விண்வெளியில் உலா-துலா இராசி மண்டலமும் அண்டை வட்டாராங்களும்
இந்த வட்டாரம் பேரண்டத்தின் நடு வரைக் கோட்டிற்கு விர்கோவிற்கும் ,ஸ்கோர்பியசுக்கும் இடையில் சற்று தெற்காக அமைந்துள்ளது .தராசு வடிவமாகக் கற்பனை செய்யப்பட்டுள்ள இவ்வட்டார விண்மீன்கள் துலாம் இராசிக்குரிய நட்சத்திர மண்டலமாகும்.கதிர்வீதியில் உலா வரும் சூரியன் இங்கே 31 அக்டோபர் முதல் 23 நவம்பர் வரை தங்கிச் செல்லும் .
தொடக்கத்தில் இவ்வட்டார விண்மீன்கள் அருகிலுள்ள தேள் வடிவ மண்டலமான ஸ்கோர்பியஸ்சில் உள்ள தேளின் கால் நுனிகளாகக் கருதப்பட்டன .இதை ஒரு தராசு வடிவமாகச் சித்தரித்தது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த ரோமானியர்களே .தராசு நீதி தேவதையின் அடையாளமாகக் கொள்ளப்பட் டுள்ளது என்பதால் தராசுக்கு ரோமானியர்கள் முக்கியத்துவம் அளித்தார்கள் .
சூ பென் எல் ஜெநூபி (Zuben El Genubi ) என்றழைக்கப்படும் ஆல்பா லிப்ரே என்ற விண்மீன் ஒளிப்பொலிவெண் 2.8 மற்றும் 5.2 உடைய அகன்ற இடைவெளியுடன் கூடிய ஓர் இணை விண்மீன் .இதற்கு நம்மவர்கள் இட்ட பெயர் விசாகம் .
சூ பென் எல் கெமேல் (Zuben El chemale) என்ற பீட்டா லிப்ரே தேளின் வடக்கத்திய கால் நுனியைக் குறித்தது .இவ் வட்டாரத்தின் பிரகாசமிக்க விண்மீன் இதுவே ஆகும் .ஆல்பா லிப்ரே இவ்வட்டாரத்தின் இரண்டாவது பிரகாசமான விண்மீன் என்பதைதவறாக வரிசைப் படுத்திய பின் நெடுநாளைக்குப் பிறகே தெரிந்து கொண்டனர் .வெப்ப மிக்க,நீல நிறங் கொண்ட 2.6 ஒளிப்பொலிவெண் உடைய பீட்டா லிப்ரே 5 நிமிடங்கள் கோண இடைவெளியில் 5.5 ஒளிப்பொலிவெண் உடைய மஞ்சள் நிறமுடைய ஒரு துணை விண்மீனைப் பெற்றுள்ளது .இவை இரண்டும் ஏறக்குறைய ஒத்த தன்னியக்கத்தைக் கொண்டுள்ளன என்றாலும் அவைகளுக்கு இடைப்பட்ட தொலைவு மிகவும் அதிகமாக இருப்பதால் ,இவ்விரு விண்மீன்களும் ஈர்ப்பால் தொடர்பற்றுள்ளன எனலாம் .
பெர்சியஸ் வட்டாரத்திலுள்ள அல்கோல் போல,டெல்டா லிப்ரே ஒரு மறைப்பு வகை மாறொளிர் விண்மீனாகும் .இதுவும் ஓர் இரட்டை விண்மீனே .முதன்மை மற்றும் துணை விண்மீன்கள் இரண்டும் ஏறக்குறைய சமமான உருவ அளவு கொண்டுள்ளன .இவற்றின் ஆரம் முறையே 2.4,2.5 மில்லியன் கிலோமீட்டர்களாகும் .இதில் சிறியது வெப்ப மிக்க, நீல நிறப் பெரு விண்மீனாக உள்ளது ..நமது சூரியனை விட 2.7 மடங்கு நிறைமிக்கது .பெரியது ஔரிகா வட்டாரத்திலுள்ள காபெல்லா விண்மீனைப் போல மஞ்சள் நிறங் கொண்ட பெரு விண்மீனாகும்.ஆனால் இதன் நிறை சூரிய நிறையில் 1.2 மடங்கு மட்டுமே .இவ்விரு விண்மீன்களும் சராசரியாக 8.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு இடைவெளியுடன் 2.33 நாள் சுற்றுக் காலத்துடன் அமைந்துள்ளன .இப்படி அவை ஒன்றையொன்று சுற்றி வரும் போது ஒன்றையொன்று மறைப்பதினால் அதன் சாராசரி ஒளிப் பொலி வெண் 4.8 முதல் 5.9 வரையிலான நெடுக்கையில் மாற்றம் பெறுகின்றது .மேலும் மஞ்சள் நிற விண்மீன் நீல நிற விண்மீன் போல ஒளிர் திறன் இல்லாததால் அல்கோல் காட்டுவது போல ஒளிச்செறிவில் இரண்டாம் நிலைச் சிறுமம் காணப்படுகின்றது .அப்போது அதன் ஒளிப் பொலி வெண் 0.1 என்று இருக்குமாறு தாழ்வுறுகின்றது
இவ்வட்டாரத்திலுள்ள மியூ லிப்ரே ஓர் இரட்டை,ஐயோட்டா லிப்ரே பல விண்மீன்களாலான இணையாக உள்ளன .
No comments:
Post a Comment