Micro aspects of developing inherent potentials
தனிமை எப்போதும் துன்ப மயமானதாக இருப்பதில்லை.தனிமையில் இனிமையும் உண்டு. அவ்விரு தனிமைகளை தீந்தனிமை என்றும் நற் தனிமை என்றும் கூறலாம். இனிமை தரும் நற்தனிமை என்பது ஒருவர் புறத்தாக்கமின்றி சுயமாகச் சிந்திப்பதற்கும்,செயல்படுவதற்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் ஒரு பழக்கம். ஒருவர் தன் எண்ணங்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதால் அது புறத் தனிமை மட்டுமே. அகம் தனிமையில் இல்லாததால் அது உண்மையில் ஒருவிதத்தில் தோற்றத் தனிமையே.விடுதலைப் போராட்டத்தில் பல தலைவர்கள் தனிமைச் சிறையில் நெடுங் காலம் அடைக்கப் பட்டிருந்தனர் .அவர்கள் தனிமையில் இருந்தாலும் அவர்களுடைய மனம் தனிமையில் இல்லை.தங்கள் சிந்தனைகளை வளப்படுத்திக் கொண்டு,கட்டுரைகளையும்,சுய சரிதைகளையும்,எழுதினார்கள்.நாட்டின் சுதந்திரத்தைப் பற்றி ஒவ்வொரு கணமும் சிந்திந்தார்கள். அப்படியின்றி சிறையில் சும்மா முடங்கிக்கிடந்தால்,உடலையும் ,உடலை இயக்கும் மனதையும் செயலின்றி வைத்திருந்தால் அதுவே தீந்தனிமை.
புத்தகத்தை வாசித்து மெய்யறிவை வளப்படுத்தி கொள்ளும்போதும் ,தன் படைப்பாற்றலை வெளிப்படுத்திக் காட்ட முயற்சி எடுத்துக் கொள்ளும்போதும் நற்தனிமையே நலம் தரும்.சுய தேடலின்றி நமக்குத் தேவையான செய்திகளையும்,வசதிகளையும் ஓரளவு பெறுவதற்கு பெற்றோர்கள்,உற்றார் உறவினர்கள்,நண்பர்கள்,ஆசிரியர்கள், சமுதாய மக்கள் என பலதரப்பட்ட மக்களோடு உரையாடுதல் பயன் தரும். எவ்வளவுக்கெவ்வளவு உரையாடும் தொடர்புடைய மக்களின் எண்ணிக்கையும் நேரமும் அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு தீந்தனிமை நம் வாழ்கையில் எட்டிப்பார்ப்பதில்லை. உரையாடல் என்பது நாம் பிறர்க்கு எந்த அளவு பயன்படக் கூடியவராக இருகின்றோம் என்பதைப் பொறுத்தே வலுப்பெறும் .வாழ்கை என்பதே பிறருக்குப் பயன்படுவதற்காக ஏற்பட்டதுதான்.வாழ்கையில் பிறருக்குப் பயன்படுவதற்கான தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வெகு சிலரே வாழும் காலத்தில் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.பிறருக்கு உதவும் மனப் பான்மையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் ஒரு கால கட்டத்தில் தீந்தனிமையில் உழன்று துன்பப்பட நேரிடும். தீந்தனிமை நம்மைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்லும் என்பதால் அதைத் தவிர்த்துக்கொள்ளுதல் நலம் பயக்கும்.
No comments:
Post a Comment