எழுதாத கடிதம்
பெரும்பாலான அரசு அலுவலர்கள் மக்களுக்காகச் செய்யவேண்டிய பணிகளை கையூட்டுப் பெறுவதற்காக வேண்டுமென்றே தாமதப் படுத்தி விடுகின்றார்கள்.பொதுவாக அவர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் பெரும்பாலான நேரங்களில் இருப்பதில்லை.,எப்பொழுது சென்றாலும் உயர் அதிகாரியுடன் மீட்டிங் போயிருக்கார் என்றோ அல்லது டீ சாப்பிடப் போயிருக்கார் என்றோ கூறுவார்கள். அவருடைய உதவியாளர் நம்மைப் பற்றி அறிந்து நல்ல பார்ட்டி என்றால் அவருக்குத் தகவல் கொடுத்து வரவழைப்பார்.கையூட்டுக்கு உறுதியளித்து விட்டால் எவ்வளவு சிக்கலான பணியாக இருந்தாலும் முடித்துத் தர முன்வருவார்கள் .இல்லாவிட்டால் போகாத ஊருக்கு வழி சொல்லுவார்கள் .எனக்கு எது கவலை யளிக்கின்றது என்றால் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை எல்லா அலுவலர்களும் ஒரே மாதிரியான மனப்போக்கையே கொண்டிருக்கின்றார்கள் என்பதும் ஆயிரத்தில் ஒருவர் கூட நேர்மையாகப் பணி புரியவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராக இருக்கின்றார் என்பதும் தான் .தவறு செய்தால் திருத்துவதற்கு யாருமே இல்லாத அலுவலகங்கள் .அவற்றின் பரிணாம வளர்ச்சியைக் கற்பனை செய்யும்போது மனதில் சொல்லொண்ணா பயம் கவ்விக் கொள்கிறது.பாவம் வருங்காலச் சந்ததியினர். எப்படி நாம் உலகத் தரம் வாய்ந்த உணமையான வளர்ச்சியை எட்டிப் பிடிக்க முடியும் ?
இப்படி சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் ஒவ்வொரு பதவிக்கும் விலை வைத்து விடுகின்றார்கள். சும்மா வந்தாலே ஒரு கை பார்ப்பவர்கள் விலை கொடுத்து வந்தால் சும்மா விடுவார்களா ?
கையூட்டுக் கொடுக்க விரும்பாத சிலர் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்ச மல்ல.காரியத்தை அவரிடமிருந்து தான் முடிக்க வேண்டும் என்ற நிலையில் அவரைப் பகைத்துக் கொள்வது காரியத்தை மேலும் சிக்கலாக்கி விடுகிறது.அவர்கள் தங்கள் வாழ்நாளில் கூட காரியத்தை முடிக்க முடிவதில்லை
அரசு உண்மையாக விரும்பி உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் அரசு அலுவலகங்களை நேர்மைப் படுத்த முடியும் .ஆனால் மக்களுக்காக ஒருமுகமும் தனக்காக ஒரு முகமும் கொண்டிருக்கும்போது உயர் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் அப்படிச் செய்யமுடிவதில்லை .ஊரில் ஒரு குடிசை கட்ட முடியாதவன் செவ்வாய்க் கிரகத்தில் காலனி கட்டப்போகிற கதை தான் இது.
.
No comments:
Post a Comment