சொன்னதும் சொல்லாததும்
ஹென்றி மோஸ்லே, லார்டு ரூதெர்போர்டுடன் இணைந்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி .தனிமங்களின் அணுவெண் பொறுத்து மாறுபடும் எக்ஸ் கதிர் நிறமாலை பற்றி ஆராய்ந்து அதிர்வெண்ணுக்கும் அணுவெண் ணுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தியவர் .இது மோஸ் லே விதி என்றழைக்கப்படுகின்றது.இதன்மூலம் அணுவெண் என்ற கருத்தை நிறுவியவர் .மேலும் தனிம அட்டவணையில் பூர்த்தி செய்யப்படாத கட்டங்களுக்குரிய தனிமங்களை எக்ஸ் கதிர் நுட்பம் மூலம் அறியும் முறையைத் தெரிவித்தவர்.
மோஸ்லே எப்போதும் எல்லோரிடமும் நட்பாகவும் அன்பாகவும் பழகும் தன்மை கொண்டவர் .சிலர் சிலர் அவரிடம் வந்து சிகெரெட் பற்ற வைக்க தீக் குச்சி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் .தொடரும் இந்த அன்புத் தொல்லையைப் பொறுக்கமுடியாமல் ஒருநாள் அவர் ஒரு முடிவுக்கு வந்தார் .ஒரு டஜ ன் தீப்பெட்டிகளை விலைக்கு வாங்கி திறவலான ஒரு பெட்டியில் வைத்து தன் மேஜையின் மீது வைத்துவிட்டார் .அதற்குப் பக்கத்தில் ஓர் அறிவிப்பும் செய்திருந்தார் ' “தயவு செய்து இதிலொரு தீப்பெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் என்னுடைய தீக்குச்சியை மட்டும் விட்டுவையுங்கள்”. இங்கிலாந்து நாட்டில் பிறந்த மோஸ்லே 1887 முதல் 1915 வரை 27 ஆண்டு கால வாழ்கையில் சாதனை படைத்தவர். இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் புலமையை வளர்த்துக் கொண்டவர்.
முதல் உலகப் பெரும்போரின் போது தன் ஆய்வுப் பணியை நிறுத்திக்கொண்டு துருக்கியில் போர் புரிந்து வந்த பிரிட்டிஷ் இராணுவத்திற்கு தொலைத் தொடர்பு சேவை செய்து வந்தார் .அப்போது எதிர்பாராத விதமாக போர் முனையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மோஸ்லே சுட்டுக் கொல்லப்படாதிருந்தால் 1916 ல் அவருக்கு நோபெல் பரிசு கிடைத்திருக்கும் என்று பலரும் கூறியிருக்கின்றார்கள் .
பள்ளியில் படிக்கும் போது மிகச் சிறப்பாகத் தன் திறமைகளை வெளிப்படுத்திக் காட்டினார் .இவருடைய திறமைகளைக் கண்டு ரூதெர்போர்டு இவருக்குப் பல்கலைக் கழகத்தில் துணைஆசிரியர் பதவி அளித்தார் .சில காலம் மட்டும் பணியாற்றி விட்டு ,அதை விட்டு விலகி ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அப்போது அவருக்கு எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. இருந்தும் ஆர்வம் காரணமாக ஆராய்ச்சியில் வெற்றி கண்டார் .27 வயதிற்குள் ,அறிவியலில் அருஞ்சாதனை செய்தவர் .செய்ய வேண்டியதை நாளை நாளை என்று காலம் தாழ்த்தாமல் காரியத்தில் கண்ணாய் இருந்ததால் அவரால் குறுகிய வாழ்நாளிலும் சாதனை படைக்க முடிந்தது.மின்னி மறையும் மின்னல் போன்றது வாழ்க்கை .கணப் பொழுதில் மின்னல் புவிவளிமண்டலத்தில் தாவரங்களுக்கு வேண்டிய நைட்ரஜனைத் தந்துவிட்டுத்தான் மறைகிறது.மனிதர்கள் வெகுசிலரே தங்கள் வாழ்நாளில் செய்யவேண்டிய செயல்களை முழுமையாக முடித்து விட்டுச் செல்கின்றார்கள் . மின்னலைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்
No comments:
Post a Comment