விண்வெளியில் உலா- போலாரிஸ்
431 ஒளிஆண்டுகள் தொலைவிலுள்ள போலாரிஸ் என்ற ஆல்பா அர்சா மைனாரிஸ் மஞ்சள் நிறங்கொண்ட நிற மாலையால் F வகையைச் சேர்ந்த மாபெரும் விண்மீனாகும் .இதன் புறப்பரப்பு வெப்ப நிலை 7000 டிகிரி செல்சியஸ் ,அதாவது நமது சூரியனை விட வெப்ப மிக்கது .இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் 1.99 ,சார்பிலா ஒளிப் பொலி வெண் - 3.64.அதாவது இதன் ஒளிர்திறன் சூரியனைப் போல 2200 மடங்கு கொண்டது .பூமியின் சுழலச்சின் தள்ளாட்டத்தால் துருவம் இடம் பெயர்வதால் போலாரிஸ்ஸின் இருப்பிடமும் மாறுகிறது .நெருக்கமாக இருக்கும் போது 0.46 டிகிரி கோண விலக்கத்துடன் இருக்கும். இது போன்ற நிலை 2102 ல் நிகழும் என்று கூறுகின்றார்கள் .அதன் பிறகு கசியோப்பியா வட்டாரத்தின் மேற்குப் பகுதியைக் கடந்து 7000 ஆண்டில் இது சீபஸ் வட்டாரத்தை மையம் கொள்ளும் .உண்மையான துருவம் 47டிகிரி விட்டமுள்ள ஒரு பெரிய வட்டத்தில் 25800 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையாகச் சுற்றி வருகிறது.அதாவது 175 ஆண்டுகளில் 1 டிகிரி கோண விலக்கம் என்ற வீதத்தில் இடம் பெயர்ந்து வருகிறது .இதனால் ஜூலியர் சீசர் காலத்தில் போலாரிஸ் துருவத்திலிருந்து 10 டிகிரி கோண விலக்கத்தில் இருந்தது என்றும் அப்போது பீட்டா அர்சா மைனாரிஸ் ஏறக்குறைய துருவத்திலிருந்து அதே கோண விலக்கத்தில் இருந்தது என்றும் கூறுவார்கள் .மேலும் எகிப்தில் 4650 ஆண்டுகளுக்கு முன்னர் பிரமிட் கட்டப்பட்ட காலத்தில் டிராகன் வட்டாரத்திலுள்ள தூபான் (Thuban ) என்ற ஆல்பா டிராகோனிஸ் விண்மீனே துருவ விண்மீனாக இருந்தது என்றும் அதற்கும் முந்திய காலத்தில் சுமார் 15000 ஆண்டுகளுக்கு முன்னர் லைரா வட்டாரத்திலுள்ள ஆல்பா லைரே என்ற விண்மீன் துருவ விண்மீனாக இருந்தது என்றும் கூறுவார்கள்
போலாரிஸ் சிபிட்ஸ் வகை மாறொளிர் விண்மீனாக உள்ளது. இதன் மாறொளிர்தலுக்குக் காரணம் அதன் புறப்பரப்பு துடிப்பிற்கு உள்ளாவதாகும் .அதாவது 3.97 நாட்கள் அலைவு காலத்துடன் இந்த விண்மீன் விரிந்து சுருங்குகிறது .அதனால் அதன் வெப்ப நிலையும் பிரகாசமும் தொடர்ந்து மாறுவதால் நிறமாலையிலும் மாற்றம் ஏற்படுகிறது .பெருமப் பிரகாச நிலையில் இதன் ஒளிப்பொலிவெண் 1.96 ஆகவும் ,சிறுமப் பிரகாச நிலையில் 2.05 ஆகவும் உள்ளது .இந்த ஏற்றத் தாழ்வு மிகவும் குறைவாக இருப்பதால் வெறும் கண்களுக்கு இது புலப்பட்டுத் தெரிவதில்லை.நல்ல வேளை நமது சூரியன் இதுபோல ஒரு மாறொளிர் விண்மீனாக இல்லை.அப்படி இருந்தால் பூமியில் வெப்ப நிலை ,ஒளிச்செறிவு இவற்றில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு ஏற்பட்டு பூமியில் உயிரினங்களின் வாழ்கையைச் சீர் குலைக்கும் .
தொலை நோக்கியால் போலாரிஸ்ஸை நுணுகி ஆராய்ந்த வில்லியம் ஹெர்ஷல் என்பார் 1779 ல் அது ஓர் இரட்டை விண்மீன் எனக் கண்டறிந்தார் .இதன் துணை விண்மீன் 8.5 ஒளிப்பொலிவெண்ணுடன் 18 வினாடிகள் கோண விலக்கத்துடன் அமைந்துள்ளது .முதன்மைத் தொடர் (Main Sequence ) விண்மீனான இது 2000 வானவியல் அலகுத் தொலைவில் பல ஆயிரம் ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் போலாரிஸ்ஸை சுற்றி வருகிறது .இது வெளிர் மஞ்சள் நிறத்துடன் சூரியனை விடச் சற்றே பெரிய வின்மீனாகும் .எனினும் ஓரளவு வெப்ப மிக்கது .இதன் வெப்ப நிலை ஏறக்குறைய போலாரிஸ்சுக்கு சமமானது .இது தொலை நோக்கியில் பச்சை நிறச் சாயலுடன் தோன்றுகிறது .இது ஒரு வகையான மாயத் தோற்றம் என்று கூறுகின்றார்கள். உண்மையில் போலாரிசுடன் இது ஈர்ப்பால் தொடர்பு கொண்டுள்ளதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
.ப்பெர்கட் எனப்படும் காமா அர்சா மைனோரிஸ் ஓர் ஒளியியல் இரட்டையாகும் .உண்மையில் இவை இரட்டை விண்மீன் இல்லை. ஒரே கண்ணோட்டத் திசையில் இரட்டை விண்மீன் போலத் தோற்ற வெளியில் அமைந்திருக்கின்றன
காமா அர்சா மைனோரிஸ் வெண் நீலமிக்க பெரு விண்மீனாக 480 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப் பொலி வெண் 3 உடன் உள்ளது .இதற்கு அருகிலுள்ள விண்மீனை 11 அர்சா மைனோரிஸ் என்பர்.இது 390 ஒளி ஆண்டுகள் தொலைவில் 5 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் ஆரஞ்சு நிறங் கொண்ட பெரு விண்மீனாகும் .ஈட்டா அர்சா மைனோரிஸ் ஓர் ஒளியியல் இரட்டையாகும் .இதிலுள்ள முதன்மை விண்மீன் வெண்ணிறங் கொண்ட 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் 5 என்ற ஒளிப்பொலிவெண் கொண்ட விண்மீனாகும் .அகன்ற இடை வெளியுடன் உள்ள மற்றொரு விண்மீன் 5.5 என்ற ஒளிப்பொலி வெண்ணுடன் 680 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.அல்பெர்ட் வில்சன் என்பாரால் கண்டுபிடிக்கப் பட்ட 240,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது அர்சா மைனர் என்ற குறு அண்டம். கோள வடிவில் உள்ள இதில் பெரும்பாலும் வயதான விண்மீன்களே உள்ளன .இது நமது பால் வழி மண்டலத்திற்கு ஒரு சிறிய துணை அண்டமாக விளங்குகிறது .இதில் அதிகமான தூசிகள் திரண்டிருப்பதால் இருளான கருமை சூழந்த பகுதி அதிகம் நிறைந்துள்ளது
No comments:
Post a Comment