60 வயது அப்பாவிற்கு 80 வயதுக் குழந்தை
பாலூட்டிச் சீராட்டிப் பட்டுச்சேலை தொட்டியிலிட்டு
தாலாட்டுப் பாடிய இராகத்தை மறக்கமுடியவில்லை
ஓடிவிளையாடி ஓய்ந்து வந்தருகில் அமர்ந்தபோது
உறங்கும்வரை உடலை வருடியதை மறக்கமுடியவில்லை
பள்ளிசென்று படித்துவந்த எனக்கு பசிக்குமென்று
பல்சுவை உணவு ஊட்டியதை மறக்கமுடியவில்லை
மழையில் நனைந்து காய்ச்சலில் வீழ்ந்தபோது
மருந்து கசக்க இனிப்பூட்டியதை மறக்கமுடியவில்லை
பார்புகழும் நன்மக்களாய் வளர வேண்டுமென்று
புராணக் கதைகள் நாளும் சொன்னதை மறக்கமுடியவில்லை
தீபாவளி மட்டுமில்லை எந்நாளும் திருநாள்தான்
தினமும் புத்தாடை அணிவித்ததை மறக்கமுடியவில்லை
கடைக்குச் சென்றால் அதுபிடிக்கும் இதுபிடிக்குமென
எல்லாம் வாங்கிக் கொடுத்ததை மறக்கமுடியவில்லை
சின்னச்சின்ன ஆசைகள் பெரிதாய் வளர்ந்தபோதும்
சிணுங்காமல் நிறைவேற்றி மகிழ்ந்ததை மறக்கமுடியவில்லை
உங்களோடு வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும்
மறக்கமுடியாத போழ்து இவையொன்றும் விந்தையில்லை
உண்மையும் ஒழுக்கமும் அன்னைதந்த அருஞ்சீதனம்
உலகறிவும் ஒப்புரவும் அப்பாதந்த பரிசுப்புத்தகம்
நேர்மை கற்றேன் தலைநிமிர்ந்து வாழ்கிறேன்
வாழையடி வாழையாய் செழித்து வளர்கிறேன்
சான்றோர்பலர்கூடிவந்து வாழ்த்தப் பெற்றேன்
எங்களுக்காக நீங்கள் வாழ்ந்தது போதும்
உங்களுக்காக நான்வாழ அனுமதி கொடுங்கள்
ஏனெனில் எனக்கு அன்னையும் பிதாவும் வேண்டும்
என்னைவிட்டு நீங்காது என்றைக்கும் வேண்டும்
No comments:
Post a Comment