Micro aspects of developing inherent potentials
எதை நினைக்கின்றோமோ அதையே கிடைக்கப் பெறுகின்றோம், எவ்வளவு நினைக்கின்றோமோ அவ்வளவே கைக்கு வந்து சேருகின்றது எப்பொழுது நினைக்கின்றோமோ அப்பொழுதிலிருந்தே மாற்றம் தொடங்குகின்றது.எப்படி நினைக்கின்றோமோ அப்படியே எல்லாம் கொடுக்கப் படுகின்றோம் என்று சான்றோர் பெருமக்கள் கூறுவார்கள் .ஆம் ,இது மகத்தானதொரு வாழ்வியல் உண்மை.இதில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்து கொண்டுவிட்டால் வாழ்கையில் வெற்றிக்கு வேண்டிய திறமையைப் பாதி பெற்றவர்களாகிவிடுவோம்.
நினைக்காமல் எதையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்பதால் செயல்களுக்கு மூல காரணமான நினைவுகளே ஒருவருடைய வாழ்கையின் போக்கைத் தீர்மானிக்கின்றது எனலாம்.ஆனால் நினைப்புகள் செயலாக உருமாறாமல் நினைப்புக்களாகவே நெஞ்சுக்குள் இருக்குமானால் அவை உயிர்ப்பில்லாத நினைவுகளாகும். நெடுங்காலமேயானாலும் அதனால் யாதொரு பயனும் விளைவதில்லை. ஒரு நினைப்பு உயிர்ப்புள்ளதா இல்லையா என்பதை எப்படி இனமறிந்து கொள்வது .செயல்களாகப் பரிணமிக்கும் வரை நினைப்புகள் பரிணாமவளர்ச்சியால் ஒவ்வொருநாளும் வளர்ந்து வந்தால் அது உயிர்ப்புள்ள நினைப்பாகும். ஒவ்வொரு கணமும் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்காமல் உள்ளுக்குள்ளே உறங்கி உறைந்து போயிருந்தால் அது உயிர்ப்பற்றதாகும்.உயிர்ப்புள்ள நினைப்புகள் சிந்தனையில் ஒரு கருவை விதைக்கும்,உயிர்ப்பற்றவை வெந்து போன விதை போன்றவை.அப்புறம் என்ன உரமிட்டாலும் முளைப்பதில்லை. நினைவுக்கும் பகற் கனவுக்கும் உள்ள வித்தியாசமே உயிர்ப்புள்ள, உயிர்ப்பற்ற நினைப்புகளுக்கு உள்ள வேறுபாடு.பகற் கனவுகள் வேறு சில இனமறிந்து கொள்ளமுடியாத காரணிகளால் உயிர்புள்ளவைகளாக மாறக் கூடிய வாய்ப்பிருக்கின்றது என்றாலும் அந்த வாய்ப்பு மிகவும் குறைவு . அடிவாரத்திலிருந்து ஏறுவதை விட அதலபாதாளத்திலிருந்து மலைமுகட்டை நோக்கிப் பயணிப்பதைப் போன்றது .பலர் இந்த
பகற் கனவுகள் கற்பனையில் அள்ளித் தரும் போலியான சுகங்களில் மயங்கி திருப்திப்பட்டுவிட்டு அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிப்பதில்லை .பகற் கனவுகளே ,நினைவுகளே நிறைவேற்றிவிடும் செயல் திட்டம் என்று முடிவு செய்து விடுவதால் அது ஒரு காலத்தில் தானாகவே தனக்குக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காலமெல்லாம் சும்மாவே இருந்து விடுகின்றார்கள் ..
நம்முடைய எண்ணமே நம்வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. வெற்றி,தோல்வி,துன்பம்,இன்பம் ,மகிழ்ச்சி,வருத்தம்,செழுமை,வறுமை என எல்லாவற்றையும் தீர்மானிப்பது இந்த எண்ணங்களே.இருந்தும் நாம் விதைக்காமலேயே அறுவடை செய்ய நினைக்கின்றோம் எதையும் கொடுக்காமலே வாங்கிக் கொள்ள நினைக்கின்றோம் பலனைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றோமே ஒழிய அதை வெல்வதற்கான செயல்களில் முனைப்புக் காட்டுவதில்லை .
விழித்திரு ,எழுந்திரு செயல்படு.எழுப்பியது உன்னையல்ல உன் மனதை எழச்சொன்னது உன்னையல்ல உன் சிந்தனையை .மனதைத் தட்டியெழுப்பி நினைப்புகளோடு ஒன்றிணைந்து செயல்படுமாறு உங்களை நீங்களே ஒருமுறை தூண்டிப்பாருங்கள். உங்கள் வாழ்கையில் மகத்தான மாற்றங்கள் மளமளவென்று ஏற்படுவதைக் கண்டு நீங்களே அசந்துபோவீர்கள்.
No comments:
Post a Comment