Saturday, April 6, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -கிரபிடான் -கண்டுபிடிப்பு

கிரபிடான் மந்த வளிமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த வளிம நிலைத் தனிமமாகும் .கடல் மட்டத்தில் வளி மண்டலத்தில் இது ஆர்கான் ,நியான் , ஹீலியத்திற்கு அடுத்து 1 ppm என்ற அளவில் செரிவுற்றுள்ளது .காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி ,அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி ,பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்தெடுக்கலாம் ,இப்படி முதன் முதலில் ஆர்கானைக் கண்டுபிடித்த வில்லியம் ராம்சே மற்றும் மோரிஸ் டிராவர்ஸ் ,தங்கள் ஆய்வை மேலும் தொடர்ந்து 1898 ல் நியான் ,கிரபிடான்,மற்றும் செனான் வளிமங்களைக் கண்டறிந்தனர் .கிரேக்க மொழியில் நியோஸ் என்றால் புதியது என்றும் கிரபிடோஸ் என்றால் மறைந்துள்ளது என்றும் ,செனான் என்றால் புதியவர் என்றும் பொருள் .

பண்புகள்

இந்த மந்த வளிமம் நிறமாலையின் பச்சை மற்றும் ஆரஞ்சு பகுதியில் பிரகாசமான வரிகளைக் காட்டுகின்றது .இதன் அணுவெண் 36 அணு எடை 83.80 Kr என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கிரபிடானின் அடர்த்தி 3.49 கிகி /கமீ .இதன் உறை நிலையும் ,கொதி நிலையும் யும் முறையே 115.9 K ,119.8 K ஆகும் .

கிரபிடானும் வேதியியல் வினையில் ஈடுபட்டு சேர்மங்களை உண்டாக்கும் என்பதில் லினஸ் பாலிங் என்ற அமெரிக்க விஞ்ஞானி அதிக நம்பிக்கை கொண்டிருந்தார் .1933 ல் குவாண்டம் இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் கிரபிடான்-புளூரின் மூலக்கூறு நிலையாக இருக்க வேண்டும் என்று நிறுவினார் .1966 ல் நீல் பார்ட்லெட் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி KrF4 என்ற குறியீடும் கிரபிடான் புளூரைடு என்ற பெயரும் கொண்ட கூட்டுப் பொருளை உண்டாக்கிக் காட்டினார் .இரு வளிமங்களின் கலவை வழியாக மின்னிறக்கம் செய்து இதைப் பெறமுடியும் என்றாலும் எந்த வீதத்தில் உருவானதோ அதே வேகத்தில் சிதைந்து தனி வளிமங்களாகப் பிரிந்து விடுகின்றது .ஆனால் கொள் கலனைக் குளிர் நிலைத் தொட்டியில் முக்கி வைத்திருந்தால் ,கிரபிடான் புளூரைடு கொள் கலனின் சுவரில் படிகின்றது .இதே போல கிரபிடான் டை புளூரைடையும் உருவாக்கலாம் .கிரபிடான் புளூரைடு நிறமற்ற படிகமானது .அறை வெப்ப நிலையில் இது கிரபிடானாகவும் ,புளூரினாகவும் பகுக்கப் படுகின்றது .வறண்ட பனியின் - 78 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இது நீண்ட நேரத்திற்கு நிலையாக இருக்கின்றது .

பயன்கள்

கிரபிடான் உமிழும் வண்ணஒளி விமானம் தரையிறங்கும் தளங்களில் வழிகாட்டியாகப் பயன்படுத்தப் படுகின்றது .பிற மந்த வளிமங்களை இதனுடன் தகுந்த விகிதத்தில் கலந்து தேவையான நிறம் மற்றும் ஒளிப்பொலிவைப் பெறுகின்றார்கள். கிரபிடான் -86 உமிழும் ஆரஞ்சு-சிவப்பு ஒளியின் அலைநீளம் 1 மீட்டர் நீளத்திற்கான படித்தர அலகில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது .பிளாட்டினத் தண்டின் இரு கீறல்களுக்கிடையே உள்ள இடைவெளித் தொலைவை ஒரு மீட்டர் என்று குறிப்பிட்ட காலம் மறைந்து போனது. இப்பொழுது 1 மீட்டர் என்பது கிரிபிடான்-86 உமிழும் ஆரஞ்சு-சிவப்பு ஒளியின் 1,650,763.73 (வெற்றிடத்தில்) அலைநீளங்களாகும்.

திண்ம கிரபிடான் முகமைய கனச் சதுரக் கட்டமைப்புடன் கூடிய வெண்ணிறப் படிகமாகும்.இது பிற மந்த வளிமங்களைப் போன்றே உள்ளது எனலாம்.குழல் விளக்குகளில் தாழ்ந்த அழுத்தத்தில் ஆர்கானுடன் சேர்த்து கிரபிடானையும் நிரப்புவார்கள் விரை வேக நிழல்படம் எடுக்கும் முறைக்கான ஒளி விளக்குகளிலும் இது பயன்படுகின்றது .

No comments:

Post a Comment