Thursday, April 4, 2013

creative thoughts


இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளை நன்னடத்தையுடன் வளர்ப்பது சாத்தியமா?

இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளை நன்னடத்தையுடன் வளர்ப்பது சாத்தியமா?.  சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பும் தலைப்பில் அவநம்பிக்கை கொண்ட மனதின் ஏக்கம் வெளிப்பட்டுத் தெரிகின்றது.கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் இக் கட்டுரைத் தலைப்பிற்குள்ளேயே பிரச்சனைக்குரிய தீர்வும் இருப்பது தெரியவரும். எதிர்மறையான எண்ணங்கள் மிகுதியாக உள்ளுக்குள் ஒலிக்கும் போது அவநம்பிக்கைகள் தங்களை இப்படித்தான் வெளிப்படுத்திக் கொள்ளும். நாம் நம் முன்னோர்களால் நன்னடத்தையுடன் வளர்க்கப்பட்டோம் என்பது உண்மையானால் நம்மால் நம் குழந்தைகளை அதுபோல ஏன் வளர்க்க முடியாது? ஒரு காலத்தில் சாத்தியப்பட்டது ,இப்பொழுது முடியவில்லை என்றால் நாம் நாகரிக வளர்ச்சியில் எங்கோ தடம் புரண்டுவிட்டோம் என்பதுதான் நிஜம். அதைச் சரி செய்ய வேண்டுமானால் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுதல் அவசியம் .குழந்தைகள் மட்டுமில்லை,நாமும்தான் .புரிதல் இல்லாத வாழ்க்கை நடுக்கடலில் துடுப்பில்லாத படகில் பயணிப்பதைப் போன்றது.

ஆக்கமும் அழிவும்-இயற்கையில் எங்கும் எதிலும்

இயற்கையின் படைப்பில் எல்லாவற்றிலும் ஆக்கமும் அழிவும் இணைந்தே இருக்கின்றன.ஆக்கத்தில் அழிவும் இருக்கும் அழிவில் ஆக்கமும் இருக்கும்.அழிவில்லாத ஆக்கமும்,ஆக்கமில்லாத அழிவும் இல்லவேயில்லை .அதனால் அழிவைத் தவிர்த்து ஆக்கத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்வதை படைத்தவன் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டான்.அழிவை மட்டுமே பார்ப்பவனுக்கு ஆக்கம் தெரிவதில்லை .ஆக்கத்தை மட்டுமே அறிந்தவன் அழிவை உணர்வதில்லை. அழிவை ஒதுக்கிவிட்டு ஆக்கத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டவர்களால் மட்டுமே நாகரிக வளர்ச்சியில் தடுமாற்றமில்லாத ஒரு முன்னேற்றத்தைக் கொடுக்கமுடியும் .குழந்தைகள் படிப்பு போக மற்ற நேரங்களில் கணினியே கதியாகக் கிடக்கின்றார்கள் ,இன்டர்நெட் மூலம் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களைத்தான் அதிகம் தேடித் தெரிந்து கொள்கின்றார்கள் என்று சொல்லும்போது உண்மையில் குழந்தைகளை விடப் பெற்றோர்களையே அதிகம் குற்றஞ் சாட்டுவது போலிருக்கிறது.ஒரு விரலால் குழந்தைகளை குற்றஞ் சாட்டும்போது மூன்று விரல்கள் நம்மைக் குற்றஞ் சாட்டுவதை நாம் இன்னும் அறியாதிருக்கிறோம்

எங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கக்கூடாதா?

முதலில் நாம் நம் குழந்தைகளுக்காக ஒவ்வொருநாளும் கொஞ்ச நேரத்தை ஒதுக்கவேண்டும்.தொழில் முன்னேற்றத்தில் கொண்ட தீவிர ஈடுபாடு,வேலைப் பளு ,பொழுதுபோக்கில் கொண்ட மயக்கம், போன்ற பலவிதமான காரணங்களால் பல பெற்றோர்கள் இதில் பிழை செய்துவிடுகின்றார்கள் .ஒரு பெண் சிங்கம் தன் குட்டிகளுக்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கும் இயற்கை வாழ்கை முறையை “Animal planet” ல் கண்டு மனிதர்களே  குழந்தை வளர்ப்பில் தவறு செய்கின்றார்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்திருகின்றேன். பெற்றோர்களின் தொடர்பும் ,உறவாடலுமே ஒரு குழந்தையின் தனித்துவத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகளாக இருப்பதால் அதில் ஏற்படும் குறைவுகள் பின்னாளில் குறிப்பிடும்படியான பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமாகி விடுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள் தவறான வழிகளைத் தேர்வு செய்து அதில் நடைபோடத் தொடங்குவதற்கு முன்னர் நாம் விழித்துக் கொண்டு நல்வழியைக் காட்ட வேண்டும் .பெரும்பாலும் இந்த முயற்சி காலங்கடந்தே மேற்கொள்ளப்படுகின்றது .தவறான பழக்க வழக்கங்களுக்கு அறிமுகமான பின்பு அறிமுகமாகும் எந்த நல்ல பழக்கங்களும் குழந்தைகளால் உண்மையாகப் பின்பற்றப்படுவதேயில்லை. கட்டாயப் படுத்த நிலைமை இன்னும் மோசமாகும். குழந்தை வளர்ப்பில் “Prevention is always better than cure” எப்போதும் நலம் பயக்கும்.

