Wednesday, January 16, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு சிமிண்டுத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும்.மக்கள் வீட்டுக் குப்பைகளை அதில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.குடியிருப்புகள் விரிவடைந்த அளவிற்கு ஏற்ப குப்பைத் தொட்டிகள் இல்லாததாலும் ,குப்பைத் தொட்டிகள் பராமரிக்கப்படாமல் அதுவே ஒரு கழிவுப் பொருளாக ஆனதாலும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் எங்கும் சிதறியதாலும் குப்பை மேடு குப்பைக் காடாக மாறி பன்றிகளுக்கு புகலிடமாகி சுகாதாரக் கேடுகளை விளைவித்தது .அதனால் மக்கள் குப்பைகளை வீட்டுக்கருகில் வீதியில் குப்பைகளைக் கொட்டுவதை வழக்கமாகக் கொண்டார்கள் . கடைத் தெருக்களிலும் சந்தைகளிலும் நிலைமை இன்னும் மோசம் .தேவையில்லாத கழிவுகளையெல்லாம் முறையாக அகற்றாமல் அப்படியே வீதிகளில் தள்ளிவிடுகின்றார்கள் சுத்தம் செய்யும் துப்புரவுப்        பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துபோனதாலும் பணியில் கடமை உணர்வு இல்லாததாலும் ,அதைச் சரிவரக் கண்காணிக்க பொறுப்புள்ள அலுவலர்கள் முன்வராததாலும் துப்புரவுப் பணி பெரிதும் சீர்கெட்டுப் போனது .பதவிக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற இக்கட்டான சூழலில் குப்பைகளை அகற்ற மாற்று வழிமுறைகளை மேற்கொள்ள முயன்றார்கள்.எனினும் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாததாலும் நிதியைச் சரியாகப் பயன்படுத்தாததாலும் துப்புரவுப் பணியில் ஒரு மேம்பாடு ஏற்படவில்லை.

வீட்டுக் குப்பைகளைக் கூடை அல்லது பிளாஸ்டிக் பைகளில் வைத்து வீட்டுக்கு வெளியே .வைத்து விடுவார்கள் .துப்புரவுப் பணியாளர் அதை எடுக்கும் போது அதிலுள்ள பேப்பர் ,பாட்டில் போன்றவற்றை எடுத்துச் சேகரித்து பழைய

சாமான்கள் கடைகளில் விற்றுவிடுகின்றார்கள். குப்பை மேடுகளைக்  கிளறி குப்பையை அப்படியே போட்டுவிட்டுப் போவதால் குப்பை சேருமிடமெல்லாம் குப்பைக் காடாக மாறி காற்றினால் குப்பைகள் எங்கும் பரவி மீண்டும் நகரின் தூய்மையைக் கெடுத்து வருகிறது.

குப்பைக் கழிவு என்பது உலகில் மக்கள் வாழும் வரை இருக்கும்.அதை முறையாக அகற்றுவது நிர்வாகத்தின் பொறுப்பு.அதற்காகத்தான் வரியே ஒழிய நிர்வாகத்தினரின் வசதிக்கும் ஊதியத்திற்குமில்லை.பொதுப் பணிக்கான செலவுகள் குறைந்து நிர்வாகத்தின் நலச் செலவுகள் அதிகரித்துப் போனதால் பல திட்டங்கள் வெறும் பேச்சளவிலேயே நின்று       போய்விடுகின்றன. குப்பைகளிலிருந்து மின்சாரம் ,உரம் என மீட்டுருவாக்கம் செய்து பயன் பெறமுடியும். குப்பைகளிலிருந்து வரும் வருவாயைக் கொண்டே குப்பைகளை அகற்றும் பணியை மேம்படுத்தும் வழிமுறைகளை உருவாக்க வழியிருக்கிறது .வருவாயை யெல்லாம் கட்டமைப்பு மற்றும் பணியில்லாத காரியங்களுக்காகவே செலவழித்து விட்டால் எவ்வளவு வருவாய் இருந்தாலும் போதாது.எதிர்காலத்தில் பிரச்சனைகளைச் சமாளிப்பது மேலும்  கடினமாகி விடலாம். நாட்டு நலப் பணிகள் யாவும் களத்தில் இறங்காமல் வெறும் அலுவலகத்திலிருந்து கொண்டே நிறைவேற்றி விட முடியாது .இதை எப்போதுதான் நம்மவர்கள் புரிந்து கொண்டு மனமொப்பிச் செயல்படப் போகின்றார்களோ?   மேலை நாடுகளில் குப்பைத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையில் பல விடங்களில் வைக்கப்பட்டிருக்கும். பொதுக் கழிப்பிடங்களும் கட்டப்பட்டு முறையாக ப் பராமரிக்கப்பட்டிருக்கும். மக்கள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதால் குப்பையை வெளியில் எங்கும் காண முடிவதில்லை .அவர்களைப் போல சமுதாய உணர்வும்,கட்டுப்பாடுமில்லாத நம் மக்களுக்கு குப்பைத் தொட்டிகளும் ,பொதுக் கழிப்பிடங்களும் இன்னும் அதிக எண்ணிக்கையில் அல்லவா இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment