு வகை எக்ஸ் கதிர் இரட்டைப் பல்சார்(Pulsar) (துடிப்பு விண்மீன்) 8.96 நாட்கள் சுற்றுக் காலத்துடன் இவ்வட்டாரத்தில் உள்ளது .இது மிகவும் செறிவுமிக்க கடின எக்ஸ் கதிர்களை உமிழ்கிறது .
இவ்வட்டாரத்தில் உடனழிவு விண்மீனின் எச்சமாக ஒரு துடிப்பு விண்மீனொன்று ஏறக்குறைய 1500 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகின்றது.இது இளமையான துடிப்பு விண்மீன் மட்டுமன்று கட் புலனுணர் அலை நீள நெடுக்கையில் இனமறியப்பட்டதுமாகும்.இதன் வயது 11000 ஆண்டுகள் என அதன் அலைவு காலமான 89 மில்லி செகண்டில் ஏற்படும் கூடுதலான 10.7 நானோ செகண்டு மாற்றத்தைக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது .இது நண்டு வடிவ துடிப்பு விண்மீனுக்குப் பிறகு இரண்டாவதாக கட் புலனுணர் ஒளி நெடுக்கையில் இனமறியப்பட்ட குறுகிய கால ரேடியோ பல்சராகும்
No comments:
Post a Comment