ஓராண்டு காலம்,ஒரு சில ஆண்டுகள் காலம் என்றில்லாமல் குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி தனித்து வாழும் நம்பிக்கையைப் பெறும் காலம் வரை சமுதாய வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது .குழந்தைகளை நன்னடத்தையுடன் வளர்ப்பது சாத்தியமே. அதற்கு மாற்றம் குழந்தைகள் மனதில் மட்டுமில்லை,பெற்றோர்களின் எண்ணத்திலும் மலர வேண்டும் .

கசடற கற்க

நன்னடத்தை என்பது கல்வியைப் புரிதலுடன் கற்பதோடு தொடர்புடையதாக இருக்கின்றது .ஆனால் இன்றைக்கு முதல் மதிப்பெண் வாங்குவதற்கே கல்வி என்று குழந்தைகளைக் கல்வியோடு போராட விட்டுவிடுவதால் உண்மையான கல்வியும், கல்வியின் பயன்பாடும் கிடைப்பதில்லை.

தாகமெடுத்தால் ஒரு குவளைத் தண்ணீர் குடிக்கலாம் .குளத்து நீரையே யாராவது உறிஞ்சிக் குடிப்பார்களா ? கல்வியும் அப்படித்தான் .அது ஒரு கடல்.எது விருப்பமோ அதை மட்டும் நம் பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கான சுதந்திரம் கொடுப்பதில்லை என்பதோடு கல்வி என்று சொல்லி பாடங்களைத் தேவையில்லாமல் திணிப்பதும் நமது கல்வி முறையில் உள்ள  ஒரு குறைபாடாகும்.அதைக் கற்றுக் கொள்,இதைக் கற்றுக்கொள் என்று கல்வியைத் திணிக்கும் போக்கை பெற்றோர்கள் கைவிடவேண்டும்.ஒரு குழந்தை தன் இளமைக் காலத்தை இனிமையின்றிக் கழிப்பதற்கு பெற்றோர்களே காரணமாயிருக்கின்றார்கள்

மிருகங்களே ஒரு வழிகாட்டி

பொழுது போக்கிற்காக அதிக நேரத்தை செலவிட விரும்பும் இக்கால பெற்றோர்களுக்கு குழந்தைகளைக் கவனிக்க நேரமே கிடைப்பதில்லை முதலில் மூத்தவர்களிடம் ஒழுக்கமும் நன்னடத்தையும் பின்பற்றப் பட்டு வந்தால் அது மரபு வழியாகப் பின்வருவோரால் பின்பற்றப் படும் சாத்தியத்தைப் பெறும்.நன்னடத்தையுடன் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியமில்லை என்று இதை அப்படியே விட்டுவிடுவதற்கில்லை .ஏனெனில் இது வாழையடி வாழையாக வருங்காலச் சந்ததியினரைப் பாதிக்கக் கூடியதாக இருக்கின்றது. சமுதாயத்தையே சீரழித்து விடும்.

தாய் சிங்கம் தன் குட்டிகள் சுயமாக வாழக்கூடிய நிலையை எட்டும் வரை அவைகளுக்கு வாழக் கற்றுக் கொடுக்கின்றது .இனப்பெருக்கத்திற்குக் கூட அனுமதிப்பதில்லை .நாமும் அந்தச் சிங்கம் போல நம் குழந்தைகளின் தகுதிப் பாட்டை வளர்க்க முயலவேண்டும் .உண்மையான தகுதிப்பாடு இருக்குமானால் நேர்மையற்ற எண்ணங்களும் அணுகு முறைகளும் தலைதூக்குவதேயில்லை.நன்னடத்தையில் முரண்பாடுகள் வருவதற்கு வழியுமில்லை .

சுய மதிப்பு –கவனம் தேவை

குழந்தைகள் வளரும் போது தங்களுக்கென்று ஒரு சுய மதிப்பை உருவாக்கிக் கொள்கின்றன அதில் குறுக்கீடு இல்லாதவாறு நம்முடைய அணுகுமுறைகள் இருக்கும் வரை நல்ல பலனைத் தருகின்றன. சுய மதிப்பைப் பாதிக்கும் எந்தச் செயலும் அவர்களிடையே தீய நடத்தையைத் தூண்டிவிடுகின்றன.

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே. அவர்கள் நல்லவர்களாவதும் ,தீயவர்களாவதும் கற்றுக் கொண்டு வாழும் காலத்திலே என்பதால் ,குழந்தைப் பருவத்தைக் கவனித்துக்கொண்டால் அவர்களுடைய வாழ்க்கை முழுதும் நலமாக இருக்கும். இன்டர்நெட், தொலைக் காட்சி,கைபேசி போன்றவைகள் நற்பயனுக்காக உருவாக்கப்பட்டவை.அவற்றில் உள்ள தீமைகளை எடுத்துச் சொல்லி புரியவையுங்கள்.எதையும் மறைக்க மறைக்க அதில் நாட்டம் மிகுதியாகும். எதையும் கட்டாயப்படுத்தி செய்ய வைப்பதில் பலனில்லை .கட்டாயப் படுத்த வேண்டிய சூழலில் அதன் அவசியத்தைப் புரிய வைத்து விரும்பி ஏற்றுக் கொள்ளுமாறு செய்யவேண்டும்.

நம்முடைய வாழ்கையில் நிகழும் மாற்றங்கள் எல்லாம் தன்னிச்சையாக விளைபவை என்று எண்ணுவதற்கே பழக்கப்பட்டு விட்டதால் நிகழும் மாற்றங்களுக்கு நாம் ஒரு போதும் காரணமாக இருப்பதில்லை என்றே நினைக்கின்றோம்.ஆனால் அது உண்மையில்லை .பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட நாம் காரணமாக இருக்க முடியும் என்பதை முறையான குழந்தை வளர்ப்பின் மூலம்  ஒருவர் அறிந்து கொள்ள முடியும். நாம் செய்யும் தவறுகளுள் ஒன்று நம் கருத்துக்களையும், விருப்பங்களையும் குழந்தைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றோம். மறுக்கப்படும் போது திணித்து விடுகின்றோம். திணிக்கப்பட்டவை சிந்தையில் சீரணிக்கப்படுவதில்லை .அதனால் அவை  செயலாக மாறும்போது நிறம் மாறிப் போய்விடுகின்றன.தீய வழிகளைப் பின்பற்றிச் செல்லும் குழந்தைகளை மென்மையாகத் திருத்துவதைத் தவிர வேறொரு சிறந்த வழியில்லை.உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் எல்லோரும் இதைத்தான் சொன்னார்கள், செய்தார்கள் .

வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்

அறியாப் பருவத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் சில எண்ணங்கள் அறியும் பருவத்தில் செயல்களாக வெளிப்படுவதற்கு மூல காரணமாக இருக்கின்றன .பிற்பயக்கும் செயல்கள் நல்லனவாக இருக்க வேண்டுமானால் முன் தோன்றும் எண்ணங்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.அந்த வகையில் குழந்தைப் பருவம் முக்கியமாகின்றது

ஒவ்வொரு  குழந்தைக்குள்ளும் மகத்தான சக்தி உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றது .அதை அவர்கள் வெளிப்படுத்திக் காட்ட நாம் தான் அவர்களுக்குத் துணையாக நிற்கவேண்டும் .அதற்குத் தேவையான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.உற்சாகப் படுத்துங்கள், ஊக்க மூட்டுங்கள். அப்புறம் பாருங்கள் அவர்களிடம் ஏற்படும் மகத்தான மாற்றங்களை .

குழந்தைக்குப் பெற்றோர்களே முகம் பார்க்கும் கண்ணாடி

நாம் சரியாக இருந்தால் மற்றவர்களும் சரியாக இருப்பார்கள் .நாம் நம் கடமைகளைச் சரியாகச் செய்தால் எல்லாம் நல்லாவே நடக்கும் .நவ நாகரிக உலகில் நாம் நம் நேரந்தை முறையாகப் பங்கிட்டுச் செலவழிப்பதில்லை .கடமைகளை உல்லாசங்களுக்காகப் புறக்கணிக்கின்றோம் .இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்னடத்தையுடன் வளர்க்கும் பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றார்களா என்று குழந்தைகள் எதிர் கேள்வி எழுப்பினால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? சற்றே யோசித்துப் பார்பீர்களேயானால் இதைப் பற்றிய உண்மைகள் உங்களுக்கே புரியவரும்.

No comments:

Post a Comment